search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    சின்னமுதலியார் சாவடி காப்பகத்திற்கு சீல்- 24 பேர் ஆஸ்பத்திரியில் அனுமதி
    X

    சின்னமுதலியார் சாவடி காப்பகத்திற்கு சீல்- 24 பேர் ஆஸ்பத்திரியில் அனுமதி

    • காப்பகத்தில் தங்கியிருந்தவர்களுக்கு மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டது.
    • காப்பகத்தில் பராமரிக்கப்பட்டு வந்த 24 பேரை மீட்டு, முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே உள்ள குண்டலப்புலியூரில் அன்புஜோதி ஆசிரமம் இயங்கி வருகிறது. இதன் கிளை நிறுவனமான மனநல காப்பகம் கோட்டக்குப்பம் அடுத்த சின்னமுதலியார் சாவடியில் இயங்கி வந்தது.

    இந்த காப்பகத்தில் 12 பெண்கள், 12 ஆண்கள் பராமரிக்கப்பட்டு வந்தனர். அன்புஜோதி அறக்கட்டளையின் மற்றொரு காப்பகம், விழுப்புரம் விக்கிரவாண்டி அருகே குண்டலபுலியூரில் இயங்கியது. அந்த காப்பகத்தில் இருந்து மனநலம் குன்றிய பெண்ணை, சின்ன முதலியார்சாவடி காப்பகத்திற்கு அழைத்து வந்து, போதை மருந்து கொடுத்து பாலியல் தொந்தரவு செய்ததாக, அதிகாரிகளுக்கு புகார் சென்றது.

    அதன்பேரில், டி.எஸ்.பி., பிரியதர்ஷினி தலைமையில் அதிகாரிகள் நேற்று முன்தினம் சின்ன முதலியார் சாவடியில் உள்ள மனநல காப்பகத்தை ஆய்வு செய்தனர். பலாத்கார புகார் குறித்தும் தீவிரமான விசாரணை மேற்கொண்டனர்.

    இதனை உறுதிப்படுத்துவதற்காக பாதிக்கப்பட்டவர்களை மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்த முடிவு செய்யப்பட்டது.

    மேலும் காப்பகத்தில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளதும் தெரியவந்தது. அதையடுத்து, காப்பகத்தில் தங்கியிருந்தவர்களுக்கு நேற்று மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டது.

    பின்னர், காப்பகத்தில் பராமரிக்கப்பட்டு வந்த 24 பேரை மீட்டு, முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். தொடர்ந்து, வானூர் தாசில்தார், கோட்டக்குப்பம் தனிப்பிரிவு சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் மற்றும் அதிகாரிகள், சின்ன முதலியார்சாவடியில் அன்புஜோதி அறக்கட்டளை மூலம் இயங்கிய காப்பகத்தை மூடி 'சீல்' வைத்தனர்.

    Next Story
    ×