search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    விசாரணை குழு அமைத்து தீர்வு காண வேண்டும்- ஒப்பந்த நர்சுகள் சங்கத்தினர் பேட்டி
    X

    விசாரணை குழு அமைத்து தீர்வு காண வேண்டும்- ஒப்பந்த நர்சுகள் சங்கத்தினர் பேட்டி

    • கொரோனா தொற்றின் போது அரசு எங்களை மிரட்டி வேலை வாங்கியது.
    • பணியில் சேராதவர்களுக்கு ஒரு மாதம் கழித்து இட ஒதுக்கீடு பற்றி கணக்கெடுத்தனர்.

    சென்னை:

    கொரோனா காலத்தில் செவிலியர்களாக ஒப்பந்த அடிப்படையில் பணியமர்த்தப்பட்டவர்களின் ஒப்பந்த காலம் கடந்த டிசம்பர் 31-ந்தேதியுடன் முடிவடைந்தது. இதை தொடர்ந்து அவர்கள் தற்போது பணியில்லாமல் உள்ளனர். மீண்டும் வேலையில் சேர்க்ககோரி போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    இந்த நிலையில் ஒப்பந்த செவிலியர் சங்க பிரதிநிதி உதயகுமார் சென்னையில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    கொரோனா தொற்றின் போது அரசு எங்களை மிரட்டி வேலை வாங்கியது. நாங்கள் யாரால் பாதிக்கப்படுகிறோமோ அவர்களை வைத்து எங்களிடம் பேச்சு வார்த்தை நடத்துகிறார்கள்.

    2570 பேர் அழைக்கப்பட்டதில் 1506 பேர் பணியில் சேர்ந்தனர். அப்போது இதில் இடஒதுக்கீடு பின் பற்றப்பட்டது. இதில் பணியில் சேராதவர்களுக்கு ஒரு மாதம் கழித்து இட ஒதுக்கீடு பற்றி கணக்கெடுத்தனர்.

    எனவே இதில் விதிமீறல் நடைபெறவில்லை. இதில் எப்படி விதிமீறல் வர முடியும்? இது எங்களின் வாதம். இந்த பிரச்சினை 2021-ம் ஆண்டு வரும்போது ஏற்கனவே கமிட்டி அமைக்கப்பட்டது. அந்த கமிட்டியும் ஒத்துக் கொண்டது. அதற்கான உத்தரவும் இருக்கிறது.

    அந்த கமிட்டி பொய்யா? அல்லது நேற்று நடந்த பேச்சு வார்த்தை பொய்யா? அல்லது நாங்கள் சொல்வது பொய்யா? என்பதை அரசு தரப்பில்தான் சொல்ல வேண்டும். எங்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும்.

    இதை முதல்-அமைச்சர் தெளிவுபடுத்த வேண்டும். பேச்சுவார்த்தையின் போது அதிகாரிகள் மட்டுமே மாறி மாறி பேசினார்களே தவிர எங்களை பேச விடவில்லை.

    கொரோனாவின்போது மக்கள் உயிரை காப்பாற்றியதற்கு தண்டனையாக எங்களை கட்டாயப்படுத்தி வேலை வாங்கினீர்கள். பின்னர் எதிர்காலத்தில் வரக்கூடாது என்று உத்தரவும் போட்டுள்ளீர்கள்.

    2½ வருடம் வேலை வாங்கியதில் 6 மாதம் சம்பளம் தரவில்லை. பேச்சுவார்த்தையின்போது அதிகாரிகள் எங்களை மிரட்டும் தொனியிலேயே பேசினார்கள்.

    அது எங்களுக்கு வேதனையாக இருக்கிறது. எங்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும்.

    எங்களை வேலையை விட்டு நீக்கியது தவறு. முதல்-அமைச்சர் இதற்கு ஓய்வு பெற்ற நீதிபதி மூலம் விசாரணை குழு அமைத்து தீர்வு காண வேண்டும்.

    அதன்மூலம் எங்கு தவறு நடந்துள்ளது? விதிமீறல் செய்தது நர்சுகளா? அல்லது அதிகாரிகளா? என்பதை கண்டறிய வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×