search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    குன்னூரில் நடுரோட்டில் ஆக்ரோஷமாக மோதிகொண்ட காட்டெருமைகள்- வனத்துறை வாகனத்தை துரத்தியதால் பரபரப்பு
    X

    குன்னூரில் நடுரோட்டில் ஆக்ரோஷமாக மோதிகொண்ட காட்டெருமைகள்- வனத்துறை வாகனத்தை துரத்தியதால் பரபரப்பு

    • காட்டெருமைகள் சில நேரங்களில் மனிதர்களை தாக்கும் சம்பவங்களும் நடந்து வருகிறது.
    • 2 மணி நேர போராட்டத்திற்கு பிறகு காட்டெருமைகள், அருகேயுள்ள வனப்பகுதிக்குள் திரும்பி சென்றன.

    அருவங்காடு:

    நீலகிரி மாவட்டம் குன்னூர் சுற்று வட்டாரப்பகுதிகளில் சமீப காலமாக காட்டெருமை எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகிறது.

    அவை உணவு மற்றும் தண்ணீர் தேடி, குடியிருப்பு பகுதியில் சர்வ சாதாரணமாக உலா வருகின்றன. அப்படி உலா வரும் காட்டெருமைகள் சில நேரங்களில் மனிதர்களை தாக்கும் சம்பவங்களும் நடந்து வருகிறது.

    இதனால் பொதுமக்கள் மிகுந்த அச்சத்துடனேயே வெளியில் சென்று வருகிறார்கள்.

    குன்னூரில் இருந்து கரோலினா கிராமத்திற்கு ஒரு சாலை செல்கிறது. அந்த சாலையில் நேற்று மாலை வழக்கம் போல வாகனங்கள் சென்று கொண்டிருந்தன.

    அப்போது வனத்தை விட்டு வெளியேறி 3 காட்டெருமைகள் ஊருக்குள் வந்தன. சாலையின் நடுவே நடந்து சென்ற காட்டெருமைகள் திடீரென ஒன்றுக்கொன்று மோதிக் கொண்டன.

    2 மணி நேரத்திற்கும் மேலாக காட்டெருமைகள் அங்கிருந்து நகராமல் ஆக்ரோஷத்துடன் சண்டையிட்டன. இதனால் அந்த வழியாக வந்த வாகனங்கள் அனைத்தும் சாலையில் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன.

    இதனால் பொது மக்களும், வாகன ஓட்டிகளும் மிகவும் அவதியடைந்தனர்.

    இதனை பார்த்த பொதுமக்கள் உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வனத்துறையினர் சாலையில் நின்று சண்டையிட்ட காட்டெருமைகளை அடர்ந்த வனத்திற்குள் விரட்டும் பணியில் ஈடுபட்டனர்.

    ஆனாலும் அவை தங்களுக்குள் ஆக்ரோஷமாக சண்டையிடுவதை நிறுத்தாமல் அங்கேயே நின்றன. மேலும் வனத்துறையினரின் வாகனத்தையும், அங்கு நின்றிருந்தவர்களையும் நோக்கி ஒரு காட்டெருமை ஓடி வந்து துரத்தியது.

    இதனால் அங்கிருந்தவர்கள் அலறி அடித்து ஒடி பாதுகாப்பான இடங்களில் தஞ்சம் அடைந்தனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    2 மணி நேர போராட்டத்திற்கு பிறகு காட்டெருமைகள், அருகேயுள்ள வனப்பகுதிக்குள் திரும்பி சென்றன. அதன்பிறகு அந்த பகுதியில் போக்குவரத்து இயல்புநிலைக்கு வந்தது.

    கொரோனா பாதிப்பை தொடர்ந்து கரோலினா கிராமத்துக்கு பஸ் போக்கு வரத்து நிறுத்தப்பட்டுவிட்டது. எனவே பொது மக்கள் மற்றும் மாணவ-மாணவிகள் நடந்தே சென்று வருகின்றனர். கரோலினா கிராமத்துக்கு மீண்டும் பஸ்களை இயக்குவதுடன், காட்டெருமைகளை வனத்துறையினர் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    Next Story
    ×