search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    சென்னையில் பிச்சைக்காரர்கள் தொல்லை பல மடங்கு அதிகரிப்பு
    X

    சென்னையில் பிச்சைக்காரர்கள் தொல்லை பல மடங்கு அதிகரிப்பு

    • சென்னை மாநகர சாலைகளில் பிச்சை எடுப்பவர்களில் ஆந்திர மாநில கிராமப்புறங்களில் இருந்து வந்தவர்களே அதிக அளவில் காணப்படுகிறார்கள்.
    • கொரோனா காலத்துக்கு பிறகு பிச்சை எடுக்க வருபவர்கள் எண்ணிக்கை அதிகரித்திருப்பது தெரிய வந்துள்ளது.

    சென்னை:

    சென்னை மாநகரில் போக்குவரத்து சிக்னல்களில் கை குழந்தைகளுடன் பெண்கள் பிச்சை எடுப்பதும் பள்ளிக்கூடம் செல்லும் வயதில் சிறுவர் சிறுமிகள் பிச்சை எடுப்பதும் சமீப காலமாக அதிகரித்துள்ளது. பிச்சை எடுப்பதை தடுப்பதற்காக கடந்த 23 ஆண்டுகளுக்கு முன்பே பல்வேறு விதிமுறைகள் வகுக்கப்பட்ட போதிலும் பிச்சை எடுப்பது என்பது நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களிலும் தவிர்க்க முடியாததாகவே இருந்து வருகிறது.

    பிச்சைக்காரர்களை ஒழித்து பிச்சைக்காரர்களே இல்லாத மாநகராக சென்னை மாநகரை மாற்ற பல்வேறு நடவடிக்கைகள் தொடர்ந்து எடுக்கப்பட்டு வருகின்றன. ஆனால் இந்த நடவடிக்கைகளில் இருந்து வரும் சுணக்கம் மற்றும் தாமதம் காரணமாக தற்போது பிச்சைக்காரர்களின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்துள்ளது.

    சிங்காரச் சென்னையை பிச்சைக்காரர்களே இல்லாத மாநகரமாக மாற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் சென்னை மாநகரில் பிச்சைக்காரர்கள் தங்குவதற்காக விடுதிகள் ஏற்படுத்தப்பட்டு முகாம்களும் அமைக்கப்பட்டுள்ளன. முதலில் 15 தங்கும் விடுதிகள் மட்டுமே இருந்த நிலையில் தற்போது கிட்டத்தட்ட 200 வார்டிலுமே பிச்சைக்காரர்கள் மறுவாழ்வுக்காக தங்கும் விடுதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இதில் 9 பெண்கள் விடுதிகளும் 12 ஆண்கள் விடுதிகளும் உள்ளன. மொத்தமுள்ள 51 விடுதிகளில் மீதமுள்ளவை குழந்தைகளின் நலனுக்காக பேணப்பட்டு வருகிறது.

    இந்த விடுதிகள் தேசிய ஊரக வாழ்வாதார மிஷன் மூலமாகவும் சென்னை மாநகராட்சி மூலமாகவும் நடத்தப்பட்டு வருகிறது. 60 சதவீதம் நிதி பங்களிப்பை தேசிய ஊரக வாழ்வாதார மிஷனும் 40 சதவீத நிதி பங்களிப்பை மாநகராட்சியும் வழங்கி வருகின்றன.

    ஒரு விடுதிக்கு 13 லட்சம் என்ற வகையில் 51 விடுதிகளுக்கும் 6.68 கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டு வருகிறது. என்.ஜி.ஓ.க்கள் தன்னார்வலர்களும் இந்த விடுதியை நடத்துவதில் தங்களது பங்களிப்பை கொடுத்து வருகிறார்கள்.

    இந்த விடுதியில் மாநகராட்சி பணியாளர்கள் இருவர் பணியமர்த்தப்படுகிறார். ஆனால் இங்கு பணியமர்த்துபவர்களை நீண்ட நாட்களாகவே அங்கு பணியில் இருக்கச் செய்வதும் வேறு இடத்துக்கு பணி ஒதுக்காமல் இருப்பதும் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக அங்கு பணிபுரிபவர்கள் சோர்வுற்று காணப்படுவதாகவும் இந்த பணிக்கு மாநகராட்சி பணியாளர்களை மாற்றி மாற்றி பணியமர்த்த வேண்டும் என்கிற கோரிக்கையும் உள்ளது. மீண்டும் மறுவாழ்வு மையம் போன்ற செயல்படும் இந்த விடுதிகளை சரியாக பராமரித்து பிச்சைக்காரர்களை அங்கு முறைப்படி கொண்டு போய் சேர்ப்பதில்லை என்கிற குற்றச்சாட்டும் உள்ளது.

    அதே நேரத்தில் சாலைகளில் மீட்கப்படும் பிச்சைக்காரர்கள் இந்த விடுதியில் கொண்டு விட்டாலும் அங்கு அதிகாரிகள் ஆலோசனை கேட்டு அவர்கள் மனம் திருந்துவதில்லை. மீண்டும் பிச்சை எடுக்கவே சென்று விடுகிறார்கள். எனவே சாலைகளில் பிச்சை எடுப்பவர்களை முழுமையாக மாநகராட்சி நிர்வாகம் அப்புறப்படுத்தி அவர்களின் வாழ்வாதாரத்துக்கு தேவையான வசதிகளை மேற்கொள்ள வேண்டும் என்கிற கோரிக்கை நீண்ட நாட்களாகவே இருந்து வருகிறது.

    சென்னை மாநகரில் பிச்சைக்காரர்களின் தொல்லை பல மடங்கு அதிகரித்திருப்பதற்கு மாநகராட்சி அதிகாரிகளின் முறையற்ற விடுதி பராமரிப்பும் ஒரு காரணம் என்கிற குற்றச்சாட்டும் முன் வைக்கப்படுகிறது. சாலைகளில் பிச்சை எடுப்பவர்களை மாநகராட்சி அதிகாரிகள் எப்போதுமே கண்டு கொள்வதில்லை என்றும் குற்றச்சாட்டு முன் வைக்கப்படுகிறது.

    எனவே இனி வரும் காலங்களில் பிச்சைக்காரர்களை மீட்டு அவர்களுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுக்க வேண்டும் என்கிற கோரிக்கையும் வலுப்பெற்றுள்ளது.

    சென்னை மாநகர சாலைகளில் பிச்சை எடுப்பவர்களில் ஆந்திர மாநில கிராமப்புறங்களில் இருந்து வந்தவர்களே அதிக அளவில் காணப்படுகிறார்கள். கொரோனா காலத்துக்கு பிறகு பிச்சை எடுக்க வருபவர்கள் எண்ணிக்கை அதிகரித்திருப்பது தெரிய வந்துள்ளது. பிச்சைக்காரர்கள் இல்லாத மாநகராக சிங்கார சென்னையை மாற்றுவது மாநகராட்சி அதிகாரிகளின் கையிலேயே உள்ளது. அதனை அவர்கள் உடனடியாக மேற்கொள்ள வேண்டும்? என்பதே சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.

    Next Story
    ×