search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    76 ஆண்டுகளாக மின்சார இணைப்புக்காக ஏங்கித்தவிக்கும் தனுஷ்கோடி பகுதி மக்கள்
    X
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    76 ஆண்டுகளாக மின்சார இணைப்புக்காக ஏங்கித்தவிக்கும் தனுஷ்கோடி பகுதி மக்கள்

    • சென்னையில் இருந்து தனுஷ்கோடிக்கு ரெயிலில் வரும் பயணிகள் கப்பல் மூலம் தலைமன்னார் சென்று மீண்டும் ரெயிலில் கொழும்பு வந்தடைவார்கள்.
    • குட்டி சிங்கப்பூர் என்று அழைக்கப்படும் அளவுக்கு தனுஷ்கோடி வளர்ச்சி பெற்றது.

    ராமேசுவரம்:

    ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரம் நான்கு புறமும் கடலால் சூழப்பட்ட ஒரு தீவாகும். இந்த தீவு பகுதி சுமார் 61.8 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்டது. ராமேசுவரம் தீவில் பாம்பன், தங்கச்சிமடம், ராமேசுவரம், தனுஷ்கோடி ஆகியவை அடங்கும். இதில் தென்னகத்து காசி என்று போற்றப்படும் கோவில் நகரமான ராமேசுவரத்தை விட தனுஷ்கோடி மிகவும் புகழ் பெற்றதாக திகழ்ந்தது.

    ஆங்கிலேயர் காலத்தில் இலங்கை தலைமன்னாருக்கும், தனுஷ்கோடிக்கும் இடையே வணிக தொடர்பு ஏற்படுத்தப்பட்டது. எனவே தான் தலைமன்னாரில் இருந்து பாம்பனுக்கு கப்பல் போக்குவரத்து தொடங்கி நடைபெற்றது. இதையடுத்து ராமேசுவரம் தீவை மண்டபம் நிலப்பகுதியுடன் இணைக்கும் வகையில் 1914-ம் ஆண்டு பாம்பன் ரெயில் பாலம் திறக்கப்பட்டது. அதன் பிறகு ராமேசுவரம் தீவின் ஆன்மீக தலமாகி போக்குவரத்து வசதிகளைப் பெற்றது.

    பாம்பனில் இருந்து 18 மைல் தொலைவிலும், ராமேசுவரத்திலிருந்து 12 மைல் தொலைவிலும் வளைந்த வடிவில் ராமேசுவரம் தீவின் தெற்கு முனையில் தனுஷ்கோடி அமைந்துள்ளது. இயற்கை துறைமுகமான தனுஷ்கோடியில் கப்பல் துறைமுகம் திறக்கப்பட்டு சென்னை-கொழும்பு இடையே போட்மெயில் ரெயில் சேவையும் தொடங்கப்பட்டது.

    சென்னையில் இருந்து தனுஷ்கோடிக்கு ரெயிலில் வரும் பயணிகள் கப்பல் மூலம் தலைமன்னார் சென்று மீண்டும் ரெயிலில் கொழும்பு வந்தடைவார்கள். புகழ்பெற்ற தனுஷ்கோடி திறந்த பிறகு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த இடமாக மாறியது. கப்பல் போக்குவரத்து தொடங்கி, தனுஷ் கோடி துறைமுகம் சிறப்பாக செயல்பட்டதால், அதுவரை மின்சாரம் இல்லாத ராமேசுவரம் தீவுக்கு மின்சாரம் மிகவும் அவசியமானது. இதையடுத்து ராமேசுவரம் கோவிலுக்கும், தனுஷ்கோடி துறைமுகத்துக்கும் ராட்சத ஜெனரேட்டர்கள் மூலம் மின்சாரம் வழங்கப்பட்டது.

    அதன்பிறகு, 1922-ல், ஜெர்மனியில் இருந்து கொண்டு வரப்பட்ட இரும்புத் தூண்கள், மண்டபம் மற்றும் பாம்பன் இடையே கடலில் உள்ள ரெயில்வே பாலத்தின் அருகே நிறுவப்பட்டு, ராமேசுவரத்திற்கு மின்சாரம் வழங்கப்பட்டது. இருப்பினும், தனுஷ்கோடி கடலுக்கு அருகில் உள்ளதாலும், அப்பகுதியில் வீசும் காற்றின் வேகத்தைக் கருத்தில் கொண்டும் மின்சாரம் வழங்கப்படவில்லை.

    இந்தியா-இலங்கை இடையே கப்பல் மற்றும் ரெயில் போக்குவரத்தால் குட்டி சிங்கப்பூர் என்று அழைக்கப்படும் அளவுக்கு தனுஷ்கோடி வளர்ச்சி பெற்றது. 1964-ம் ஆண்டு டிசம்பர் 23-ந்தேதி வீசிய கடும் புயலால் தனுஷ்கோடி ஊருக்குள் கடல் புகுந்தது. கடல் அலையால் மூழ்கி அந்த பகுதியே முழுவதுமாக அழிந்தது.

