search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    ஓமலூரில் ஒரே மேடையில் சந்தித்து மகிழ்ந்த 7 தலைமுறை உறவுக்காரர்கள்- மாறாத பாசத்தால் நெகிழ்ச்சி
    X

    7 தலைமுறை உறவினர்கள் குடும்பத்துடன் பங்கேற்ற காட்சி


    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    ஓமலூரில் ஒரே மேடையில் சந்தித்து மகிழ்ந்த 7 தலைமுறை உறவுக்காரர்கள்- மாறாத பாசத்தால் நெகிழ்ச்சி

    • நமது பாரம்பரியம், கலாச்சாரம் ஆகியவையும் மறைந்துகொண்டே போகிறது.
    • நமது முந்தைய தலைமுறையே முழுமையாக தெரியாமல் போகும் நிலை ஏற்பட்டுள்ளது.

    ஓமலூர்:

    இன்றைய கால சூழலில் உறவுகள், நண்பர்கள் திருமணம், வேலை, இடமாற்றம் என பல காரணங்களால் தமிழகம் மட்டுமல்லாமல் இந்தியா மற்றும் உலகம் முழுவதும் பிரிந்து சென்று வாழ்ந்து வருகின்றனர். அதனால், கடந்த ஒரு சில தலைமுறைகளாக குடும்ப உறவுகளின் மாண்பு, சந்திப்பு இல்லாமல் போனது. மேலும், நமது பாரம்பரியம், கலாச்சாரம் ஆகியவையும் மறைந்துகொண்டே போகிறது. நமது முந்தைய தலைமுறையே முழுமையாக தெரியாமல் போகும் நிலை ஏற்பட்டுள்ளது.

    இந்த நிலையில், வளரும் தலைமுறைக்கு நமது கலாச்சாரம், பண்பாடு, குடும்ப உறவுகள், நட்புகள், சொந்த பந்தங்கள், கூட்டுக்குடும்ப வாழ்க்கை முறைகள் குறித்த தகவல்களை தெரியப்படுத்தும் வகையில் 7 தலைமுறை சங்கமிக்கும் குடும்ப இணைப்பு மற்றும் சந்திப்பு விழா ஓமலூரில் உள்ள ஒரு மண்டபத்தில் நடத்தப்பட்டது. ஓமலூரை சேர்ந்த செல்வராஜ், வருதராஜன், லிபியாசந்திரசேகர், துரைராஜி ஆகியோர் இணைந்து விழாவை நடத்தினர்.

    இவர்கள் 4 பேரும் ஒன்றிணைந்து அனைத்து சொந்தங்களையும் அவரது முகவரியை பல மாதங்களாக கண்டுபிடித்து அங்கு சென்றனர். இதில் முக்கியமாக தமிழகத்தில் சேலம், நாமக்கல், தர்மபுரி, சென்னை, பெங்களூர், மும்பை உள்ளிட்ட பகுதிகளிலும் பலர் இருந்தனர். மேலும் வெளிநாடுகளான துபாய் அரபு நாடுகளிலும் சிலர் இருந்தனர்.

    இவர்களை தொடர்பு கொண்டு இந்த விழாவில் இணைத்தனர். இந்த விழாவில் 5-வது தலைமுறையை சேர்ந்த பாட்டன், பாட்டிகள் முதல் தற்போதைய தலைமுறை கொள்ளு பேர குழந்தைகள் வரை 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் கலந்துகொண்டு தங்களது அன்பை பரிமாறிக்கொண்டனர். கூட்டு குடும்பத்தால் இளைய தலைமுறை கற்றுகொள்ளும் வாழ்வியல் நடைமுறைகள் குறித்து ஒருவருக்கொருவர் பரிமாறிக்கொண்டனர்.


    100 வயது மூதாட்டி வெங்கட் அம்மாள்


    மேலும், அனைத்து குடும்பங்களின் பெரியவர்கள், இளைஞர்கள், குழந்தைகள் ஒன்றாக பேசி, விளையாடி உறவை புதுபித்துக்கொண்டனர். அனைவரும் ஒன்றாக மதிய உணவு சாப்பிட்டு மகிழ்ச்சியை வெளிபடுத்தினர். எவ்வளவு தூரத்தில் வாழ்ந்தாலும், குடும்ப உறவுகளை ஆண்டுக்கு ஒரு முறையாவது சந்தித்து அனைவரும் அன்பை பரிமாறிக்கொள்ள வேண்டும் என்று அனைவரும் தங்களது கருத்துக்களை தெரிவித்தனர்.

    நிகழ்ச்சியில் பங்கேற்ற 100 வயது மூதாட்டி வெங்கட் அம்மாள் கூறும்போது, என் வாழ்நாளில் இவர்களை பார்க்கவே முடியாது என்ற சூழ்நிலையில் இருந்த போது இது போன்ற குடும்ப சந்திப்பு விழாவை ஏற்படுத்தி எனது வாழ்நாள் கனவை பூர்த்தி செய்துள்ளனர். அளவற்ற மகிழ்ச்சி அடைந்துள்ளேன். தற்போது எனது மகன், மகள், பேரன், பேத்திகள், கொள்ளு பேரன்கள், அவர்களது மகன்கள் என பல தலைமுறைகளை இன்று நான் சந்தித்தேன். இது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது என்றார்.

    நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் கூறுகையில் தொடர்ந்து குடும்ப விசேஷங்கள், துக்க நிகழ்ச்சிகள் அனைத்திலும் இது போன்ற உறவுகள் பங்கெடுக்க வேண்டும். அப்போதுதான் மனித வாழ்வு முழுமை அடையும். தற்போது நாங்கள் முழுமையான மகிழ்ச்சியில் உள்ளோம் என்றனர். இறுதியாக இதை ஏற்பாடு செய்தவர்களுக்கு குடும்ப உறவுகள் அனைவரும் பாராட்டி நன்றி தெரிவித்தனர்.

    Next Story
    ×