search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    மாடுபிடி வீரர்கள் காயம் அடைவதை தடுக்க காளைகளின் கொம்புகளில் ரப்பர் கவசங்கள்
    X

    மாடுபிடி வீரர்கள் காயம் அடைவதை தடுக்க காளைகளின் கொம்புகளில் ரப்பர் கவசங்கள்

    • தமிழகம் முழுவதும் சுமார் 350-க்கும் மேற்பட்ட இடங்களில் ஜல்லிக்கட்டு நடத்தப்படுகிறது.
    • அரசு வழிகாட்டுதல்படி 55 முதல் 60 காளைகள் வரை மட்டுமே ஜல்லிக்கட்டில் பங்கேற்க வேண்டும்.

    மதுரை:

    தமிழர்களின் பாரம்பரியம் மிக்க மரபு வழி விளையாட்டுக்களில் ஜல்லிக்கட்டும் ஒன்றாகும். ஏறு தழுவுதல், மஞ்சுவிரட்டு ஆகிய வரிசையில் நம்முடைய பண்பாட்டையும், வீரத்தையும் வெளிப்படுத்தும் வகையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இந்த ஜல்லிக்கட்டு போட்டிகள் வெகு விமரிசையாக நடத்தப்படுகிறது.

    மதுரை, புதுக்கோட்டை, தஞ்சாவூர் மாவட்டங்களில் அதிக அளவிலும், மற்ற மாவட்டங்களில் குறைவான அளவிலும் நடைபெறும் இந்த போட்டிகளைகாண உள்ளூர்வாசிகள் மட்டுமின்றி வெளிநாட்டினரும் வருகை தருகிறார்கள். அதன்படி தமிழகம் முழுவதும் சுமார் 350-க்கும் மேற்பட்ட இடங்களில் ஜல்லிக்கட்டு நடத்தப்படுகிறது.

    அதில் மதுரை மாவட்டம் அவனியாபுரம், பாலமேடு மற்றும் அலங்காநல்லூரில் நடத்தப்படும் ஜல்லிக்கட்டு பேரும், புகழும் வாய்ந்ததாகும். உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை காண சுற்றுலாத்துறை சார்பில் வெளிநாட்டு பயணிகள் அழைத்து வரப்பட்டு, அவர்களுக்கு தனி கேலரி வசதியும் ஏற்படுத்தி தரப்படுகிறது.

    பொங்கல் பண்டிகைக்கு இன்னும் 2 வாரங்களே உள்ள நிலையில், காளைகளுக்கு அதன் உரிமையாளர்கள் நீச்சல் பயிற்சி, மண்ணை குவித்து வைத்து அதில் முட்டி கொம்புகளை தீட்டுதல் உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகளை அளித்து வருகின்றனர். அதேபோல், மாடுபிடி வீரர்களும் காளைகளை அடக்க பயிற்சி மூலம் தயாராகி வருகிறார்கள்.

    இதற்கிடையே ஜல்லிக்கட்டு ஏற்பாடுகளை மறு ஆய்வு மேற்கொண்ட இந்திய விலங்குகள் நலவாரியம் கூட்ட நெரிசல், காயங்கள் மற்றும் உயிரிழப்புகளை தடுக்க ஆன்லைனில் பதிவு செய்யும் முறையை அறிமுகப்படுத்துமாறு வலியுறுத்தி உள்ளது. அரசு வழிகாட்டுதல்படி 55 முதல் 60 காளைகள் வரை மட்டுமே ஜல்லிக்கட்டில் பங்கேற்க வேண்டும்.

    ஆனால், அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரத்தில் நடைபெறும் ஜல்லிக்கட்டுகளில் 600-க்கும் மேற்பட்ட காளைகள் களம் இறக்கப்படுகிறது. இதில் கடந்த 2022-ல் நடந்த ஜல்லிக்கட்டில் 9 காளைகளும், 950 மாடுபிடி வீரர்களும் காயமடைந்தனர். தமிழகம் முழுவதும் நடந்த 350 ஜல்லிக்கட்டுகளில் மொத்தம் 8 ஆயிரம் பேர் காயம் அடைந்துள்ளனர்.

    இதற்கிடையே இந்த ஆண்டு நடைபெற இருக்கும் ஜல்லிக்கட்டு போட்டிக்கு முன்னேற்பாடாக உயிரிழப்புகள் ஏற்படாமல் தடுக்கவும், காயங்களை குறைக்கவும் காளைகளின் கொம்புகளில் ரப்பர் அல்லது பிளாஸ்டிக்கால் உருவாக்கப்பட்ட பாதுகாப்பு கவசம் (ஹார்ன்புஷ்) பொருத்த தமிழக அரசும், விலங்குகள் நலவாரியமும் ஆலோசித்து வருகிறது.

    மேலும் போட்டிகளை நடத்தும் விழா கமிட்டிகளுக்கு தமிழக அரசும், விலங்குகள் நலவாரியமும் வழிகாட்டுதல்களை வழங்கி இருப்பதோடு, இந்த பாதுகாப்பு கவசத்தை தயாரிக்க அறிவுறுத்தல்களும் வழங்கப்பட்டுள்ளன.

    அரசு சார்பில் நடத்தப்படும் தமிழகத்தின் முதல் ஜல்லிக்கட்டு போட்டி அவனியாபுரத்தில் 15-ந்தேதி பொங்கல் நாளில் நடைபெறுகிறது. 16-ந்தேதி பாலமேட்டிலும், 17-ந்தேதி அலங்காநல்லூரிலும் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடக்கிறது.

    Next Story
    ×