என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    துப்பறியும் ஏஜென்சி மூலம் மனைவியை கண்காணித்த கணவர்: 2 பேர் கைது
    X

    துப்பறியும் ஏஜென்சி மூலம் மனைவியை கண்காணித்த கணவர்: 2 பேர் கைது

    • மோட்டார் சைக்கிளில் பின்தொடர்ந்து வந்த வாலிபர் இளம்பெண் வேலை பார்க்கும் நிறுவனம் அருகே நின்றிருந்தார்.
    • அதிர்ச்சியான இளம்பெண், தன்னுடன் வேலை பார்ப்பவர்களிடம் தகவலை தெரிவித்து வாலிபரை மடக்கி பிடித்தார்.

    கோவை:

    கோவை சுந்தராபுரம் அழகுநகரை சேர்ந்தவர் 32 வயது இளம்பெண்.

    இவர் கோவை சாய்பாபா காலனியில் உள்ள கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார்.

    இவருக்கு கடந்த 2015-ல் திருமணமானது. இந்த நிலையில் கணவன், மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக மனைவி தனது மகனுடன் பெற்றோர் வீட்டில் தனியாக வசித்து வந்தார்.

    சம்பவத்தன்று இளம்பெண் வீட்டில் இருந்து மொபட்டில் சாய்பாபா காலனியில் உள்ள நிறுவனத்திற்கு சென்றார்.

    அப்போது சாலையில் சென்று கொண்டிருந்த போது, அவரை பின்தொடர்ந்து வாலிபர் ஒருவர் மோட்டார் சைக்கிளில் வந்தார்.

    அதனை கண்டு கொள்ளாமல் இளம்பெண் நிறுவனத்திற்கு வேலைக்கு சென்று விட்டார். நிறுவனத்திற்கு உள்ளே சென்று விட்டு, சிறிது நேரம் கழித்து வெளியில் வந்தார்.

    அப்போது அவரை மோட்டார் சைக்கிளில் பின்தொடர்ந்து வந்த வாலிபர் இளம்பெண் வேலை பார்க்கும் நிறுவனம் அருகே நின்றிருந்தார்.

    இதனால் அதிர்ச்சியான இளம்பெண், தன்னுடன் வேலை பார்ப்பவர்களிடம் தகவலை தெரிவித்து, அந்த வாலிபரை மடக்கி பிடித்தார்.

    பின்னர் அவரிடம் யார், எதற்காக இளம்பெண்ணை தொடர்ந்து வந்தாய் என அங்கிருந்தவர்கள் வாலிபரிடம் விசாரித்தனர்.

    அதற்கு அவர், தான் துப்பறியும் நிறுவனத்தில் வேலை பார்ப்பதாகவும், தன்னுடைய முதலாளி உங்களை கண்காணிக்க சொன்னதாக கூறினார்.

    இதையடுத்து அந்த வாலிபரை அழைத்து கொண்டு இளம்பெண், துப்பறியும் நிறுவனத்திற்கு சென்றார். அங்கு இருந்த துப்பறியும் நிறுவனத்தின் உரிமையாளரிடம் நீங்கள் ஏன் என்னை கண்காணிக்க சொன்னீர்கள் என விசாரித்தார்.

    அதற்கு அவர், உங்கள் கணவர் தான் உங்களை கண்காணிக்க சொல்லி, உங்கள் குறித்த தகவல்களை சேகரிக்க சொன்னார். அதன் காரணமாகவே நாங்கள் கண்காணித்தோம் என்றனர்.

    இதை கேட்டதும் இளம்பெண் அதிர்ச்சியும், மனவேதனையும் அடைந்தார். உடனே அவர் நேராக சாய்பாபா போலீஸ் நிலையம் சென்று புகார் அளித்தார்.

    புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து துப்பறியும் நிறுவனத்தின் உரிமையாளர் மற்றும் அவரது பணியாளர் மற்றும் இளம்பெண்ணின் கணவர் ஆகியோரை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து விசாரித்தனர்.

    விசாரணையின் முடிவில் இளம்பெண்ணை பின்தொடர்ந்து கண்காணித்ததாக துப்பறியும் நிறுவனத்தின் உரிமையாளர் உள்பட 2 பேரை கைது செய்து ஜெயிலில் அடைத்தனர். கணவரை கண்டித்து அனுப்பி வைத்தனர்.

    Next Story
    ×