search icon
என் மலர்tooltip icon

  தமிழ்நாடு

  குப்பை கிடங்காக மாறும் அடையாறு ஆறு- சிதிலமடையும் திரு.வி.க. பாலம்
  X

  குப்பை கிடங்காக மாறும் அடையாறு ஆறு- சிதிலமடையும் திரு.வி.க. பாலம்

  • சென்னையின் சுற்றுச் சூழல் அமைப்புக்கு இந்த ஆறு பங்களிக்கிறது.
  • திருவிக ஆற்றுப்பாலத்தின் வழியாக தினமும் பல ஆயிரக்கணக்கான பஸ்,கார், சென்று வருகின்றன.

  சென்னை நகரில் ஓடும் முக்கிய ஆறுகளில் ஒன்று அடையாறு ஆகும். காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள செம்பரம்பாக்கம் ஏரிக்கு அருகில் மணிமங்கலத்தில் இந்த ஆறு உருவாக்குகிறது. இந்த ஆறு சென்னையில் உள்ள அடையாறு முகத்துவாரம் பகுதியில் வங்க கடலில் கலக்கிறது. இந்த ஆறு 42.5 கிலோமீட்டர் நீளம் கொண்டது ஆகும்.

  சென்னையின் சுற்றுச் சூழல் அமைப்புக்கு இந்த ஆறு பங்களிக்கிறது. அதிக மாசு அளவு இருந்தபோதிலும், படகு மற்றும் மீன்பிடித்தல் இந்த ஆற்றில் நடைபெறுகிறது. சென்னை நகரத்தின் மழைநீர், சிறிய ஓடைகள் நீர், ஏரிநீர், போன்ற இடங்களிலிருந்து வரும் உபரி நீர் இந்த ஆற்றில் கலக்கிறது.

  இந்த நிலையில் சென்னை அடையாறு ஆற்றங் கரையோரப் பகுதியான ஈக்காட்டுத் தாங்கல், கிண்டி தொழிற்பேட்டைக்கு பின்புறம் உள்ள பகுதிகள் குப்பை கொட்டும் இடமாக மாறி உள்ளது. இதுபற்றி புகார் எழுந்ததையடுத்து சென்னை மாநகராட்சி 6 மாதங்களுக்கு முன் குப்பை கொட்டிய கரையோர பகுதிகளை சுத்தம் செய்தது. இந்த நிலையில் தற்போது மீண்டும் அப்பகுதி குப்பை கொட்டும் இடமாக மாறி உள்ளது. அதன் முந்தைய பரிதாப நிலையே அங்கு மீண்டும் உருவாகி உள்ளது. இதனை தடுக்க எந்த நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை.

  மேலும் அடையாறு ஆற்றுப்பாலத்தில் சரிவர பராமரிப்பு செய்யப்படாததால் பாலத்தின் சுவர்களில் செடி, கொடிகள் வளர்ந்து படர்ந்து உள்ளன. எனவே அதனை முறையாக பராமரிப்பு பணிகள் செய்து பாலத்தை சீரமைக்க வேண்டும்.

  அடையாறு திருவிக ஆற்றுப்பாலத்தின் வழியாக தினமும் பல ஆயிரக்கணக்கான பஸ்,கார், வேன், மோட்டார் சைக்கிள்கள் சென்று வருகின்றன. ஏராளமான பொதுமக்களும் இந்த பாலத்தின் வழியாக நடந்து சென்று வருகிறார்கள்.

  இந்த நிலையில் இப்பாலம் பழுதடைந்து உள்ளது. இந்த பாலத்தின் பக்கவாட்டு சுவர்களில், தூண்களில் மரம், செடி, கொடிகள் முளைத்து வளர்ந்து உள்ளன. பாலத்தை சரிவர பராமரிப்பு செய்யாததால் பழுதடைந்த நிலையில் உள்ளது.

  பாலத்துக்கு கேடு விளைவிக்கும் மரம், செடிகளை உடனடியாக அகற்ற வேண்டும். பாலத்தின் கரையோர பகுதிகளில் குப்பைகள் குவிந்து கிடக்கின்றன. இதன் அருகில் உள்ள புதர்களில் விஷ பூச்சிகள், பாம்புகள் நடமாட்டம் உள்ளன. மேலும் இந்த பாலத்தில் வாகன ஓட்டிகள் பயத்துடன் பயணம் செய்ய வேண்டிய அவல நிலை ஏற்பட்டு உள்ளது.

  அடையாறு ஆற்றங்கரையோர பகுதிகளில் குப்பைகள் கொட்டுவதால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. குப்பைகள் மலைபோல் தேங்கி கிடக்கின்றன. வரும் மழைக்காலங்களின் போது இவைகள் தண்ணீர் போக்குவரத்தை தடைசெய்ய வாய்ப்புகள் உருவாகும்.

  அடையாறு ஆற்றில் உள்ள ஆகாய தாமரை செடிகள், குப்பைகள் அகற்ற வேண்டும். அடையாறு ஆற்றின் கரையினை மேலும் விரிவுபடுத்த வேண்டும். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஊருக்குள் பெருவெள்ளம் புகுந்தது போன்ற நிலை மீண்டும் உருவாகக்கூடாது. எனவே இதுகுறித்து அதிகாரிகள் விழிப்புடன் செயல்பட வேண்டும்.

  கூவம் ஆற்றின் கரை யோரப் பகுதிகளிலும் குப்பைகள் கொட்டப்பட்டு வருகின்றன. எனவே அவற்றையும் அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

  இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

  இதுகுறித்து அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

  பொதுப்பணித்துறை, நீர்வளத்துறை மற்றும் சென்னை நதி மறுசீரமைப்பு அறக்கட்டளை ஆகியவை ஒருங்கிணைந்து, ஆறுகள் மற்றும் கால்வாய்களில் குப்பைகளை கொட்டக் கூடாது என்பதை வலியுறுத்தி மக்களிடையே விழிப்புணர்வு செய்கிறது.

  தமிழகஅரசு அதிகநிதி செலவழித்து அடையாறு மறுசீரமைப்பு திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இதில் ஆற்றங்கரையில் ஆக்கிரமிப்பு குடிசைகளில் வசித்த மக்கள் அகற்றப்பட்டு மறு குடியமர்வு செய்யப்படுகிறார்கள்.

  தூர்வாருதல் மற்றும் ஆற்றின் கரையோரம் விரிவாக்கம் செய்யப்படுகிறது. பிளாஸ்டிக் கழிவுகள் அகற்றப்படுகின்றன. 24 கி.மீ. தூரத்திற்கு வேலி அமைக்க திட்டமிட்டு 50 சதவீத பணிகள் முடிந்துவிட்டன. கரையோர பகுதிகளில் குப்பைகளை அகற்றும் பணி நடைபெற்று வருகிறது. கரையோர பகுதிகளில் 4.53 லட்சம் மரக்கன்றுகள் நடப்படும்.

  இவ்வாறு அவர் கூறினார்.

  Next Story
  ×