search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    தமிழ்நாட்டில் கூட்டுறவு சங்கங்களுக்கு ஏப்ரல் மாதம் தேர்தல்
    X

    தமிழ்நாட்டில் கூட்டுறவு சங்கங்களுக்கு ஏப்ரல் மாதம் தேர்தல்

    • கூட்டுறவு சங்கங்களின் விதிகளை திருத்தாமல் சங்க நிர்வாகிகளின் பதவி காலத்தை 5 ஆண்டாக வைத்து தேர்தல் நடத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
    • கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் சண்முகசுந்தரம் சென்னை மண்டல கூடுதல் பதிவாளருக்கும் அனைத்து மண்டல இணைப் பதிவாளர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

    சென்னை:

    தமிழ்நாட்டில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கூட்டுறவு சங்கங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்கள் உறுப்பினர்கள் பதவியில் உள்ளனர்.

    இவர்களின் பதவி காலத்தை 5 ஆண்டில் இருந்து 3 ஆண்டாக குறைத்து தமிழக சட்டசபையில் கடந்த ஜனவரி மாதம் மசோதா நிறைவேற்றப்பட்டு கவர்னர் ஆர்.என்.ரவியின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால் கவர்னர் ஒப்புதல் அளிக்கவில்லை.

    இந்த நிலையில் கூட்டுறவு சங்கங்களின் விதிகளை திருத்தாமல் சங்க நிர்வாகிகளின் பதவி காலத்தை 5 ஆண்டாக வைத்து தேர்தல் நடத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

    இதுகுறித்து கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் சண்முகசுந்தரம் சென்னை மண்டல கூடுதல் பதிவாளருக்கும் அனைத்து மண்டல இணைப் பதிவாளர்களுக்கும் அனுப்பி உள்ள சுற்றறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தமிழ்நாடு மாநில கூட்டுறவு சங்கங்களின் தேர்தல் ஆணையத்தின் கடிதத்தில் 2018 ஓட்டு மொத்த தேர்தல் முதற்கட்டத்தில் 18,468 தொடக்க கூட்டுறவு சங்கங்களுக்கான தேர்தல்கள் 12.3.2018 முதல் 11.8.2018 வரை நடைபெற்றன என்றும், அவற்றில் முதல் நிலையில் 3.4.2018 அன்று தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்டு 2.4.2023 அன்று 5 ஆண்டு பதவிக்காலம் முடிவடைய உள்ள 4,684 கூட்டுறவு சங்கங்களுக்கான தேர்தல்களை தற்போது தேர்தல் ஆணையம் நடத்த உத்தேசித்துள்ளது என்றும் கூறப்பட்டு உள்ளது.

    எனவே பதிவாளரின் கட்டுப்பாட்டில் உள்ள கூட்டுறவு சங்கங்களில் மேலே குறிப்பிட்டவாறு 5 ஆண்டு முடிவுறும் கூட்டுறவு சங்கங்கள், இவற்றுடன் சேர்த்து இதர வகையில் உள்ள ஏப்ரல் 2023-ல் தேர்தல் நடத்தக்கூடிய கூட்டுறவு சங்கங்கள் விவரங்களை அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது.

    எனவே மேற்படி விவரங்களை தமிழ்நாடு மாநில கூட்டுறவு சங்கங்களின் தேர்தல் ஆணையத்திற்கு அனுப்ப ஏதுவாக 5 ஆண்டு முடிவுறும் கூட்டுறவு சங்கங்கள் மற்றும் இதனுடன் சேர்த்து புதியதாக பதிவு செய்யப்பட்ட சங்கங்கள் மற்றும் இதர வகையில் ஏப்ரல் 2023-ல் தேர்தல் நடத்தக்கூடிய கூட்டுறவு சங்கங்களின் விவரங்களை சரகம் வாரியாக படிவத்தில் பூர்த்தி செய்து தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பி வைக்க ஏதுவாக இந்த அலுவலகத்திற்கு 28.12. 2022-க்குள் அனுப்பி வைக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×