search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    கோபிசெட்டிபாளையம் அருகே ஆக்கிரமித்து கட்டப்பட்ட 4 வீடுகள் இடித்து அகற்றம்
    X

    கோபிசெட்டிபாளையம் அருகே ஆக்கிரமித்து கட்டப்பட்ட 4 வீடுகள் இடித்து அகற்றம்

    • 4 வீடுகள் நீர்வள ஆதாரத்துறைக்கு சொந்தமான இடத்தில் ஆக்கிரமித்து கட்டப்பட்டு இருந்தது.
    • வருவாய்த்துறை அதிகாரிகள் தொடர்ந்து ஆக்கிரமிப்பு நிலங்களை மீட்டு வருகின்றனர்.

    கோபி:

    கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள வேட்டைகாரன் கோவில் வாய்க்கால் மேடு பகுதியில் கீழ்பவானி வாய்க்கால் நீர்வள ஆதாரத்துறைக்கு சொந்தமான 2 ஏக்கர் நிலம் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு இருந்தது.

    அதேபோன்று அதன் அருகிலேயே 50 ஆண்டுகளுக்கும் மேலாக 4 வீடுகள் நீர்வள ஆதாரத்துறைக்கு சொந்தமான இடத்தில் ஆக்கிரமித்து கட்டப்பட்டு இருந்தது. ஆக்கிரமிப்பில் உள்ள வீடுகளை காலி செய்வதோடு, 2 ஏக்கர் நிலத்தை மீட்கவும் கடந்த சில ஆண்டுகளாக நீர்வள ஆதாரத்துறை அதிகாரிகள் கடுமையான முயற்சி எடுத்து வந்தனர்.

    இந்நிலையில் நீர்வழி நிலத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நீதிமன்றம் உத்தரவிட்டதை தொடர்ந்து, வருவாய்த்துறையினர் உதவியுடன் நிலம் அளவீடு செய்யப்பட்டு ஆக்கிரமிப்பாளர்களுக்கு கால அவகாசம் அளிக்கப்பட்டது.

    வீடுகளை காலி செய்து கொள்ள பல முறை நோட்டீஸ் அனுப்பியும், வீடுகளை காலி செய்து கொள்ள முன்வராத நிலையில் கோபி தாசில்தார் உத்தரசாமி முன்னிலையில் நீர்வள ஆதாரத்துறை அதிகாரிகள் போலீசார் பாதுகாப்புடன் 4 வீடுகளிலும் இருந்த பொருட்களை வெளியேற்றி விட்டு, மின் இணைப்பை துண்டித்து விட்டு பொக்லைன் எந்திரம் உதவியுடன் 4 வீடுகளையும் இடித்து அகற்றினர்.

    அதே போன்று 2 ஏக்கர் நிலத்தையும் அளவீடு செய்து, அங்கும் பொக்லைன் மூலமாக ஆக்கிரமிப்புகளை அகற்றி நிலத்தை மீட்டனர். மேலும் கோபி பகுதியில் நீர்வள ஆதாரத்துறை அதிகாரிகள், வருவாய்த்துறை அதிகாரிகள் தொடர்ந்து ஆக்கிரமிப்பு நிலங்களை மீட்டு வருகின்றனர்.

    Next Story
    ×