    இதையடுத்து தனுஷ்கோடியை மனிதர்கள் வாழவும், வசிக்கவும் தகுதியற்றதாக அரசு அறிவித்தது. இங்கு வசித்த மக்கள் மாற்று இடங்கள் வழங்கப்பட்டு வெளியேற்றப்பட்டனர். அவ்வாறு வெளியேறியவர்கள் நடராஜபுரம், சேராங்கோட்டை, ராமகிருஷ்ணாபுரம் ஆகிய பகுதிகளில் குடியேறினர்.

    அவர்கள்தான் தற்போது தனுஷ்கோடிக்கு சென்று தொழில் செய்து வருகிறார்கள். காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை அங்கிருக்கும் அவர்கள் சுற்றுலா பயணிகளை நம்பி உள்ளனர். மீன்கள் வியாபாரம், சமைத்து கொடுப்பது, முத்து, சிப்பிகளால் கலைநயமிக்க பொருட்கள் விற்பனை என்று காலத்தை நகர்த்தி வருகிறார்கள்.

    இருப்பினும், பாரம்பரியமாக வாழ்ந்த இடத்தை மறக்க முடியாமல், புலம் பெயர்ந்து செல்ல முடியாமல், சாலை, குடிநீர், மின்சாரம், மருத்துவம் போன்ற அடிப்படைத் தேவைகள் ஏதுமின்றி இங்கு குடிசைகளில் தவிக்கும் மீனவர்கள் தங்கியுள்ளனர். இந்த கிராமத்தில் 650-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்தபோதிலும் மின்சாரம் இல்லாததால் மண்ணெண்ணெய் விளக்குகளுடன் இரவு பொழுதை கழிக்கிறார்கள்.

    அந்த பகுதியை சேர்ந்த நாட்டுப்படகுகளை பயன்படுத்தும் தனுஷ்கோடி கிராம மீனவர்கள் மின்சாரம் இல்லாததால், இருளில் வலையில் இருந்து மீன்களை எடுக்க முடியாமல், குளிர் சாதன பெட்டிகளில் வைத்து பாதுகாக்க முடியாமல் தவிக்கின்றனர். இந்நிலையில் சில தொண்டு நிறுவனங்கள் சில வீடுகளுக்கு சோலார் மின்சாரம் வழங்கியுள்ளன. ஆனால் காற்றில் மின்கம்பிகள் சேதமடைந்து பயனற்றுப் போய்விட்டது.

    பல்வேறு பேரூராட்சி தலைவர்களிடமும், முதல்வரிடம் மனு அளித்தும் இன்று வரை தனுஷ்கோடிக்கு மின்சாரம் வழங்கப்படவில்லை என்று குற்றச்சாட்டு தொடர்ந்து முன்வைக்கப்பட்டு வருகிறது. இதற்கான சாத்தியக்கூறுகள் பலமுறை ஆராயப்பட்டன. அதாவது ராமேசுவரம் நடராஜபுரம் பகுதியில் இருந்துதான் தனுஷ்கோடிக்கு மின்சாரம் கொண்டு செல்லவேண்டும் இதற்கு இடைப்பட்ட தூரம் சுமார் 25 கி.மீ. ஆகும்.

    ஆனால் தனுஷ்கோடி பகுதியில் அடிக்கடி ஏற்படும் கடல் அரிப்பு, சூறாவளிக்காற்று உள்ளிட்ட இயற்கை சீற்றங்களால் மின்சாரம் கொண்டு செல்வது சாத்தியமற்றதாக உள்ளது. 1964 புயலால் ரெயில் தண்டவாளம் சேதமடைந்து தனுஷ்கோடி அழிந்தபோது 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியானார்கள். தற்போது அங்கு சிதிலமடைந்த கிறிஸ்தவ தேவாலயமும், ஒரு சில கட்டிடங்களுமே மிஞ்சியிருக்கிறது.

    கடலின் நிலையில் அவ்வப்போது ஏற்படும் மாற்றங்கள், இயற்கை சீற்றங்கள், நவம்பர், டிசம்பர் மாதங்களில் கடல் அலைகள் ஊருக்குள்புகுவது, சாலைகள் மணலால் மூடப்படுவது போன்ற காரணங்களால் 76 ஆண்டுகளாக மின்சாரம் இல்லாமல் வாடும் தங்கள் கிராமத்திற்கு மின்சாரம் வழங்கவும், ஆண்டுக்கு 3 கோடி பேர் வரை வருகை தரும் தனுஷ்கோடியை மீண்டும் புத்துயிர் பெற செய்யவும் மத்திய, மாநில அரசுகள் முன்வரவேண்டும் என்ற நம்பிக்கையிலும், எதிர்பார்ப்பிலும் தனுஷ்கோடி பகுதியில் வசிக்கும் மக்கள் உள்ளனர்.

    இதற்கிடையே இலங்கை-தனுஷ்கோடி இடையேயான கடல் பகுதியை கண்காணிப்பதற்காக சமீபத்தில் கலங்கரை விளக்கம் ஒன்று திறக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×