search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    நங்கநல்லூர் ஆஞ்சநேயர் கோவிலுக்கு தங்கத்தேர் செய்யும் பணி- அமைச்சர்கள் தா.மோ.அன்பரசன், பி.கே.சேகர்பாபு தொடங்கி வைத்தனர்
    X

    நங்கநல்லூர் ஆஞ்சநேயர் கோவிலுக்கு தங்கத்தேர் செய்யும் பணி- அமைச்சர்கள் தா.மோ.அன்பரசன், பி.கே.சேகர்பாபு தொடங்கி வைத்தனர்

    • திருத்தணியில் புதிய வெள்ளித்தேர் கடந்த வாரம் வீதிவுலா தொடங்கி வைக்கப்பட்டது.
    • பல ஆண்டு காலமாக ஓடாமல் இருந்த தங்கத்தேர்களை ஓட வைத்த ஆட்சி இந்த ஆட்சியாகும்.

    சென்னை:

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டு தலின்படி, குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு ஆகியோர் இன்று சென்னை, நங்கநல்லூர், ஆதிவ்யாதி ஹர பக்த ஆஞ்சநேயர் கோவிலில் ரூ.6 கோடி மதிப்பீட்டில் புதிய தங்கத் தேர் செய்திட ரூ.34 லட்சம் மதிப்பீட்டில் மரத்தேர் உருவாக்கும் திருப்பணியை தொடங்கி வைத்தனர்.

    பின்னர் அமைச்சர் சேகர்பாபு நிருபர்களிடம் கூறியதாவது:-

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற பின் இந்து சமய அறநிலையத்துறையானது திருக்குளங்களை சீரமைத்தல், தேர்களை புனரமைத்தல், நந்தவனங்களை உருவாக்குதல், ஆகம விதிப்படி 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை குடமுழுக்கு நடைபெறாமல் இருந்த கோவில்களுக்கு குடமுழுக்கு மேற்கொள்ளுதல், 1,000 ஆண்டுகள் பழமையான கோவில்களில் திருப்பணி மேற்கொள்ளப்பட்டு நன்னீராட்டு பெருவிழா நடத்துதல், கோவிலுக்கு வருகின்ற பக்தர்களுக்கு அடிப்படை வசதிகளான முடிகாணிக்கை மண்டபம், விருந்து மண்டபம், திருமண மண்டபம், குடிநீர் வசதி, கழிப்பிட வசதி, போக்குவரத்து வசதி ஆகியவற்றை மேம்படுத்தி வழங்குதல் போன்ற பணிகளை செய்து வருகிறது.

    அதன் ஒரு பகுதியாக கோவில்களுக்கு புதிய தேர்கள் செய்தல், பழுதடைந்த தேர்களை மராமத்து பணி செய்தல், பல ஆண்டு காலமாக ஓடாமல் இருந்த தேர்களை உலாவர செய்தல் குறிப்பாக சமயபுரம், மாரியம்மன் கோவில், ராமேஸ்வரம், ராமநாத சுவாமி கோவில்களில் பல ஆண்டு காலமாக ஓடாமல் இருந்த தங்கத்தேர்களை ஓட வைத்த ஆட்சி இந்த ஆட்சியாகும்.

    மேலும், திருத்தணி, சுப்ரமணிய சுவாமி கோவிலுக்கு பக்தர்கள் பங்களிப்புடன் புதிய வெள்ளித்தேர் ரூ.4 கோடி செலவில் செய்யப்பட்டு கடந்த வாரம் உலா வர செய்யப்பட்டது. இந்த ஆட்சி ஏற்பட்ட பிறகு ரூ.31.24 கோடி மதிப்பீட்டில் 51 புதிய மரத்தேர்கள் செய்வதற்கும், ரூ.4.12 கோடி மதிப்பீட்டில் 13 மரத்தேர்களை மராமத்து செய்வதற்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

    பெரியபாளையம், பவானியம்மன் கோவில், புரசைவாக்கம், கங்காதீஸ்வரர் கோவில், நங்கநல்லூர், ஆஞ்சநேயர் கோவில் ஆகிய கோவில்களுக்கு ரூ.20 கோடி மதிப்பீட்டில் புதிய தங்கத்தேர் செய்வதற்கும், இருக்கண்குடி, மாரியம்மன் கோவில், சென்னை, காளிகாம்பாள் கோவில், கருக்காவூர், கர்ப்பகரட் சாம்பிகை கோவில், திருநெல்வேலி, நெல்லையப்பர் கோவில், திருத்தணி, சுப்ரமணிய சுவாமி கோவில் ஆகிய 5 கோவில்களுக்கு ரூ.15 கோடி மதிப்பீட்டில் புதிய வெள்ளித்தேர்கள் செய்யும் பணி நடைபெற்று வருகிறது. இதில் திருத்தணியில் புதிய வெள்ளித்தேர் கடந்த வாரம் வீதிவுலா தொடங்கி வைக்கப்பட்டது.

    இன்றைய தினம் நங்கநல்லூர், ஆஞ்சநேயர் கோவிலுக்கு புதிய தங்கத்தேர் செய்திட ரூ.34 லட்சம் மதிப்பீட்டில் மரத்தேர் உருவாக்கும் பணி உபயதாரர் பங்களிப்புடன் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. ஆறு மாத காலத்திற்குள் பணிகளை நிறைவு செய்து பக்தர்கள் நேர்த்தி கடனை செலுத்துவதற்கு ஏதுவாக புதிய தங்கத் தேர் உலா வர துரித நடவடிக்கை மேற் கொள்ளப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலையத்துறை சிறப்பு பணி அலுவலர் ஜெ.குமரகுருபரன், முன்னாள் மாநிலங்களவை உறுப்பினர்ஆர்.எஸ். பாரதி, கூடுதல் ஆணையர் ந.திருமகள், சென்னை மண்டல இணை ஆணையர் கி.ரேணுகாதேவி, அலுவலர் கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×