என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    காந்தி தமிழகத்தில் பிறந்திருந்தால் ஜாதி சங்க தலைவராக மாற்றி இருப்பார்கள்: கவர்னர் ஆர்.என். ரவி பரபரப்பு பேச்சு
    X

    காந்தி தமிழகத்தில் பிறந்திருந்தால் ஜாதி சங்க தலைவராக மாற்றி இருப்பார்கள்: கவர்னர் ஆர்.என். ரவி பரபரப்பு பேச்சு

    • சுதந்திர போராட்ட வீரர்கள் தேசத்துக்காக மிக அதிகமாகவே உழைத்தவர்கள்.
    • நம் நாட்டின் சுதந்திரத்துக்காக தங்கள் உயிரை கொடுத்து ரத்தம் சிந்தியவர்களை மறக்க முடியாது.

    சென்னை:

    கவர்னர் ஆர்.என்.ரவி திருச்சி என்ஆர். ஐ.ஏ.எஸ். அகாடமியில் நேற்று நடைபெற்ற மருது சகோதரர்கள் நினைவு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

    விழாவில் அவர் பேசியதாவது:-

    நமது தேச விடுதலைக்காக அசாத்தியமான தியாகங்களை செய்த தமிழ்நாட்டின் மாபெரும் வீரமிக்க சுதந்திர போராட்ட வீரர்கள் மருது சகோதரர்கள்.

    தமிழ்நாட்டுக்கு நான் கவர்னராக வந்தபோது, மாநிலத்தைச் சேர்ந்த சுதந்திர போராட்ட வீரர்களை பற்றி அறிய விரும்பினேன். அந்த பட்டியலில் வெகு சிலரே இருந்தனர். சகோதரர்கள் போன்ற சிறந்த தேசிய சுதந்திர போராளிகள் பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை.

    "எத்தனையோ சுதந்திர போராட்ட வீரர்களின் பெயர்கள் இருந்த வீரம் நிறைந்த பூமியில் வெகு சில சுதந்திர போராளிகள் மட்டுமே இருந்தது எனக்கு ஏமாற்றம் அளித்தது.

    சுதந்திர போராட்ட வீரர்கள் தேசத்துக்காக மிக அதிகமாகவே உழைத்தவர்கள். அவர்களைப் பற்றிய எனது ஆய்வைத் தொடர்ந்தபோது, பாரதத்தின் விடுதலைக்காக உயிரைக் கொடுத்த பல ஆயிரம் சுதந்திர போராட்ட வீரர்கள் இருப்பதை அறிந்தேன். ஆங்கிலேயர்களுக்கு எதிரான கிளர்ச்சியின் மையமாக விளங்கிய சிவகங்கை மாவட்டத்தில், 2012-ம் ஆண்டில் நடந்த சட்டம்-ஒழுங்கு சீர்குலைவை காரணம் காட்டி, அக்டோபர் 23-ந்தேதி முதல் 31-ந்தேதி வரை கூட்டம் நடத்தக்கூடாது என சமீபத்தில் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    அதனால் மாவீரர்களையும் அவர்களின் தியாக தினங்களையும் கொண்டாடுவது தடைபடுகிறது. இத்தகைய நிகழ்வுகளைக் கொண்டாடினால் அவற்றால் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்துவிடக் கூடும் என்பதை அறிந்து நான் அதிர்ச்சியும் ஆத்திரமும் அடைந்தேன்.

    மாவட்ட நிர்வாகமும் அரசாங்கமும் பதற்றத்தைத் தீர்த்து கருத்து வேறுபாடு கொண்டவர்களை ஒன்றிணைத்து தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வை கொண்டாட வேண்டும். அதற்குப் பதிலாக, 11 ஆண்டுகளுக்குப் பின்பும் ஏதேனும் மோதல்கள் ஏற்படும் என எதிர்பார்த்து, மாவீரர்களை கொண்டாடுவதும், அவர்களின் தியாகங்கள் கொண்டாடப்படுவதும் தடை செய்யப்பட்டு உள்ளது.

    கடந்த காலங்களில் அரசியல் கட்சிகளோ அவற்றின் தலைவர்களோ தங்களின் ஆண்டு நிகழ்வுகளை கொண்டாடியபோது சட்டம்-ஒழுங்கு சம்பவம் நடந்திருந்தால், அடுத்தடுத்த ஆண்டுகளில் அக்கொண்டாட்டங்களை தடை செய்திருப்பார்களா? தேசிய சுதந்திர போராட்ட வீரர்கள் என்று வரும்போது மட்டும் மருது சகோதரர்கள் என்றும், தேச விடுதலைக்காகப் போராடிய நேதாஜியுடன் இணைந்து பணியாற்றியவருமான முத்துராமலிங்க தேவர் ஆகியோரின் கொண்டாட்டங்களுக்கு கட்டுப்பாடுகளும் விதிக்கப்படுகிறது.

    நாட்டின் சுதந்திரத்துக்காக போராடியவர்களாகவும், ஜாதிகளுக்கு இடையே பாகுபாடு காட்டாதவர்களாகவும் இருந்த தலைவர்கள் ஜாதிய தலைவர்களாக மாறியிருப்பது வேதனை அளிக்கிறது.

