search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    மின்சார ரெயில்கள் குறைக்கப்பட்டதால் புறநகர் பயணிகள் கடும் அவதி
    X

    மின்சார ரெயில்கள் குறைக்கப்பட்டதால் புறநகர் பயணிகள் கடும் அவதி

    • கடந்த 4 நாட்களாக புறநகர் பகுதியில் இருந்து வரும் மக்கள் நெரிசலில் பயணிக்கின்ற நிலை ஏற்பட்டு உள்ளது.
    • கல்லூரி மாணவர்கள், அலுவலகங்களுக்கு செல்வோர் பல்வேறு சிரமங்களை சந்தித்து வருகின்றனர்.

    சென்னை:

    சென்னை பெருநகரத்தோடு புறநகர் மக்களை இணைக்கும் பாலமாக மின்சார ரெயில்கள் உள்ளன.

    சென்னையை ஒட்டிய காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் இருந்து தினமும் லட்சக்கணக்கான மக்கள் மின்சார ரெயில்கள் மூலம் சென்னைக்கு வந்து செல்கின்றனர்.

    தொழில், கூலி வேலை, அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணியாற்றுபவர்கள், பள்ளி, கல்லூரி மாணவர்களின் அன்றாட வாழ்க்கையின் ஒரு அங்கமாக மின்சார ரெயில் இடம்பெற்றுள்ளன.

    இந்த நிலையில் மின்சார ரெயில்களின் கால அட்டவணையை 14-ந்தேதி முதல் மாற்றி சென்னை கோட்டம் வெளியிட்டது. அதில் பல்வேறு ரெயில்களின் நேரம் மாற்றப்பட்டன. அதே நேரத்தில் 25-க்கும் மேற்பட்ட ரெயில் சேவை குறைக்கப்பட்டன. திருவள்ளூர்-ஆவடி இடையே 8 சேவையும், கடற்கரை-வேளச்சேரி பறக்கும் ரெயில் சேவை 9-ம், தாம்பரம்-செங்கல்பட்டு இடையே 9 சேவைகளும் ரத்து செய்யப்பட்டன.

    4 வழித்தடங்களில் இயக்கப்படும் மின்சார ரெயில்களில் சில மாற்றங்கள் செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டன. அதிகாலை முதல் நள்ளிரவு வரை ஓய்வு இல்லாமல் ஓடிக் கொண்டிருக்கும் மின்சார ரெயில் சேவை திடீரென குறைக்கப்பட்டதால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர்.

    கடந்த 4 நாட்களாக புறநகர் பகுதியில் இருந்து வரும் மக்கள் நெரிசலில் பயணிக்கின்ற நிலை ஏற்பட்டு உள்ளது. கல்லூரி மாணவர்கள், அலுவலகங்களுக்கு செல்வோர் பல்வேறு சிரமங்களை சந்தித்து வருகின்றனர். புறநகர் ரெயில் சேவையை குறைத்தது பயணிகள் இடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

    இதுகுறித்து பயணிகள் கூறியதாவது:-

    செங்கல்பட்டு, வேளச்சேரி மார்க்கத்தில் சில ரெயில்களின் சேவை குறைக்கப்பட்டுள்ளது. கும்மிடிப்பூண்டி, சூலூர்பேட்டை மார்க்கத்தில் ஏற்கனவே குறைவான சேவை இருப்பதால் அந்த மார்க்கத்தில் குறைக்கவில்லை. ரெயில் சேவையை குறைத்து உள்ளதால் பயணிகள் மிக மோசமான பாதிப்பை சந்திக்கும் நிலை ஏற்பட்டு உள்ளது.

    எனவே நிறுத்தப்பட்ட ரெயில் சேவையை மீண்டும் விட வேண்டும். திருவள்ளூர்-வேளச்சேரி மற்றும் திருவள்ளூர்-தாம்பரம் இடையே பஸ் பயணத்தை மேற்கொண்டால் அதிக போக்குவரத்து செலவை எதிர்கொள்ள வேண்டும். ஆதலால் இந்த மார்க்கத்தில் மின்சார ரெயில்களை அதிகப்படுத்தினால் உதவியாக இருக்கும்.

    அரக்கோணத்தில் இருந்து கடற்கரை நிலையம் வழியாக வேளச்சேரி சென்ற மின்சார ரெயில் நிறுத்தப்பட்டுள்ளது. அதற்கு பதிலாக கடற்கரை-வேளச்சேரி இடையே மட்டும் இயக்கப்படுகிறது.

    இதேபோல திருவள்ளூர்-மூர்மார்க்கெட் இடையே இயக்கப்படும் சேவையில் ஆவடி-மூர்மார்க்கெட், பட்டாபிராம் மிலிட்டரி சைடிங்-மூர்மார்க்கெட் இடையே நிறுத்தப்பட்டு உள்ளது.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    இது குறித்து பயணிகள் நலச்சங்க பிரதிநிதி சென்னை கோட்ட மேலாளரிடம் கொடுத்துள்ள கோரிக்கை மனுவில், "ரெயில்வே கால அட்டவணையில் புதிய ரெயில்கள் எதுவும் இடம்பெறவில்லை. கூடுதலாக சேவை வழங்கப்படவில்லை. மாறாக குறைத்திருப்பது பயணிகள் நலனில் அக்கறை இல்லாததை வெளிகாட்டுகிறது.

    கடற்கரையில் இருந்து அரக்கோணம் வரையிலான நள்ளிரவு சேவை நிறுத்தப்பட்டுள்ளது பெரும் ஏமாற்றத்தை கொடுத்து உள்ளது. எனவே கடற்கரை-அரக்கோணம் சேவையை மீண்டும் விட வேண்டும். இதில் ஏராளமான தொழிலாளர்கள் இரவு பணி முடிந்து வீடு திரும்ப வசதியாக இருந்தது.

    வில்லிவாக்கம், அம்பத்தூர் தொழிற்பேட்டை பகுதியில் இருந்து திருவள்ளூர், திருநின்றவூர் பகுதிக்கு செல்ல இது உதவியாக இருந்தது. அந்த நேரத்தில் பஸ் வசதி கிடையாது. மின்சார ரெயில் சேவை பயன் அளித்தது" என்று குறிப்பிட்டுள்ளார்.

    இதுகுறித்து ரெயில்வே அதிகாரிகள் கூறும்போது, "பயணிகள் பயன்பாட்டை கணக்கிட்டுதான் ரெயில் சேவை அதிகரிப்பது, குறைப்பது தீர்மானிக்கப்படும். 4 வழித்தடங்களில் மேற்கொள்ளப்பட்ட பயணிகள் ஆய்வு அறிக்கையின் அடிப்படையில் சேவை குறைக்கப்பட்டுள்ளது. இந்த வழித்தடங்களில் தண்டவாளங்கள் பராமரிப்பு பணி 2 மாதங்கள் நடைபெற உள்ளது. அவை முடிந்த பின் சேவை அதிகரிக்கப்படும்" என்றார்.

    இதற்கிடையில் மின்சார ரெயில்களில் பெண்கள் பெட்டியில் இரவு நேரத்தில் சமூக விரோதிகள் அவ்வப்போது அசம்பாவித செயல்களில் ஈடுபடுகின்றனர். இவற்றை தடுக்க ரெயில்வே பாதுகாப்பு படையை சேர்ந்த பெண் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அனைத்து மின்சார ரெயில்களுக்கும் தேவையான அளவு பெண் போலீசார் இல்லாததால் குற்றங்களை குறைக்க முடியவில்லை என்ற கருத்து போலீசார் மத்தியில் எழுந்துள்ளது.

    Next Story
    ×