என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    மதுரை மெட்ரோ ரெயில் சேவைக்கு திருப்பரங்குன்றத்தில் மண் பரிசோதனை பணிகள் தொடக்கம்
    X

    மெட்ரோ ரெயில் சேவைக்கு திருப்பரங்குன்றத்தில் மண் பரிசோதனை செய்யும் பணி நடந்தது.


    மதுரை மெட்ரோ ரெயில் சேவைக்கு திருப்பரங்குன்றத்தில் மண் பரிசோதனை பணிகள் தொடக்கம்

    • மாட்டுத்தாவணி, ஒத்தக்கடை வரையில் 10 இடங்களில் மெட்ரோ ரெயில் சேவை செயல்படுத்தப்பட உள்ளது.
    • பரிசோதனைக்காக எடுக்கப்படும் மண் மற்றும் பாறைகள் ஐதராபாத்தில் உள்ள பரிசோதனை மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.

    திருப்பரங்குன்றம்:

    மதுரை மாநகரில் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் தமிழக அரசு மதுரை திருமங்கலத்தில் இருந்து ஒத்தக்கடை வரை சுமார் 31 கிலோ மீட்டர் தூரத்திற்கு மெட்ரோ ரெயில் சேவை திட்டத்தை அறிவித்தது. மேலும் இதற்காக சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடரில் ரூ.8,500 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

    மெட்ரோ ரெயில் திட்டமானது மதுரை திருமங்கலத்தில் தொடங்கி திருப்பரங்குன்றம், பழங்காநத்தம், பெரியார் நிலையம், சிம்மக்கல், கோரிப்பாளையம், மாட்டுத்தாவணி, ஒத்தக்கடை வரையில் 10 இடங்களில் மெட்ரோ ரெயில் சேவை செயல்படுத்தப்பட உள்ளது.

    இதற்கான கட்டுமான பணிகள் வருகிற 2024-ம் ஆண்டு தொடங்கப்பட்டு 2027-ம் ஆண்டு பணிகள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த நிலையில் மெட்ரோ ரெயில் சேவை செய்யக்கூடிய வழித்தட பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகள், கட்டிடங்கள் என்னென்ன உள்ளன என்பது குறித்து வருவாய்த் துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர்.

    மேலும் மெட்ரோ ரெயில் பணிக்காக முதல் கட்டமாக திருப்பரங்குன்றம், திருநகர், தனக்கன்குளம் உள்ளிட்ட பகுதிகளில் அரை கிலோ மீட்டர் இடைவெளியில் சாலை ஓரத்தில் மண் பரிசோதனை செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது.

    ஒத்தக்கடை முதல் சுமார் 76 இடங்களில் பூமியில் 30 அடி ஆழத்திற்கு தோண்டப்பட்டு அப்பகுதியில் உள்ள மண்ணின் தரம் குறித்தும் ஆய்வு செய்ய மண் மற்றும் பாறைகள் மாதிரி எடுக்கப்பட்டு வருகிறது. இதில் 100-க்கும் மேற்பட்ட பொறியாளர்கள் குழுவினர் ஆய்வு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்

    பரிசோதனைக்காக எடுக்கப்படும் மண் மற்றும் பாறைகள் ஐதராபாத்தில் உள்ள பரிசோதனை மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. மதுரை மக்களின் நீண்ட கால கனவான மெட்ரோ ரெயில் திட்ட பணிகள் அறிவிக்கப்பட்டவுடன் அதற்கான திட்டப்பணிகள் விரைவாக நடைபெறுவது மக்களிடையே பெரும் மகிழ்ச்சியையும், வரவேற்பையும் பெற்றுள்ளது.

    Next Story
    ×