search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    வணிக நிறுவனங்கள்- தொழிற்சாலைகளுக்கான மின் கட்டண உயர்வு அமலுக்கு வந்தது
    X

    வணிக நிறுவனங்கள்- தொழிற்சாலைகளுக்கான மின் கட்டண உயர்வு அமலுக்கு வந்தது

    • கட்டண உயர்வின் அளவை 4.7 சதவீதத்தில் இருந்து 2.18 சதவீதமாக அரசு குறைத்து உள்ளது.
    • வீட்டு இணைப்புகளுக்கு எந்தவித மின்கட்டண உயர்வும் இருக்காது.

    சென்னை:

    தமிழ்நாட்டில் மின்சார கட்டணத்தை ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 1 முதல் உயர்த்த கொள்கை அளவில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

    இதற்காக ஏப்ரல் மாதத்திற்கான நுகர்வோர் விலை குறியீட்டு எண்ணை முந்தைய ஆண்டின் ஏப்ரல் மாதத்தின் விலைக் குறியீட்டு எண்ணுடன் ஒப்பீடு செய்து, கணக்கிடப்படும் நுகர்வோர் பணவீக்க உயர்வு அல்லது 6 சதவீதம் இதில் எது குறைவோ அந்த அளவில் மின்கட்டண உயர்வை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பது விதியாகும்.

    இதன்படி இந்த மாதத்தை பொறுத்தவரையில் (ஜூலை) 2022 ஏப்ரல் மற்றும் 2023 ஏப்ரல் ஆகியவற்றின் நுகர்வோர் விலை குறியீட்டு எண்களின்படி கணக்கிட்டால் 4.7 சதவீதம் மின்கட்டணம் உயர்த்தப்பட வேண்டும்.

    ஆனால் கடந்த செப்டம்பர் மாதம்தான் மின்கட்டணம் உயர்த்தப்பட்டதால் கட்டண உயர்வின் அளவை 4.7 சதவீதத்தில் இருந்து 2.18 சதவீதமாக அரசு குறைத்து உள்ளது.

    ஆனாலும் இந்த கட்டண உயர்வில் இருந்து பொதுமக்களை பாதுகாக்கும் வகையில் வீட்டு இணைப்புகளுக்கு உயர்த்தப்பட வேண்டிய கட்டண உயர்வை அரசு ஏற்றுக்கொண்டு மின்வாரியத்துக்கு மானியமாக வழங்க ஒப்புக்கொண்டு உள்ளது.

    இதன் காரணமாக வீட்டு இணைப்புகளுக்கு எந்தவித மின்கட்டண உயர்வும் இருக்காது. இதேபோல் வேளாண் இணைப்புகள், குடிசை இணைப்புகள், வீடுகளுக்கு 100 யூனிட் இலவச மின்சாரம் கைத்தறி, விசைத்தறிகள் போன்றவற்றுக்கு அளிக்கப்பட்டு வரும் இலவச மின்சார சலுகைகள் தொடரும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

    ஆனால் அதே சமயத்தில் வணிகம் மற்றும் தொழில் அமைப்புகளுக்கு யூனிட் ஒன்றுக்கு 13 பைசா முதல் 21 பைசா வரை மிகக் குறைந்த அளவில் மின் கட்டணம் உயர்த்தப்பட்டு உள்ளது.

    இதன்படி வணிகம் மற்றும் தொழிற்சாலைகளுக்கு மின் உயர்வு இன்று முதல் அமுலுக்கு வந்து உள்ளது.

    Next Story
    ×