search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட தொழில் மைய பொதுமேலாளரின் கார் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு
    X
    தீ விபத்து ஏற்பட்ட காரின் முன் பகுதி எரிந்து சேதமடைந்துள்ளதை படத்தில்

    கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட தொழில் மைய பொதுமேலாளரின் கார் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு

    • காரை டிரைவர் தினேஷ் பார்க்கிங் பகுதியில் ஓரமாக நிறுத்த முயன்றார்.
    • தீ விபத்தால் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு நிலவியது.

    ஈரோடு:

    ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் இன்று ஆய்வுக்கூட்டம் நடந்தது. இதற்காக பல்வேறு துறையை சேர்ந்த அதிகாரிகள் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தனர்.

    இந்நிலையில் இந்த ஆய்வு கூட்டத்தில் பங்கேற்பதற்காக ஈரோடு சென்னிமலை ரோட்டில் உள்ள மாவட்ட தொழில் மையத்தின் பொதுமேலாளர் திருமுருகன் (45) தனது சொந்த காரில் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தார். காரை டிரைவர் தினேஷ் ஓட்டி வந்தார். கலெக்டர் அலுவலகத்திற்கு உள்ளே கார் வந்ததும் திருமுருகன் காரை விட்டு கீழே இறங்கி ஆய்வு கூட்டம் நடைபெறும் கூட்ட அரங்கிற்கு சென்று விட்டார்.

    பின்னர் காரை டிரைவர் தினேஷ் பார்க்கிங் பகுதியில் ஓரமாக நிறுத்த முயன்றார். அப்போது காரில் இருந்து புகை வருவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக காரை விட்டு கீழே இறங்கி என்ஜின் பகுதியை பார்த்தபோது திடீரென தீ மளமளவென கொழுந்து விட்டு எரியத் தொடங்கியது.

    இந்த தீ விபத்தால் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு நிலவியது. பின்னர் தினேஷ் தீயணைக்கும் கருவி எடுத்து தீயை அணைக்க முயன்றார். அதற்குள் கலெக்டர் அலுவலகத்தில் இருந்த மற்ற பணியாளர்கள் இதுகுறித்து ஈரோடு தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

    தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தண்ணீரை பீச்சி அடித்தனர். சுமார் அரை மணி நேரம் போராட்டத்திற்கு பிறகு தீ அணைக்கப்பட்டது. எனினும் இந்த விபத்தில் காரின் முன் பகுதி, என்ஜின், பேட்டரி முழுவதுமாக சேதமடைந்தது.

    நல்ல வேளையாக டிரைவர் தினேஷ் சுதாரித்து கொண்டு காரை விட்டு வெளியே வந்ததால் உயிரிழப்பு தவிர்க்கப்பட்டது. அதைப்போல் தீ விபத்து ஏற்பட்டதும் அருகிலிருந்த காரை மற்றவர்கள் வேகமாக எடுத்து சென்றதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

    இதுகுறித்து சூரம்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×