search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    டி.ஜி.பி. சைலேந்திரபாபு காட்டிய அதிரடியால் சிக்கிய ஏ.டி.எம். கொள்ளையர்கள்
    X

    டி.ஜி.பி. சைலேந்திரபாபு காட்டிய அதிரடியால் சிக்கிய ஏ.டி.எம். கொள்ளையர்கள்

    • கொள்ளையர்கள் பற்றி துப்பு கிடைத்துள்ளது என்று ஐ.ஜி. கண்ணன் அவ்வப்போது தகவல் தெரிவித்துக்கொண்டே இருந்தார்.
    • வழக்கு விசாரணை விவரங்கள் அனைத்தும் வெளிப்படையாக தெரிவிக்கப்பட்டுக் கொண்டே இருந்தது.

    திருவண்ணாமலையில் 4 ஏ.டி.எம். மையங்களை குறி வைத்து அரியானா கொள்ளையர்கள் கைவரிசை காட்டிய சம்பவத்தில் டி.ஜி.பி. சைலேந்திரபாபு காட்டிய வேகம்... வடக்கு மண்டல ஐ.ஜி. கண்ணனின் வியூகம் ஆகியவை குற்றவாளிகளை உடனடியாக பிடிப்பதற்கு பேரூதவியாக இருந்துள்ளன.

    கடந்த 12-ந்தேதி அதிகாலையில் நடைபெற்ற கொள்ளை குறித்து காலையில்தான் போலீசுக்கு தெரியவந்தது. ஒரே நேரத்தில் 4 ஏ.டி.எம்.களை குறி வைத்து கைவரிசை காட்டிய கும்பல் கண்டிப்பாக தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் இல்லை என்கிற முடிவுக்கு போலீசார் உடனடியாக வந்து விட்டனர்.

    இது போன்று கொள்ளையடிப்பவர்கள் அரியானா மாநிலத்தை சேர்ந்தவர்களாகவே இருக்க முடியும் என்று யூகித்த ஐ.ஜி. கண்ணன் அடுத்த கட்ட நடவடிக்கைகளில் தீவிரம் காட்டினார். கொள்ளை சம்பவம் தொடர்பாக போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு அவ்வப்போது தகவல்களை கேட்டு... கேட்டு வெளிமாநில போலீஸ் டி.ஜி.பி.க்களை தொடர்பு கொண்டு உடனுக்குடன் பேசினார். இதன்படி குஜராத், அரியானா, கர்நாடகா, ஆந்திரா ஆகிய 4 மாநிலங்களுக்கும் தனிப்படை விரைந்தது.

    போலீஸ் சூப்பிரண்டு கிரண் ஸ்ருதி தடயவியல் தொடர்பான விசாரணையை தீவிரப்படுத்தினார்.

    இதில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது அரியானா கொள்ளை கும்பல் என்பதை உறுதிபடுத்திய ஐ.ஜி.கண்ணன் மற்றும் அதிகாரிகள் குற்றவாளிகளின் செல்போன் எண்கள் உள்ளிட்டவைகளை கண்டுபிடித்து பின் தொடர்ந்தனர். அரியானா மாநில போலீசாரின் உதவியையும் நாடினர்.

    சென்னையில் இருந்து திருவண்ணாமலைக்கு புறப்பட்டு சென்ற ஐ.ஜி. கண்ணன் குற்றவாளிகளை தனிப்படை போலீசார் நெருங்கும் வரையில் அங்கேயே முகாமிட்டு உத்தரவுகளை பிறப்பித்துக்கொண்டே இருந்தார். இதற்கு நல்ல பலன் கிடைத்தது.

    கொள்ளையர்கள் பற்றி துப்பு கிடைத்துள்ளது என்று ஐ.ஜி. கண்ணன் அவ்வப்போது தகவல் தெரிவித்துக்கொண்டே இருந்தார்.

    இதன் மூலம் வழக்கு விசாரணை விவரங்கள் அனைத்தும் வெளிப்படையாக தெரிவிக்கப்பட்டுக் கொண்டே இருந்தது. இப்படி சொல்லி அடித்தது போல ஏ.டி.எம். கொள்ளை வழக்கில் போலீசார் "கில்லி"யாக செயல்பட்டு சாதித்துக் காட்டி இருப்பது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×