என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

சூறாவளி காற்று எச்சரிக்கை- ராமநாதபுரம் மாவட்ட மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை
- தமிழகத்தில் கடந்த மாத இறுதியில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது.
- தமிழகத்தில் நாளை முதல் மீண்டும் கனமழை பெய்யும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது.
ராமேசுவரம்:
தமிழகத்தில் கடந்த மாத இறுதியில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது. அதிலிருந்தே தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்ய தொடங்கியது. தென்மேற்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு காரணமாக கடந்த வாரம் தமிழகம் முழுவதும் பலத்த மழை பெய்தது.
இந்த நிலையில் தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் நாளை முதல் மீண்டும் கனமழை பெய்யும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது.
அதுமட்டுமின்றி தெற்மேற்கு வங்கக்கடல், அதனை ஒட்டிய தென்கிழக்கு மற்றும் மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் இன்றும், நாளை (20-ந் தேதி) மற்றும் நாளை மறுதினம் தமிழக-புதுவை கடலோர பகுதிகள், இலங்கை கடலோர பகுதிகள், தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் ஆகிய பகுதிகளிலும், 22-ந் தேதி தமிழக மற்றும் தெற்கு ஆந்திர கடலோர பகுதிகளிலும் சூறாவளி காற்று வீசும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதனால் இன்று முதல் 22-ந் தேதி வரை மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என மீனவர்களுக்கு எச்சரிக்கையும் விடுத்துள்ளது. இதன் காரணமாக தமிழக மீனவர்கள் இன்று முதல் கடலுக்கு செல்ல வேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டத்திலும் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மறு உத்தரவு வரும் வரை யாரும் கடலுக்கு செல்ல அனுமதி இல்லை என்று மீன்வளத்துறை தெரிவித்துள்ளது.
இதையடுத்து ராமநாதபுரம் மாவட்ட மீனவர்களுக்கு கடலுக்கு செல்வதற்கான அனுமதிச்சீட்டு இன்று வழங்கப்படவில்லை. ராமேசுவரம், பாம்பன், மண்டபம் பகுதியை சே்ாந்த 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் இன்று கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.
இதனால் பாம்பன் பகுதியில் 1,500 விசைப்படகுகள் மற்றும் சுமார் 2 ஆயிரம் நாட்டுப்படகுகள் கரைகளில் பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டன. மீன்பிடிக்க செல்லாததன் காரணமாக நாளொன்றுக்கு ரூ.2 கோடி முதல் ரூ.3 கோடி வரை வருவாய் இழப்பு ஏற்படும் என்று ராமேசுவரம் மீனவர்கள் தெரிவித்தனர்.






