search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    சி.எம்.டி.ஏ. சார்பில் கோயம்பேடு மார்க்கெட்டில் பொங்கல் சிறப்பு சந்தை- அமைச்சர் சேகர்பாபு தகவல்

    • கோயம்பேடு மார்க்கெட்டில் ஊழியர்கள் தங்க இட வசதி, கழிப்பறை, குடிநீர் போன்ற அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்படும்.
    • மார்க்கெட்டை சுற்றியுள்ள சாலையோர வியாபாரிகளை முறைப்படுத்த திட்டம் தயாரிக்கப்பட்டு விரைவில் வியாபாரி சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும்.

    சென்னை:

    கோயம்பேடு மார்க்கெட்டில் இன்று காலை அமைச்சர் சேகர்பாபு நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    பூ மார்க்கெட் வளாகத்தில் முதலில் ஆய்வு மேற்கொண்ட சேகர்பாபு பூ வியாபாரிகளிடம் குறைகளை கேட்டறிந்தார். பின்னர் மளிகை மார்க்கெட் தானிய கிடங்கு மற்றும் "ஏ" சாலையில் புதிதாக கட்டப்பட்டு உள்ள தொழிலாளர்கள் தங்கும் விடுதியையும் பார்வையிட்டார்.

    இதைத் தொடர்ந்து அமைச்சர் சேகர்பாபு நிருபர்களிடம் கூறியதாவது:-

    சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் சார்பில் (சி.எம்.டி.ஏ.) பொங்கல் சிறப்பு சந்தை கோயம்பேடு மார்க்கெட் பின்புறம் "ஏ" சாலையில் உள்ள வாகன நிறுத்தும் இடத்தில் சுமார் 3 ஏக்கர் பரப்பளவில் அமைய உள்ளது.

    கோயம்பேடு வணிக வளாகத்தை தரம் உயர்த்த ஒதுக்கப்பட்ட ரூ.20 கோடி நிதியை பயன்பாட்டிற்கு கொண்டு வருவது குறித்தும், ஓ.எஸ்.ஆர் எனப்படும் திறந்தவெளி நில பகுதியை பயன்பாட்டிற்கு கொண்டு வருவது குறித்தும் கோயம்பேடு மார்க்கெட் பகுதிக்கு அருகில் அமைந்துள்ள மியாவாகி காடுகளை மேம்படுத்தி மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வருவது குறித்தும் ஆய்வு செய்தோம்.

    கோயம்பேடு மார்க்கெட்டில் ஊழியர்கள் தங்க இட வசதி, கழிப்பறை, குடிநீர் போன்ற அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்படும், இடைதரகர்கள் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் நோக்கில், கோயம்பேடு அங்காடிக்கு மட்டும் தனி போலீஸ் நிலையம் அமைக்க முதலமைச்சரிடம் ஆலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும்.

    மார்க்கெட்டை சுற்றியுள்ள சாலையோர வியாபாரிகளை முறைப்படுத்த திட்டம் தயாரிக்கப்பட்டு விரைவில் வியாபாரி சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும். திருமழிசை மொத்த சந்தை பணிகள் முடியும் தருவாயில் உள்ளது. கோயம்பேட்டில் உள்ள கடைகளை அங்கு இடமாற்றம் செய்வது குறித்து, வியாபாரிகளுடன் கலந்தாலோசித்து முதல்வரின் கருத்துகளை கேட்டு, வியாபாரிகளுக்கு பாதிப்பு இல்லாத வகையில் நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ஆய்வின் போது அதிகாரிகள் அபூர்வா, அன்ஷூல் மிஸ்ரா, லட்சுமி, அங்காடி நிர்வாக குழு முதன்மை நிர்வாக அதிகாரி சாந்தி ஆகியோர் உடன் இருந்தனர்.

    Next Story
    ×