search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    சென்னை மெட்ரோ ரெயில் நிலையங்களில் கூடுதலாக சோலார் மின்உற்பத்தி பொருத்த முடிவு
    X

    சென்னை மெட்ரோ ரெயில் நிலையங்களில் கூடுதலாக சோலார் மின்உற்பத்தி பொருத்த முடிவு

    • மெட்ரோ ரெயில் நிலையத்தில் சோலார் மின்உற்பத்தி தொடர்பாக 2 டெண்டர்கள் விடப்பட்டு உள்ளன.
    • மெட்ரோ ரெயில் நிலைய மேற்கூரையில் சோலார் தகடுகள் பொருத்த உள்ளனர்.

    சென்னை:

    சென்னையில் தற்போது விம்கோ நகர் பணிமனை முதல் விமான நிலையம் வரையும், சென்னை சென்ட்ரல் முதல் பரங்கிமலை வரையும் மெட்ரோ ரெயில் இயக்கப்பட்டு வருகிறது.

    ரெயில் நிலையங்களுக்கு தேவையான மின்சாரம் தற்போது மின்சார வாரியத்திடம் இருந்து வாங்கப்பட்டு வருகிறது. மேலும், மெட்ரோ ரெயில் நிலையங்கள், பணிமனைகள், அலுவலக இடங்கள் என வாய்ப்புள்ள இடங்களில் சோலார் தகடுகள் அமைத்து மின் உற்பத்தி செய்தல் உள்ளிட்ட திட்டங்களை மெட்ரோ ரெயில் நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. இதன் மூலம் 6.4 மெகாவாட் அளவுக்கு சோலார் மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இவை முதல் கட்ட மெட்ரோ ரெயில் நிலையங்கள் மற்றும் முதல் கட்ட விரிவு இடங்களில் அமைக்கப்பட்டு உள்ளன.

    இந்த நிலையில் சென்னை மெட்ரோ நிர்வாகத்தினர் வரும் நாட்களில் மெட்ரோ ரெயில் நிலையங்களில் மேலும் சோலார் மின் உற்பத்தி தகடுகளை பொருத்தி மின்சார உற்பத்தியை அதிகரிக்க முடிவு செய்து உள்ளனர். இதற்காக மெட்ரோ ரெயில் நிலையங்களில் உள்ள வாகன நிறுத்தும் இடங்கள் மற்றும் மெட்ரோ ரெயில் நிலைய மேற்கூரையில் சோலார் தகடுகள் பொருத்த உள்ளனர். மேலும் வசதி உள்ள இடங்களை ஆய்வு செய்து உள்ளனர். இதற்கான திட்டங்கள் முழுவதும் தயார் செய்யப்பட்டு உள்ளது.

    இதற்கிடையே மெட்ரோ ரெயில் நிலையத்தில் சோலார் மின்உற்பத்தி தொடர்பாக 2 டெண்டர்கள் விடப்பட்டு உள்ளன. இவற்றில் ஒன்று ரெயில் நிலைய மேற்கூரையில் 5.74 மெகாவாட் மின்உற்பத்திக்கும், மற்றொன்று மெட்ரோ ரெயில் நிலையங்களின் வாகன நிறுத்துமிடங்களில் 3 மெகாவாட்டுக்கும் சோலார் மின் உற்பத்தி நிலையங்களை நிறுவுவதற்காக திட்டம் ஆகும். இது இறுதி செய்யப்பட்டதும் பணிகள் தொடங்கப்படும் என்று தெரிகிறது. ஏற்கனவே மெட்ரோ ரெயில் நிலையங்களில் பொருத்தப்பட்டு உள்ள சோலார் மின் உற்பத்தி மூலம் இதுவரை ரூ.6 கோடி வரை மின்கட்டணம் மிச்சமாகி உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

    இதுகுறித்து மெட்ரோ நிறுவன அதிகாரி ஒருவர் கூறும்போது, மெட்ரோ ரெயில் நிலையங்களில் உள்ள சோலார் மின் உற்பத்தியால் இதுவரை மின் கட்டணத்தில் சுமார் ரூ. 6 கோடியை சேமிக்க முடிந்தது. புதிய சோலார் மின் உற்பத்தி தகடுகளை எந்தெந்த இடங்களில் அமைக்கலாம், எந்த அளவு திறனில் அமைக்கலாம் என்று ஆய்வு செய்யப்பட்டு உள்ளது. இதனால் மின் உற்பத்தி திறன் அதிகரிக்கும் என்றார்.

    Next Story
    ×