search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    கர்ப்பிணி மனைவிக்காக நாவல் பழம் பறித்த இலங்கை அகதியை போதையில் சரமாரியாக தாக்கிய போலீஸ்காரர்
    X

    கர்ப்பிணி மனைவிக்காக நாவல் பழம் பறித்த இலங்கை அகதியை போதையில் சரமாரியாக தாக்கிய போலீஸ்காரர்

    • இலங்கை வவுனியா மாவட்டம் ஓமந்தை பகுதியைச் சேர்ந்த இந்திரகுமார் கோடீஸ்வரன், இவரது மனைவி கஸ்தூரி கர்ப்பிணியாக உள்ளார்.
    • கடந்த ஏப்ரல் மாதம் 14-ந் தேதி முகாமில் உள்ள இலங்கை தமிழர்களிடம் முதல்-அமைச்சரர் மு. க. ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் கலந்துரையாடினார்.

    ராமேசுவரம்:

    இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக வாழ்வாதாரத்தை இழந்த இலங்கை தமிழர்கள் பலர் தனுஷ்கோடிக்கு அகதிகளாக வந்த வண்ணம் உள்ளனர்.

    இலங்கை வவுனியா மாவட்டம் ஓமந்தை பகுதியைச் சேர்ந்த இந்திரகுமார் கோடீஸ்வரன் (வயது 27), இவரது மனைவி கஸ்தூரி கர்ப்பிணியாக உள்ளார். இவர்கள் கடந்த ஏப்ரல் மாதம் 10-ந் தேதி அகதிகளாக தனுஷ்கோடி வந்தனர். தொடர்ந்து உரிய விசாரணைக்கு பின் மண்டபம் முகாமில் தங்க வைக்கப்பட்டனர்.

    கடந்த ஏப்ரல் மாதம் 14-ந் தேதி முகாமில் உள்ள இலங்கை தமிழர்களிடம் முதல்-அமைச்சரர் மு. க. ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் கலந்துரையாடினார். அப்போது அவரிடம் பேசிய கஸ்தூரி, என் குழந்தை தமிழகத்தில் பிறக்க உள்ளது. இது எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது என தெரிவித்தார். அதற்கு முதல்-அமைச்சர், நீங்கள் குழந்தையை நல்லபடியாக பிரசவிக்க தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தார்.

    இந்த நிலையில் நேற்று தனது கர்ப்பிணி மனைவிக்கு இந்திரகுமார் மண்டபம் முகாமில் உள்ள நாவல் மரத்தில் பழங்களை பறித்துக் கொண்டிருந்தார். அப்போது அங்கு சீருடை அணியாமல் மது போதையில் வந்த போலீஸ்காரர் ஒருவர் இந்திரகுமாரிடம் தகராறு செய்ததாக தெரிகிறது.

    மேலும் அந்த போலீஸ்காரர், அவரை தகாத வார்த்தைகளால் பேசி சரமாரியாக தாக்கியுள்ளார். இதனை தடுக்க வந்த கர்ப்பிணியான கஸ்தூரியையும் அந்த போலீஸ்காரர் திட்டியுள்ளார்.

    சொந்த நாட்டை விட்டு தமிழகத்திற்கு வந்தால் மறுவாழ்வு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இருந்த அகதியிடம் போலீஸ்காரர் நடந்து கொண்ட விதம் இந்திர குமாருக்கு சங்கடத்தை ஏற்படுத்தியது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் முகாமில் உள்ள இலங்கை தமிழர்களுடன் தனித்துறை கலெக்டர் அலுவலகம் முன்பு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டார்.

    அவரை அதிகாரிகள் சமரசம் செய்து அனுப்பி வைத்தனர். இதைத் தொடர்ந்து இலங்கை அகதி‌ மீது குடிபோதையில் தாக்குதல் நடத்திய போலீஸ்காரர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இலங்கை தமிழர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×