என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

தேனியில் 182 ஏக்கர் நில மோசடி- வி.ஏ.ஓ உள்பட 5 பேர் கைது
- 182 ஏக்கர் நிலங்களுக்கு வழங்கிய பட்டாக்களை முந்தைய கலெக்டர் முரளிதரன் ரத்து செய்தார்.
- வி.ஏ.ஓ. சுரேஷ் உள்பட நிலத்தை வாங்கியவர்கள் என 5 பேரும் நில மோசடியில் ஈடுபட்டது தெரிய வரவே அவர்களை சி.பி.சி.ஐ.டி. போலீசார் கைது செய்தனர்.
தேனி:
தேனி மாவட்டம் பெரியகுளம் தாலுகாவில் அரசுக்கு சொந்தமான நிலம் அபகரிக்கப்பட்ட வழக்கில் கிராம நிர்வாக அதிகாரி சுரேஷ் உள்பட 5 பேரை சி.பி.சி.ஐ.டி போலீசார் இன்று கைது செய்தனர்.
தேனி மாவட்டம் பெரியகுளம் தாலுகாவிற்கு உட்பட்ட அரசுக்கு சொந்தமான 182 ஏக்கர் நிலங்களை கடந்த 2016-18-ம் ஆண்டு காலகட்டத்தில் மோசடி செய்து தனியாருக்கு பட்டா போட்டு கொடுத்ததாக புகார் எழுந்தது. இது குறித்து பெரியகுளம் சப்-கலெக்டர் ரிஷப் விசாரணை மேற்கொண்டார். இதில் வடவீரநாயக்கன் பட்டியில் ரூ.1.44 கோடி மதிப்புள்ள 1.09 ஏக்கர், தாமரைக்குளத்தில் 60 ஏக்கர், கெங்குவார்பட்டியில் 12 ஏக்கர் என மொத்தம் 182 ஏக்கர் அரசு நிலங்களை அதிகாரிகள் துணையுடன் சிலர் அபகரித்தது தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து 182 ஏக்கர் நிலங்களுக்கு வழங்கிய பட்டாக்களை முந்தைய கலெக்டர் முரளிதரன் ரத்து செய்தார். இதனை தொடர்ந்து அந்த நிலங்கள் மீண்டும் அரசுடைமையாக்கப்பட்டன. மோசடி நிலங்கள் 'அ' பதிவேட்டில் கணினி மூலம் திருத்தம் செய்து மோசடி பட்டா வழங்கப்பட்டதும், அதன்மூலம் அரசு நிலங்களை அபகரிக்க அதிகாரிகள் உடந்தையாக இருந்ததும் தெரியவந்தது. இந்த மோசடி தொடர்பாக பெரியகுளம் ஆர்.டி.ஓ.க்களாக பணிபுரிந்த ஜெயபிரதா, ஆனந்தி, தாசில்தார்கள் ரத்தினமாலா, கிருஷ்ணகுமார், மண்டல துணைதாசில்தார்கள் மோகன்ராம், சஞ்சீவிகாந்தி, நிலஅளவையர்கள் பிச்சைமணி, சக்திவேல், வடவீரநாயக்கன் பட்டி வி.ஏ.ஓ சுரேஷ், நிலஅளவை உதவியாளர் அழகர், மண்டலதுணை தாசில்தாரின் உதவியாளர் ராஜேஸ்கண்ணன், நிலத்தை அபகரித்த அ.தி.மு.க பிரமுகர் அன்னப்பிரகாஷ், முத்துவேல்பாண்டியன், போஸ் உள்ளிட்ட 18 பேர் மீது வழக்குப்பதிவு செய்து 7 பேரை கைது செய்தனர். அவர்கள் தற்போது ஜாமீனில் வெளியில் உள்ளனர். இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டிக்கு மாற்றப்பட்டது. தலைமறைவாக இருந்த வி.ஏ.ஓ சுரேஷ் உள்பட 5 பேரை தேனி சி.பி.சி.ஐ.டி அலுவலகத்தில் வைத்து டி.எஸ்.பி. சரவணக்குமார், இன்ஸ்பெக்டர் சித்ரா ஆகியோர் கொண்ட போலீசார் விசாரணை நடத்தினர்.
இதில் வி.ஏ.ஓ. சுரேஷ் உள்பட நிலத்தை வாங்கியவர்கள் என 5 பேரும் நில மோசடியில் ஈடுபட்டது தெரிய வரவே அவர்களை சி.பி.சி.ஐ.டி. போலீசார் கைது செய்தனர்.






