என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    புதுக்கோட்டை மாவட்ட விசைப்படகு மீனவர்கள் 5 பேர் சிறைப்பிடிப்பு
    X

    புதுக்கோட்டை மாவட்ட விசைப்படகு மீனவர்கள் 5 பேர் சிறைப்பிடிப்பு

    • எல்லை பகுதியில் தமிழக மீனவர்கள் மீன்பிடித்தாலும், இலங்கை கடற்படை எங்களை வேண்டுமென்றே கைது செய்கிறது.
    • ஒரு விசைப்படகு மற்றும் 5 மீனவர்களை கைது செய்த இலங்கை கடற்படையினர், கைது செய்யப்பட்ட படகின் அருகே மீன்பிடித்த எங்களை குச்சியால் ஆளுக்கு 5 அடி அடித்தார்கள்.

    அறந்தாங்கி:

    புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம், ஜெகதாப்பட்டினம், மீமிசல் பகுதிகளில் இருந்து தினமும் 500-க்கும் மேற்பட்ட விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்கிறார்கள். அவர்களை அவ்வப்போது இலங்கை கடற்படையினர் கைது செய்து அழைத்து செல்வது வாடிக்கையாக உள்ளது.

    இந்த நிலையில் ஜெகதாப்பட்டினம் விசைப்படகு துறைமுகத்திலிருந்து நேற்று 200-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் மீன்துறை அலுவலக அனுமதியுடன் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர். அவர்கள் கரையில் இருந்து 26 நாட்டிக்கல் மைல் தொலைவில் இந்திய எல்லை கடல்பகுதியான நெடுந்தீவு அருகே இன்று அதிகாலை மீன்பிடித்துக் கொண்டிருந்தனர்.

    அங்கே வந்த இலங்கை கடற்படையினர், அவர்களை சுற்றி வளைத்தனர். இதனால் பதட்டம் அடைந்த மீனவர்கள் வலைகளை சுருட்டிக்கொண்டு அங்கிருந்து புறப்பட தயாரானார்கள். ஆனால் அவர்களை மறித்த இலங்கை கடற்படையினர் இங்கு மீன்பிடிக்க கூடாது, இது எங்கள் நாட்டு எல்லை என்றனர்.

    மேலும் எல்லைதாண்டி மீன்பிடித்ததாகக்கூறி மதன் (வயது 26) என்பவருக்கு சொந்தமான விசைப்படகு மற்றும் அதில் சென்ற மகேந்திரன் (20), சத்தியராஜ் (37), மதன் (26), வசந்த் (20), மெல்லின் (24) ஆகிய 5 மீனவர்களை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்துச் சென்றனர். இன்று அவர்கள் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்படுகிறார்கள். அதன்பின்னரே மீனவர்கள் விடுதலை செய்யப்படுவார்களா அல்லது சிறையில் அடைக்கப்படுவார்களா என்பது தெரியவரும்.

    இதுகுறித்து சக மீனவர்கள் தெரிவிக்கையில், கடன் வாங்கிக் கொண்டுதான் நாங்கள் தொழிலுக்கு செல்கிறோம். ஆனால் இந்திய எல்லை பகுதியில் தமிழக மீனவர்கள் மீன்பிடித்தாலும், இலங்கை கடற்படை எங்களை வேண்டுமென்றே கைது செய்கிறது. அடித்து துன்புறுத்துகிறது. இன்று நடைபெற்ற சம்பவத்தில் ஒரு விசைப்படகு மற்றும் 5 மீனவர்களை கைது செய்த இலங்கை கடற்படையினர், கைது செய்யப்பட்ட படகின் அருகே மீன்பிடித்த எங்களை குச்சியால் ஆளுக்கு 5 அடி அடித்தார்கள்.

    மேலும் நாங்கள் பிடித்து வைத்திருந்த மீன்களையும், சமைப்பதற்காக வைத்திருந்த அரிசி, காய்கறிகளையும் பறித்து சென்றனர். இது தொடர்ந்து வாடிக்கையான நிகழ்வாகியும் வருகிறது. தொடர்ந்து இதே நிலை நீடித்தால் தமிழக மீனவர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகிவிடும்.

    எனவே மத்திய, மாநில அரசுகள் விரைந்து நடவடிக்கை மேற்கொண்டு சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களையும், படகையும் விடுவிக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×