search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    போதையில் சிக்குபவர்கள் கேட்டுக்கொண்டால் 2-வது முறையும் பரிசோதனை செய்ய போலீசாருக்கு கமிஷனர் உத்தரவு
    X

    போதையில் சிக்குபவர்கள் கேட்டுக்கொண்டால் 2-வது முறையும் பரிசோதனை செய்ய போலீசாருக்கு கமிஷனர் உத்தரவு

    • மதுப்பழக்கம் இல்லாதவரை குடிகாரனாக கருவி காட்டியது எப்படி? என்று பொதுமக்கள் மத்தியில் கேள்வி எழுந்தது.
    • 30 எம்.ஜி/100எம்.எல் என்ற அளவீடுக்கு குறைவாக காண்பிப்பவர்கள் மீது வழக்கு எதுவும் பதியப்படுவதில்லை.

    சென்னை:

    சென்னை ராயப்பேட்டையில் நேற்று முன்தினம் இரவு காரில் வந்த வாலிபர் ஒருவரை போலீசார் 'பிரெத் அனலைசர்' கருவி மூலம் அவர் மது குடித்து உள்ளாரா? என்று சோதனை செய்தனர்.

    அப்போது அந்த வாலிபர் 45 சதவீதம் மதுபோதையில் இருப்பதாக கருவி காட்டியது. இதனால் அபராதம் விதிப்பதாக போலீசார் தெரிவித்தனர். அதிர்ச்சி அடைந்த அந்த வாலிபர் தனக்கு மது குடிக்கும் பழக்கமே கிடையாது என்று போலீசாரிடம் கூறினார்.

    மேலும் மீண்டும் பரிசோதிக்க ஆஸ்பத்திரிக்கு வருமாறு போலீசாரை அழைத்தார். இதற்கு போலீசார் மறுப்பு தெரிவித்தனர். மேலும் மீண்டும் பரிசோதனை செய்ய முடியாது என்று கூறி வாக்குவாதம் செய்தனர்.

    இதனால் காரில் வந்த வாலிபருக்கும் போலீசாருக்கும் கடும் வார்த்தை மோதல் ஏற்பட்டது.

    இந்த வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் பரவி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. மதுப்பழக்கம் இல்லாதவரை குடிகாரனாக கருவி காட்டியது எப்படி? என்று பொதுமக்கள் மத்தியில் கேள்வி எழுந்தது.

    இந்த நிலையில் போலீசார் சோதனையில் ஈடுபடும்போது போதையில் சிக்குபவர்கள் கேட்டுக்கொண்டால் 2-வது முறையாகவும் பரிசோதனை செய்ய வேண்டும் என்று போலீசாருக்கு கமிஷனர் சங்கர்ஜிவால் உத்தரவிட்டு உள்ளார்.

    இது தொடர்பாக போலீஸ் கமிஷனர் சங்கர்ஜிவால் பிறப்பித்துள்ள உத்தரவில் கூறி இருப்பதாவது:-

    சென்னை பெருநகர காவல்துறையின் சட்டம், ஒழுங்கு மற்றும் போக்குவரத்து காவல்துறையினர் தினசரி வாகனத் தணிக்கை மேற்கொண்டு, மது போதையில் வாகனம் ஓட்டுபவர்களை பிரெத் அனலைசர் என்னும் சுவாசம் அறியும் கருவி மூலம் வாகன ஓட்டிகளிடம் சோதனைகள் மேற்கொண்டு, மதுபோதையில் வாகனம் ஓட்டியவர்களை கண்டுபிடித்து, வாகனத்தை பறிமுதல் செய்து அபராதம் விதித்து வருகின்றனர்.

    இந்தசோதனையின் போது இக்கருவியில் 30எம்.ஜி/100எம்.எல்-க்கு மேல் அளவீடு காண்பிக்கும் வாகன ஓட்டிகள் மீது மதுபோதையில் வாகனம் ஓட்டியது தொடர்பாக மோட்டார் வாகன சட்டப்படி வழக்கு பதிவு செய்து, அபராதம் விதித்து அவர்கள் ஓட்டி வந்த வாகனம் தற்காலிகமாக பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது.

    இதனால் மது போதையில் வாகனம் ஓட்டுபவர்கள் தாமாக விபத்து ஏற்படுத்திக் கொள்ளாமலும், மற்றவர்கள் மீது மோதி விபத்து ஏற்படுத்திடாமலும், தடுக்கப்பட்டு மனித உயிர்களும் உடல் பாதிக்கப்படாமலும் பாதுகாக்கப்பட்டு வருகிறது.

    30 எம்.ஜி/100எம்.எல் என்ற அளவீடுக்கு குறைவாக காண்பிப்பவர்கள் மீது வழக்கு எதுவும் பதியப்படுவதில்லை.

    எனவே போலீசாரின் சோதனையின்போது வாகன ஓட்டிகளுக்கு 30எம்.ஜி/100எம்.எல்-க்கு மேற்பட்ட அளவீடு காண்பித்தால், வாகன ஓட்டிகள் மீண்டும் ஒரு முறை இக்கருவியின் மூலம் பரிசோதனை செய்ய கேட்டுக்கொண்டால் காவல் குழுவினர் அந்த வாகன ஓட்டியை மீண்டும் பிரெத் அனலைசர் கருவி மூலம் சோதனை மேற்கொள்ள போக்குவரத்து காவல் உயர் அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. வாகன ஓட்டிகள் சந்தேகத்தின் பேரில் மீண்டும் சோதனை மேற்கோள்ள கேட்டுக்கொண்டால் மறுமுறையும் இக்கருவி மூலம் சோதனை செய்யப்பட வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    Next Story
    ×