search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    ஓரின சேர்க்கை உறவால் விபரீதம்- பெண் என்ஜினீயருடன் தான் எனக்கு இனி வாழ்க்கை: பெற்றோருடன் செல்ல மறுத்த தருமபுரி மாணவி
    X

    ஓரின சேர்க்கை உறவால் விபரீதம்- பெண் என்ஜினீயருடன் தான் எனக்கு இனி வாழ்க்கை: பெற்றோருடன் செல்ல மறுத்த தருமபுரி மாணவி

    • கல்லூரி மாணவியும் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் தனது லெஸ்பியன் ஜோடியான பெண் என்ஜினீயரை பார்க்க வந்தார்.
    • கவுன்சிலிங்கின் போது, அந்த பெண் என்ஜினீயர் திடீரென அங்குள்ள கழிப்பறையில் கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

    ஓரின சேர்க்கை கலாச்சாரத்துக்கு அங்கீகாரம் கொடுத்து இருந்தாலும் தமிழகத்தில் இந்த விவகாரம் பெரும்பாலும் இயற்கைக்கு மாறானதாகவே பார்க்கப்படுகிறது. மனிதர்களின் ஆறாவது விரலாக மாறிவிட்ட செல்போனும் இதற்கு ஒரு முக்கிய காரணமாக உள்ளதை மறுக்க முடியாது.

    செல்போனில் வரும் ஆண், பெண், ஓரின சேர்க்கை வீடியோக்கள் மற்றும் அதற்கான நட்பை வளர்க்கும் செயலிகள் இளைய தலைமுறை மாணவ-மாணவிகளை பாதை மாற செய்து விடுவதை தருமபுரியில் நடந்த சம்பவம் உணர்த்தியுள்ளது.

    தருமபுரி மாவட்டம், பென்னாகரம் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த 20 வயது கல்லூரி மாணவி ஒருவருக்கும் அவரது தோழியான பெண் என்ஜினீயருக்கும் ஏற்பட்ட ஓரின சேர்க்கை பழக்கம் கடந்த சில நாட்களாக பேசுபொருளாகி உள்ளதே இதற்கு சாட்சி.

    கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு மாணவி திடீரென மாயமாகி கோவையில் பெண் என்ஜினீயருடன் தங்கியிருந்தது தெரிந்து போலீசார் மீட்டு கோவையில் இருந்து பென்னாகரம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்துக்கு நேற்று முன்தினம் அழைத்து வந்தனர். அங்கு போலீசார் அவர்களுக்கு கவுன்சிலிங் கொடுத்தனர். கவுன்சிலிங்கின் போது, அந்த பெண் என்ஜினீயர் திடீரென அங்குள்ள கழிப்பறையில் கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இதையடுத்து பென்னாகரம் அரசு மருத்துவமனையில் அந்த பெண் என்ஜினீயர் சேர்க்கப்பட்டார். அவர் எங்களை பிரிக்க மாட்டோம் என்று கூறி அழைத்து வந்த போலீசார் தற்போது இருவரையும் பிரிந்து செல்லுமாறு மிரட்டி எழுதி வாங்கிவிட்டனர். எனவேதான் தற்கொலைக்கு முயன்றேன் என்று கூறினார்.

    இந்நிலையில் அந்த கல்லூரி மாணவியும் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் தனது லெஸ்பியன் ஜோடியான பெண் என்ஜினீயரை பார்க்க வந்தார். அப்போது அவர்கள் இருவரும் கட்டித்தழுவி ஒருவருக்கு ஒருவர் ஆறுதல் கூறிக்கொண்டனர். இதையடுத்து அந்த மாணவியை போலீசார் அங்கிருந்து மீண்டும் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர். இதனிடையே அந்த மாணவி பெற்றோருடன் செல்ல மறுத்து விட்டார். போலீசாரிடம் அவர் கூறுகையில் கடந்த 2 வருடங்களாக பழகிய நாங்கள் ஓரின சேர்க்கையாளர்களாக மாறி விட்டோம்.

    எங்களுக்கு இந்த வாழ்க்கை பிடித்து விட்டது. எனக்கு குடும்பம் என்றால் என் பெண் தோழி மட்டும்தான். வாழ்ந்தால் இனி அவருடன் தான் வாழ்வேன். பெற்றோருடன் செல்ல மாட்டேன் என்று உறுதியாக கூறி விட்டார். இதனால் அனைத்து மகளிர் போலீசார் செய்வதறியாது அந்த மாணவியை தருமபுரியில் உள்ள காப்பகத்தில் சேர்த்துள்ளனர்.

    இந்த மாணவிகள் விஷயத்தில் அவர்களை விட அவர்களின் பெற்றோருக்குதான் பெரும் பங்கு உள்ளது. மகனோ, மகளோ செல்போனில் நீண்ட நேரம் யாருடன் பேசுகிறார்கள்? என்ன பேசுகிறார்கள்? என்பதை கவனித்து அவர்களின் நடவடிக்கையில் ஏதேனும் மாறுபாடு தெரிந்தால் அதை உடனே கண்டித்து திருத்த வேண்டிய கடமை அவர்களுக்கும் உள்ளது. இல்லையேல் வடமாநிலங்களில் அடிக்கடி நடக்கும் இது போன்ற அதிர்ச்சி சம்பவங்கள் தமிழகத்திலும் தொடரும் அபாயம் உள்ளது.

    Next Story
    ×