search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    கடலில் வீசப்பட்ட 10 கிலோ தங்க கட்டிகள்: 3-வது நாளாக தேடும் பணி தீவிரம்
    X

    கடலில் வீசப்பட்ட 10 கிலோ தங்க கட்டிகள்: 3-வது நாளாக தேடும் பணி தீவிரம்

    • கடலோர காவல்படையினரை கண்ட கடத்தல்காரர்கள் வேறு வழியின்றி படகை நடுக்கடலிலேயே விட்டுவிட்டு கடலில் குதித்து நீந்தி தப்பினர்.
    • நீரில் மூழ்கி பொருட்களை மீட்டு வரும் ஸ்கூபா டைவிங் வீரர்கள் உதவியுடன் அந்தப்பகுதியில் தேடுதல் வேட்டையை அதிகாரிகள் தொடங்கியுள்ளனர்.

    ராமேசுவரம்:

    ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரம், பாம்பன், மண்டபம் உள்ளிட்ட மன்னார் வளைகுடா கடல் வழியாக அடிக்கடி கடத்தல் சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. மருந்து பொருட்கள், போதை பொருட்கள், அரியவகை கடல் அட்டைகள், தங்க கட்டிகள் போன்றவற்றை படகுகள் மூலமாக கடத்தல்காரர்கள் இந்தியா-இலங்கை இடையே கடத்த முயன்று வருகின்றனர்.

    இந்திய கடலோர காவல் படையினரும், கடற்படையினரும் தீவிர ரோந்துப்பணி மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு கடத்தல்காரர்களின் முயற்சிகளை அவ்வப்போது முறியடித்து வருகின்றனர். இருந்த போதிலும் இப்பகுதியில் தொடர்ந்து கடத்தல் சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன.

    இந்தநிலையில் மண்டபம் அருகே மன்னார் வளைகுடா பகுதியில் வேதாளை என்ற இடத்தில் 2 தினங்களுக்கு முன்பு கடலோர காவல் படையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகமளிக்கும் வகையில் படகு ஒன்றில் மர்மநபர்கள் சிலர் பொருட்களை கடத்தி வருவது தெரியவந்தது. அந்த படகை கடரோல காவல்படையினர் துரத்தி சென்று மடக்கினர். இதில் கடலோர காவல்படையினரை கண்ட கடத்தல்காரர்கள் வேறு வழியின்றி படகை நடுக்கடலிலேயே விட்டுவிட்டு கடலில் குதித்து நீந்தி தப்பினர்.

    அதற்கு முன்னதாக படகில் இருந்த சுமார் 10 கிலோ தங்க கட்டிகளை திரைப்பட பாணியில் கடலுக்குள் வீசிவிட்டு தப்பிச்சென்றதாக கூறப்படுகிறது. இதில் கடலோர காவல்படையினர் நடத்திய விசாரணையில் 2 பேர் சிக்கினர். அவர்களிடம் மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்தினர். கைப்பற்றிய படகிலும் சோதனை நடத்தப்பட்டது. ஆனால் படகில் பொருட்கள் எதுவும் இல்லை. ஆனால் அதே நேரத்தில் கடலுக்குள் தங்க கட்டிகளை வீசி இருக்கலாம் என்ற சந்தேகம் அதிகாரிகளுக்கு எழுந்துள்ளது. இதனால் நீரில் மூழ்கி பொருட்களை மீட்டு வரும் ஸ்கூபா டைவிங் வீரர்கள் உதவியுடன் அந்தப்பகுதியில் தேடுதல் வேட்டையை அதிகாரிகள் தொடங்கியுள்ளனர்.

    கடலில் வீசப்பட்ட தங்க கட்டிகள் 7 முதல் 10 கிலோ வரை இருக்கலாம் என கூறப்படுகிறது. நீர் மூழ்கி வீரர்கள் அவற்றை மீட்டு எடுத்து வந்த பிறகு தான் அதன் உண்மையான மதிப்பு தெரியவரும் என அதிகாரிகள் தெரிவித்தனர். இன்று 3-வது நாளாக மண்டபம் அருகே மன்னார் வளைகுடா பகுதியில் தங்க கட்டிகள் வீசப்பட்ட பகுதியில் தீவிரமாக தேடுதல் பணி நடைபெற்று வருகிறது.

    Next Story
    ×