என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

சென்னை காப்பகத்தில் இருந்து 3 வயதில் தத்து கொடுக்கப்பட்டவர்- 42 ஆண்டுகளுக்கு பிறகு பெற்றோரை தேடி அலையும் டென்மார்க் பெண்
- தமிழகத்தில் பல்வேறு இடங்களில் தனது பெற்றோரை நிஷா தேடி உள்ளார்.
- 42 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது கருப்பூர் பகுதியில் தனது பெற்றோரை, உறவினரை நிஷா, தனது கணவருடன் தேடி வருகிறார்.
கருப்பூர்:
டென்மார்க் பிலாங்சர் டார்பன் பகுதியை சேர்ந்தவர் பேட்டரிக் (வயது 45). இவரது மனைவி லீசி என்கிற நிஷா (44). இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர்.
கடந்த 1980-ம் ஆண்டு நிஷா 3 வயது குழந்தையாக இருந்த போது சென்னை பல்லாவரம் மெட்ராஸ் கிறிஸ்டியன் குழந்தைகள் காப்பகத்தில் விடப்பட்டுள்ளார். பின்னர் அங்கு இருந்து டென்மார்க்கை சேர்ந்த சுற்றுலா பயணி ராஸ், என்பவர் தத்து எடுத்து சென்று டென்மார்க்கில் வளர்ந்துள்ளார்.
இந்த நிலையில் தனது பெற்றோர் மற்றும் உறவினர்களை காண வேண்டும் என்று அவருக்கு ஆசை ஏற்பட்டுள்ளது. இதை கணவரிடம் தெரிவித்துள்ளார். அவரும் சரி என்று கூறவே, நிஷாவும், அவரது கணவர் பேட்டரிக்கும், டென்மார்க்கில் இருந்து இந்தியா வந்துள்ளனர்.
பூனேவில் உள்ள தனியார் தொண்டு நிறுவன இயக்குனர் அஞ்சலி பவார் என்பவரின் உதவியுடன் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் தனது பெற்றோரை நிஷா தேடி உள்ளார். அவர் விழுப்புரம், தஞ்சை, கும்பகோணம், ஆகிய பகுதிகளில் தேடி அலைந்து விட்டு சேலம் மாவட்டம் கருப்பூருக்கு வந்துள்ளார்.
42 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது கருப்பூர் பகுதியில் தனது பெற்றோரை, உறவினரை நிஷா, தனது கணவருடன் தேடி வருகிறார்.
பல்லாவரத்தில் உள்ள கிறிஸ்தவ காப்பகத்தில் 1980-ம் ஆண்டு என்னை சேர்த்தனர். 1982-ம் ஆண்டு டென்டார்க் தம்பதிகளான ராஸ்-முசன் என்னை தத்தெடுத்து டென்மார்க் அழைத்து சென்றனர். அங்கேய என்னை படிக்க வைத்து வளர்த்தனர். பின்னர் பேட்ரிக்கை திருமணம் செய்து கொண்டேன். எங்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர்.
42 ஆண்டுக்கு முன்பு எனது பெயர் மீனாட்சி என்ற ஞாபகம் உள்ளது. பூர்வீகம் கபூர் அல்லது கருப்பூர் என தெரிகிறது. இதனால் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் தேடி வருகிறேன். மேலும் கருப்பூர் பகுதியில் உள்ள கோவில்கள் மற்றும் பள்ளிகள் உள்ளிட்ட இடங்களில் சென்று எனது இளம் வயது ஞாபகங்கள் வருகிறதா? என தேடி உள்ளேன். ஆனால் பல இடங்களில் தேடியும் எனது பெற்றோர், உறவினர்களை கண்டுபிடிக்க முடியவில்லை. இருப்பினும் கண்டுபிடித்து விடுவேன் என்ற நம்பிக்கை உள்ளது.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகிலும் கருப்பூர் என்ற ஊர் உள்ளது. அங்கு சென்றும் பெற்றோர் பற்றி விசாரிக்க உள்ளேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
அவர் குழந்தையாக இருந்தபோது எடுத்த புகைப்படம் கையில் வைத்துள்ளார். இந்த புகைப்படம் டென்மார்க் செல்வதற்கு பாஸ்போர்ட் எடுப்பதற்காக அப்போது எடுக்கப்பட்ட புகைப்படமாகும்.
இதைத் தொடர்ந்து நிஷா, தனது கணவருடன் கருப்பூர் போலீஸ் நிலையத்துக்கு வந்தார். அங்கு இது பற்றி போலீசாரிடம் தெரிவித்து விட்டு பெற்றோரை நிஷா தொடர்ந்து தேடி வருகிறார்.
3 வயதில் தத்து கொடுக்கப்பட்ட குழந்தை, 42 ஆண்டுகளுக்கு பிறகு தனது பெற்றோரை தேடி தாயகம் வந்துள்ள சம்பவம் பொதுமக்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.






