என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

தாம்பரம் தொண்டு நிறுவனத்தில் 100 நாய், பூனைகள் உடல் மெலிந்த நிலையில் மீட்பு
- தாம்பரம் அருகே எட்டியாபுரம், தர்காஸ் சாலையில் தனியார் விலங்குகள் தொண்டு நிறுவனம் உள்ளது.
- 4 விலங்குகள் நல அமைப்பு தொண்டு நிறுவனத்திடம் பராமரிக்க ஒப்படைத்தனர்.
தாம்பரம்:
தாம்பரம் அருகே எட்டியாபுரம், தர்காஸ் சாலையில் தனியார் விலங்குகள் தொண்டு நிறுவனம் உள்ளது. வீடுகளில் வளர்க்கப்பட்டு பின்னர் கைவிடப்படும் பூனை, நாய்கள் இங்கு பராமரிக்கப்பட்டு வந்தது.
மேலும் பொது இடங்களில் மீட்கப்படும் செல்லப் பிராணிகளையும் பராமரித்து வந்தனர்.
இந்த நிலையில் தொண்டு நிறுவனத்தில் பராமரிக்கப்படும் நாய், பூனைகளுக்கு சரியாக உணவு அளிக்கப்படுவதில்லை எனவும், அவை உயிருக்கு போராடும் நிலையில் உடல் மெலிந்து இருப்பதாகவும் தமிழ்நாடு விலங்குகள் நல வாரியம், விலங்குகள் நல அமைப்புகள், விலங்குகள் நல ஆர்வலர்களுக்கு தொடர்ந்து புகார்கள் வந்தன.
இதையடுத்து கடந்த சில நாட்களுக்கு முன்பு விலங்குகள் நல ஆர்வலர்கள் சென்று பார்த்த போது தொண்டு நிறுவனத்தில் பராமரிக்கப்படும் நாய், பூனைகள் பரிதாப நிலையில் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து 'ஷெவன் பார் அனிமல்' அமைப்பை சேர்ந்தவர்கள் போலீசில் புகார் செய்தனர். இதைத் தொடர்ந்து விலங்குகள் நல அமைப்பினர் மற்றும் போலீசார் தொண்டு நிறுவனத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். பின்னர் உடல் மெலிந்து மோசமான நிலையில் இருந்த 100-க்கும் மேற்பட்ட நாய், பூனைகளை மீட்டனர். அவற்றை வேறு 4 விலங்குகள் நல அமைப்பு தொண்டு நிறுவனத்திடம் பராமரிக்க ஒப்படைத்தனர்.
இதுகுறித்து 'ஹெவன் பார் அனிமல்' அமைப்பைச் சேர்ந்த பிரகாஷ்காந்த் என்பவர் கூறும்போது, "இந்த இடத்தில் விலங்குகள் சுகாதாரமற்ற நிலையில் பராமரிக்கப்பட்டு உள்ளது. சரியான ஊட்டச்சத்து, உணவு இல்லாததால் அவை மெலிந்து இருந்தன.
நாங்கள் சென்ற போது ஒரு நாய் 4 குட்டிகளை ஈன்று இருந்தது. அதில் 2 குட்டிகள் இறந்து இருந்தன. மேலும் ஒரு பூனை இறந்து கிடந்தது. அதனை மற்ற பூனைகள் தின்று கொண்டு இருந்தன.
பல நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே விலங்குகளுக்கு உணவு வழங்கப்பட்டு உள்ளது. அதன் உணவு கிண்ணங்கள் காலியாகவே கிடந்தன. சுமார் 100 நாய், பூனைகள் மீட்கப்பட்டு உள்ளது" என்றார்.






