என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

பூண்டி ஏரியில் 7,803 கனஅடி திறப்பு: கொசஸ்தலை ஆற்று வெள்ளத்தால் 6 தரைப்பாலங்கள் மூழ்கின
- சென்னை நகர மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக பூண்டி ஏரி உள்ளது.
- கொசஸ்தலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
திருவள்ளூர்:
சென்னை நகர மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக பூண்டி ஏரி உள்ளது. மாண்டஸ் புயல் காரணமாக பெய்த கனமழை மற்றும் தற்போது தொடர்ந்து பெய்து வரும் பலத்த மழை காரணமாக பூண்டி ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்தது.
இதனால் ஏரியின் நீர்மட்டம் கிடு, கிடுவென உயர்ந்தது. இன்று காலை நிலவரப்படி பூண்டி ஏரி மொத்த உயரம் 35 அடியில் 34.10 அடிக்கு தண்ணீர் நிரம்பி இருக்கிறது.
மொத்த கொள்ளளவான 3231 மி.கன அடியில் 2854 மி.கன அடி தண்ணீர் இருப்பு உள்ளது.
தொடர்மழை காரணமாக பூண்டி ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்ததால் நேற்று முன்தினம் 10 ஆயிரம் கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டது. இதனால் கொசஸ்தலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
நேற்று பெரிய அளவில் மழை இல்லாததால் தண்ணீர் திறப்பு குறைக்கப்பட்டது. இன்று காலை பூண்டி ஏரியில் இருந்து 7803 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. ஏரிக்கு 7500 கன அடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. கொசஸ்தலை ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக 6 இடங்களில் தரைப்பாலங்கள் மூழ்கி உள்ளன. இதனால் சுமார் 500-க்கும் மேற்பட்ட கிராமங்கள் துண்டிக்கப்பட்டு உள்ளது.
வெள்ளம் காரணமாக பூண்டி தரைப்பாலத்தை மூழ்கடித்து தண்ணீர் செல்கிறது. இதேபோல் ஒதப்பை தரைப்பாலம், பெரியபாளையம் அருகே உள்ள மெய்யூர் தரைப்பாலம், திருவாலங்காடு ஒன்றியம் பாகசாலை தரைப்பாலம், எல்.வி.புரம் ஆகிய பகுதிகளில் தரைப்பாலம் மூழ்கி உள்ளன. ஆர்.கே.பேட்டை பகுதியில் உள்ள வெளியகரத்தில் தரைப்பாலத்தின் மீது தண்ணீர் செல்கிறது. அப்பகுதியில் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.
பெரியபாளையம் அருகே மெய்யூர்-மொண்ணவேடு இடையே கொசத்தலை ஆற்றின் குறுக்கே இருந்த தரை பாலம் நீரில் அடித்துச் செல்லப்பட்டது.
இதனால் 20-க்கும் மேற்பட்ட கிராம பொது மக்களுக்கு போக்குவரத்து தடைப்பட்டது.மெய்யூர், ராஜபாளையம், ஆவாஜிப்பேட்டை, கல்பட்டு, ஏனம்பாக்கம் உள்ளிட்ட கிராம மக்கள் சுமார் 20 கிலோ மீட்டர் சுற்றிக் கொண்டு மாற்றுப் பாதையில் திருவள்ளூருக்கு சென்று வருகின்றனர்.
மீஞ்சூர் ஒன்றியம் சுப்பாரெட்டி பாளையம் ஊராட்சியில் நேற்று தரைப்பாலத்தை மூழ்கடித்து வெள்ளம் சென்றது. இன்று காலை தரைப்பாலத்திற்கு கீழ் தண்ணீர் செல்கிறது. கிராமத்துக்குள் தண்ணீர் புகுந்ததால் அங்கு வசிக்கும் 200-க்கும் மேற்பட்டோர் அங்குள்ள ஊராட்சி அலுவலகத்தில் தங்க வைக்கப்பட்டனர். அவர்களுக்கு தேவையான உணவு உள்ளிட்ட அனைத்து வசதிகளும் செய்யப்பட்டு உள்ளது. கொசஸ்தலை ஆற்றில் தொடர்ந்து அதிக அளவு தண்ணீர் செல்வதால் கரையோர கிராம மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும் தேவையான நடவடிக்களை அதிகாரிகள் உடனடியாக எடுக்க வேண்டும் எனவும் மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் உத்தரவிட்டு உள்ளார்.
இதேபோல் ஆந்திரா பகுதியில் பெய்த பலத்த மழை காரணமாக பிச்சாட்டூர் அணையில் இருந்து நேற்று மாலை 500 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. இதனால் ஆரணி ஆற்றிலும் அதிக அளவு தண்ணீர் செல்கிறது. கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
ஆரணி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் புதுப்பாளையம்- அஞ்சாத்தம்மன் கோவில் இடையே தரைப்பாலம் நீரில் மூழ்கியது. மேலும், மங்கலம்-ஆரணி இடையே மண் சாலை அமைக்கப்பட்டு இருந்தது.இதுவும் ஆரணி ஆற்று வெள்ளப்பெருக்கில் அடித்துச் செல்லப்பட்டது.
இதனால் மங்களம், புதுப்பாளையம், காரணி, நெல்வாய், ஏருக்குவாய், எருக்குவாய் கண்டிகை உள்ளிட்ட இருபதுக்கும் மேற்பட்ட கிராம மக்கள் பெரியபாளையம் வழியாக மாற்றுப்பாதையில் பல கிலோமீட்டர் சுற்றி செல்கிறார்கள். எனவே,மெய்யூர் மற்றும் புதுப்பாளையம் மேம்பாலத்தை போர்க்கால அடிப்படையில் கட்டி முடித்து பொது மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்று கிராமமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.