என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

மாணவர் உடலை தீயணைப்பு வீரர்கள் மீட்டு கரைக்கு கொண்டுவந்த காட்சி.
களக்காடு அருகே குளத்தில் மூழ்கி மாணவர் பலி
- குளத்தில் குளித்துக்கொண்டிருந்தபோது ரஞ்சித்குமார் திடீரென ஆழமான பகுதிக்கு சென்றார்.
- தீயணைப்பு வீரர்கள் சுமார் 20 அடி ஆழமுள்ள அந்த குளத்தில் மூழ்கி இறந்த ரஞ்சித் குமாரின் உடலை மீட்டனர்.
களக்காடு:
சேலம் மாவட்டம் மேட்டூர் தாலுகாவுக்கு உட்பட்ட பள்ளிப்பட்டி மேச்சேரியை சேர்ந்தவர் கருப்பண்ணன். இவரது மகன் ரஞ்சித் குமார் (வயது 22).
இவர் களக்காடு அருகே வடுகச்சிமதிலில் உள்ள ராணுவ பயிற்சி மையத்தில் படித்து வந்தார். நேற்று மாலை இவர் தனது நண்பர்களுடன் வடுகச்சிமதிலை அடுத்த ஆலங்குளத்தில் உள்ள ஒரு குளத்திற்கு குளிக்க சென்றார்.
அப்போது குளத்தில் குளித்துக்கொண்டிருந்தபோது ரஞ்சித்குமார் திடீரென ஆழமான பகுதிக்கு சென்றார். உடனே அவரது நண்பர்கள் அவரை மீட்க முயற்சி செய்தனர். ஆனால் ரஞ்சித்குமாரை மீட்க முடியவில்லை.
இதுபற்றி நாங்குநேரி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதையடுத்து இன்று காலை தீயணைப்பு வீரர்கள் அங்கு வந்து சுமார் 20 அடி ஆழமுள்ள அந்த குளத்தில் மூழ்கி இறந்த ரஞ்சித் குமாரின் உடலை மீட்டனர். இதுகுறித்து திருக்குறுங்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






