search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    நாமக்கல்லில் மீண்டும் பரபரப்பு: பர்கர் சாப்பிட்ட 8 பேர் மயக்கம்- வாலிபருக்கு தீவிர சிகிச்சை
    X

    நாமக்கல்லில் மீண்டும் பரபரப்பு: பர்கர் சாப்பிட்ட 8 பேர் மயக்கம்- வாலிபருக்கு தீவிர சிகிச்சை

    • தமிழகம் முழுவதும் ஓட்டல்களில் அதிரடி சோதனை நடத்தி வருகிறார்கள்.
    • கடைகளில் இருந்த தரமற்ற உணவு பொருட்களை பறிமுதல் செய்தனர்.

    சேலம்:

    நாமக்கல் பரமத்திரோட்டில் உள்ள ஒரு ஓட்டலில் கடந்த 10-ந் தேதி ஷவர்மா மற்றும் கிரில் சிக்கன் சாப்பிட்ட சந்தைப்பேட்டை புதூரை சேர்ந்த பள்ளி மாணவி கலையரசி (14) வயிற்றுப்போக்கு ஏற்பட்டு உயிரிழந்தார். மேலும் அசைவ உணவு சாப்பிட்டு மயங்கிய 43 பேர் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    இதை தொடர்ந்து தமிழகம் முழுவதும் ஓட்டல்களில் சோதனை நடத்த அமைச்சர் மா.சுப்பிரமணியன் உத்தரவிட்டார். இதையடுத்து உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் தமிழகம் முழுவதும் ஓட்டல்களில் அதிரடி சோதனை நடத்தி வருகிறார்கள்.

    இதற்கிடையே நாமக்கல் மாவட்டம் முழுவதும் ஷவர்மா விற்க தடை விதித்து மாவட்ட கலெக்டர் உமா உத்தரவிட்டுள்ளார். தொடர்ந்து ஓட்டல்களில் அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தி தரமற்ற இறைச்சிகளை பறிமுதல் செய்து வருகிறார்கள். இதனால் மாவட்டம் முழுவதும் பரபரப்பு நிலவி வருகிறது.

    இதற்கிடையே நாமக்கல்லில் உள்ள ஒரு ஓட்டலில் பூங்கா நகரை சேர்ந்த சஞ்சய் (18 )உள்பட 8 பேர் பர்க்கர் சாப்பிட்டனர். சாப்பிட்ட சிறிது நேரத்தில் அவர்களுக்கு திடீரென வாந்தி மயக்கம் ஏற்பட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பகுதியினர் அவர்களை மீட்டு நாமக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு சிசிச்சை அளிக்கப்பட்டது.

    இதில் 7 பேர் முதலுதவி சிகிச்சை பெற்று வீட்டிற்கு திரும்பினர். சஞ்சய் மட்டும் நாமக்கல் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனால் அவரது பெற்றோர் கதறியபடி உள்ளனர்.

    இதையடுத்து உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் அந்த கடையில் இன்று காலை ஆய்வு செய்தனர். அப்போது அந்த கடைகளில் இருந்த தரமற்ற உணவு பொருட்களை பறிமுதல் செய்தனர். மேலும் கடை உரிமையாளரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். விசாரணை முடிவில் கடை உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இந்த சம்பவத்தால் நாமக்கல் நகர பகுதியில் மீண்டும் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.

    Next Story
    ×