    இந்த தேச சுதந்திர தியாகிகளை, அரசாங்கம் கொண்டாடியிருக்குமானால், மக்கள் அதில் பங்கெடுத்திருப்பார்கள். அந்த நிகழ்வுகளை மக்களின் நினைவிலிருந்து அழிக்க அரசு முயற்சிப்பதால், பள்ளி பாட புத்தகங்களில் இருந்து அவர்களைப் பற்றிய தகவல்கள் நீக்கப்பட்டுள்ளன.

    அவர்களின் அடையாளமும் பங்களிப்புகளும் எப்போதாவது நடக்கும் ஆண்டு விழாக்களின் வடிவில் மட்டுமே கொண்டாடப்படுகின்றன. வெளிப்படையாக சொல்வதென்றால் அவை வாக்கு வங்கிக்காக நடக்கின்றன.

    ஆனால், அரசாங்கத்தாலும் அதிகாரத்தில் இருப்பவர்களாலும் அவர்களுக்கு உரிய அங்கீகாரம் கிடைக்காததால் அந்த தலைவர்களை மக்கள் மறக்கத் தொடங்கினாலும் வழி, வழியாக வந்த அவர்களின் சமூகத்தினரால் அவர்கள் மறக்கப்படுவதில்லை. அதுமட்டுமின்றி, ஜாதிய அடிப்படையில் இங்கே பிளவுபட்ட ஒரு சமூகம் மோசமான நிலையில் இருக்கிறது.

    "இந்தியாவில் எந்த மாநிலத்திலும் மாணவர்கள் ஜாதி அடையாளத்தைக் குறிக்கும் கயிறு அணிந்து பள்ளிக்குச் செல்வதை நான் கண்டதில்லை. ஜாதிகளின் அடிப்படையில் சமூகம் துண்டாடப்பட்டு, தேச சுதந்திர வீரர்கள், ஆட்சியில் இருப்பவர்களால் மறக்கப்பட்டபோது, அவர்கள் சார்ந்த ஜாதியைச் சேர்ந்தவர்கள் அந்த தலைவர்களை தங்களுக்கு மட்டுமே உரியவர்களாக சொந்தம் கொண்டாடிக் கொள்கின்றனர். இன்று நமது தேசிய தலைவர்கள் ஜாதி தலைவர்களாக சிறுமைப்படுத்தப்பட்டு விட்டதால், ஆங்காங்கே பதற்றம் ஏற்படுகிறது. அந்த தலைவர்களின் நினைவுகள் ஏன் அழிக்கப்பட்டன? ஏனென்றால், இங்கு தேசிய சுதந்திர போராட்டத்தைப் பற்றிப் பேசும்போது பயமாக இருக்கிறது.

    ஆட்சியில் இருப்பவர்கள் தேசிய சுதந்திர இயக்கம் மற்றும் தேசிய சுதந்திர வீரர்கள் பற்றி பேச வெட்கப்படுகிறார்கள். அவர்களைப் பற்றி பேசும் தருணத்தில், அவர்கள் (ஆட்சியில் உள்ளவர்கள்) தேசிய சுதந்திர இயக்கத்திற்கு எதிராக அக்காலத்தில் செயல்பட்டவர்கள் என்பதால் அவர்கள் அம்பலப்படுத்தப்படுகிறார்கள்.

    இதனாலேயே தேசிய இயக்கத்தை தோற்கடிக்க அவர்கள் ஆங்கிலேயர்களுடன் ஒத்துழைப்பாக இருந்தனர். இவை அனைத்தும் ஆவணத்தில் பதிவு செய்யப்பட்ட விஷயங்கள்.

    கடந்த ஆண்டு, கடந்த 2-ந்தேதி, மகாத்மா காந்தியின் பிறந்தநாளில், ஒரு சுவாரஸ்யமான விஷயம் நடந்தது: நான் மற்ற தலைவர்களுடன் மகாத்மா காந்திக்கு அஞ்சலி செலுத்தச் சென்றேன். பக்கத்தில், மகாத்மா காந்தி மற்றும் சுதந்திர போராட்ட வீரர்களின் பெரிய புகைப்பட கண்காட்சி இருந்தது. முழு கண்காட்சியிலும், திராவிட கருத்தியலை அடையாளப்படுத்தும் ஒரு புகைப்படம் ஒன்று கூட இருக்கவில்லை. அது அவர்களுக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தியது. இந்த ஆண்டு அக்டோபர் 2 ஆம் தேதி, அந்த நிகழ்வில் புகைப்பட கண்காட்சி தர்மசங்கடத்தைத் தரும் என்பதால் அது இல்லாமல் ஆக்கப்பட்டது.

    மருது சகோதரர்கள் ஜாதி தலைவர்களாக சிறுமைப்படுத்தப்படுவதைப் பார்க்கும் போது, மகாத்மா காந்தி, நேதாஜி சுபாஷ் சந்திர போஸ், சர்தார் படேல், பகத் சிங் போன்றவர்களும் தமிழ்நாட்டில் பிறந்திருந்தால் கூட அவர்களும் ஒரு ஜாதி தலைவர்களாகவே சுருங்க வைக்கப்பட்டிருப்பார்கள்.

    நம் நாட்டின் சுதந்திரத்துக்காக தங்கள் உயிரை கொடுத்து ரத்தம் சிந்தியவர்களை மறக்க முடியாது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    Next Story
    ×