search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    கள்ளக்குறிச்சி விவகாரம்-   கல்வி அலுவலர்களுடன் சிறப்பு அதிகாரி ஆலோசனை
    X

    கள்ளக்குறிச்சி விவகாரம்- கல்வி அலுவலர்களுடன் சிறப்பு அதிகாரி ஆலோசனை

    • வன்முறையில் ஈடுபட்டவர்கள் மீது 15க்கும் மேற்பட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
    • பள்ளியில் வன்முறையால் சேதமான பொருட்கள், சான்றிதழ்கள் குறித்தும் அவர் கேட்டறிந்தார்.

    ஆத்தூர்:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் கனியாமூரில் உள்ள தனியார் பள்ளியில் மாணவி ஸ்ரீமதி மர்மமாக இறந்தார், இதை கண்டித்து நடைபெற்ற போராட்டம் வன்முறையாக மாறிய சம்பவங்கள் நாடு பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளன. மாணவி மர்ம சாவு தொடர்பாக பள்ளி தாளாளர், 2 ஆசிரியைகள் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

    பள்ளி வாகனங்களுக்கு தீவைத்து வன்முறையில் ஈடுபட்டது தொடர்பாக இதுவரை 329 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். வன்முறையில் ஈடுபட்டவர்கள் மீது 15க்கும் மேற்பட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    வன்முறையால் பாதிக்கப்பட்ட பள்ளியில் சுமார் 3500 க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வந்தனர். வன்முறை காரணமாக இந்த பள்ளி இயல்பு நிலைக்குத் திரும்ப, 2 மாதங்களுக்கு மேல் ஆகும் போல தெரிகிறது. அதுவரை, குழந்தைகளின் படிப்பு பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.

    எல்.கே.ஜி. முதல் 12-ம் வகுப்பு படிக்கின்றவர்கள், படித்து முடித்தவர்களின் அசல், நகல் சான்றிதழ்கள் அனைத்தும் எரிந்து சேதமகியுள்ளன. அவற்றை கணக்கிட்டு புதிதாக வழங்குவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது. இதனிடையே அங்கு படித்துவந்த மாணவ-மாணவிகள் தொடர்ந்து கல்வி பயில்வதற்காக சிறப்பு அதிகாரியை அரசு நியமித்து உள்ளது. அதன்படி ஆத்தூர் கல்வி மாவட்ட அதிகாரி ராஜூ கூடுதல் பொறுப்பாக சின்னசேலம் பள்ளி குழந்தைகள் கல்விக்கான ஒருங்கிணைப்பாளராக நியமிக்கபப்ட்டு உள்ளார். இதை தொடர்ந்து இன்று சின்னசேலம் பள்ளிக்கு சென்ற அவர் அங்கு கல்வி அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். பள்ளியில் வன்முறையால் சேதமான பொருட்கள், சான்றிதழ்கள் குறித்தும் அவர் கேட்டறிந்தார்.

    வருகிற 24-ந்தேதி தமிழகம் முழுவதும் டி.என்.பி.எஸ்.சி. குரூப்-4 தேர்வு நடக்கிறது. இதையொட்டி சின்னசேலம் கனியாமூர் தனியார் பள்ளியிலும் தேர்வு மையம் அமைக்கப்பட்டிருந்தது. இங்கு 1200 பேர் தேர்வு எழுத இருந்தனர். இதற்கிடையே கலவரத்தில் பள்ளி கட்டிடம் சேதமடைந்ததால் அங்கு நடக்க இருந்த தேர்வை வேறு பள்ளிக்கு மாற்ற ஏற்பாடு செய்ய வேண்டும் என மாவட்ட கலெக்டர் டி.என்.பி.எஸ்.சி. சேர்மனுக்கு கடிதம் அனுப்பியிருந்தார். அதன்படி கனியாமூர் பள்ளியில் குரூப்-4 தேர்வு எழுத இருந்த 1200 தேர்வர்களுக்கும் அங்குள்ள ஏ.கே.டி. பள்ளியில் மையம் அமைக்கப்பட்டு அங்குள்ள 60 அறைகளில் அவர்கள் தேர்வு எழுத ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

    Next Story
    ×