என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

திருவள்ளூர் அருகே மது வாங்கி தராததால் வீடுகள் மீது நாட்டு வெடிகுண்டு வீச்சு- 5 பேர் கைது
- திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் ஒன்றியத்திற்குட்பட்ட சத்தரை கிராமத்தை சேர்ந்தவர் சிவா, தீனா.
- நாட்டு குண்டு வீசியதாக அதே பகுதியை சேர்ந்த கோபி, அருண், அபியூத், கமலக் கண்ணன், மணிகண்டன் ஆகிய 5 பேரை கைது செய்தனர்.
திருவள்ளூர்:
திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் ஒன்றியத்திற்குட்பட்ட சத்தரை கிராமத்தை சேர்ந்தவர் சிவா (23). இவரது நண்பர் தீனா (25).
இவர்கள் இருவரும் நேற்று முன்தினம் இரவு அதே பகுதியில் உள்ள அரசு டாஸ்மாக்கில் மது வாங்கி சாலையோரம் மது அருந்திக் கொண்டிருந்தனர்.
அப்போது அங்கு வந்த அதே பகுதியை சேர்ந்த கோபி, ராஜேஷ் ஆகிய இருவரும் சிவா, தீனா ஆகியோரிடம் பைக்கில் இருந்தவாறே மது வாங்கி தருமாறு கேட்டுள்ளனர். இதனால் அவர்களுக்குள் வாய் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இதையடுத்து சிவா, தீனா இருவரும் தங்கள் வீடுகளுக்கு சென்றனர். இந்த நிலையில் சத்தரை மேட்டு காலனி கிராமத்தில் 3 மோட்டார் சைக்கிள்களில் வந்த 6 பேர் மர்ம கும்பல் சிவா மற்றும் தீனா வீட்டின் மீது நாட்டு குண்டை வீசி உள்ளனர்.
இதனால் ஏற்பட்ட சத்தத்தில் சிவாவின் தந்தை மாதவனின் காது பாதிக்கப்பட்டது. அவர் திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
நாட்டு குண்டு வீசிய நபர்களை கைது செய்ய வலியுறுத்தி திருவள்ளூர்- பேரம்பாக்கம் நெடுஞ்சாலை சத்தரை பேருந்து நிறுத்தம் அருகே சத்தரை மேட்டு காலனி பகுதியை சேர்ந்த பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட முயன்றனர்.
தகவல் அறிந்த மப்பேடு சப்-இன்ஸ்பெக்டர் இளங்கோ தலைமையிலான போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர்.
இதையடுத்து நாட்டு குண்டு வீசியதாக அதே பகுதியை சேர்ந்த கோபி, அருண், அபியூத், கமலக் கண்ணன், மணிகண்டன் ஆகிய 5 பேரை கைது செய்தனர்.






