search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    சின்னசேலம் மாணவி மர்ம மரணம்: கண்காணிப்பு கேமரா காட்சிகள் சந்தேகங்களை ஏற்படுத்துகிறது- தாய் பேட்டி
    X

    சின்னசேலம் மாணவி மர்ம மரணம்: கண்காணிப்பு கேமரா காட்சிகள் சந்தேகங்களை ஏற்படுத்துகிறது- தாய் பேட்டி

    • மாணவி ஸ்ரீமதி எழுதியதாக கூறப்படும் கடிதம், வகுப்பறையில் அமர்ந்திருப்பது மாடிக்கு செல்லும் சி.சி.டி.வி. காட்சிகள் சி.பி.சி.ஐ.டி., விசாரணைக்கு பிறகு ஒவ்வொன்றாக கசிந்து வருகிறது.
    • மாணவி ஸ்ரீமதி தொடர்பாக மீண்டும் ஒரு சிசிடிவி காட்சி வெளியானது.

    வேப்பூர்:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே கனியாமூர் சக்தி மெட்ரிக் பள்ளி விடுதியில் தங்கி பிளஸ் 2 பயின்ற பள்ளி மாணவி ஸ்ரீமதி, கடந்த மாதம், 13-ந் தேதி மர்மமாக இறந்தார்.

    தனது மகள் இறப்பில் சந்தேகம் இருப்பதாக, ஸ்ரீமதியின் பெற்றோர் புகார் தெரிவித்து, மறியல் போராட்டங்களில் ஈடுபட்டனர். பிரேத பரிசோதனை முடிந்த பிறகும், ஸ்ரீமதியின் உடலை வாங்க மறுத்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். மாணவி இறப்புக்காக, 17-ந் தேதி நடந்த போராட்டம் பெரும் கலவரமாக மாறியது. இதில் பள்ளி, போலீஸ் வாகனங்கள் மற்றும் பள்ளியில் உள்ள ஆவணங்களுக்கு தீ வைக்கப்பட்டது.

    இந்த வழக்குகளை சிறப்பு புலனாய்வுக்குழு போலீசார் விசாரித்து வருகின்றனர். விசாரணையின்போது வெளியிடப்படாமல் ரகசியமாக வைக்கப்பட்டிருந்த, மாணவி ஸ்ரீமதி எழுதியதாக கூறப்படும் கடிதம், வகுப்பறையில் அமர்ந்திருப்பது மாடிக்கு செல்லும் சி.சி.டி.வி. காட்சிகள் சி.பி.சி.ஐ.டி., விசாரணைக்கு பிறகு ஒவ்வொன்றாக கசிந்து வருகிறது.

    நேற்று மதியம், மாணவி ஸ்ரீமதி தொடர்பாக மீண்டும் ஒரு சிசிடிவி காட்சி வெளியானது. அதில், விடுதி தரை தளத்தில் இருந்து மாணவியை, 3 பெண்கள், ஒரு ஆண் என, 4 பேர் தூக்கிச் செல்வது பதிவாகி இருந்தது. இதில், ஜூலை, 13-ந் தேதி அதிகாலை, 5.24 மணி என, நேரம் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த புதிய வீடியோ காட்சி மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    இதுகுறித்து மாணவியின் தாய் செல்வியின் வக்கீல் காசிவிஸ்வநாதன் கூறுகையில் மாணவி இறப்பு தொடர்பாக வீடியோவை பிட்டு பிட்டாக வெளியிடுவது ஏன், இந்த சம்பவம் தொடர்பாக வீடியோவை காவல் துறை முழுமையாக வெளியிட்டால் சந்தேகங்கள் தீர்ந்து விடும் என்றார்.

    இதுகுறித்து ஸ்ரீமதியின் தாய் செல்வி கூறியதாவது:-

    சி.சி.டி.வி. காட்சி பொய்யான தகவல். இதனை பள்ளி நிர்வாகம் கடந்த மாதம் 13-ந் தேதியே காண்பித்திருக்கலாம். 13-ந் தேதி பள்ளியில் காட்டப்பட்ட சிசிடிவி காட்சி. ஒரு நிமிடம் காண்பித்து உள்ளார்கள். அதில் தூக்கி செல்வது போல் காட்சிகள் இல்லை. இதனை யார்? வெளியிட்டுக் கொண்டிருக்கிறார்கள் என தெரியவில்லை.

    இன்று காண்பித்தது அப்பட்டமான பொய்யான சி.சி.டி.வி. பதிவு. ஸ்ரீமதி விழுந்த இடம் வேறு, தூக்கி செல்லும் இடம் வேறு 5.30 மணிக்கு காண்பிக்கிறார்கள். 5:30 மணிக்கு மேல் (முன்பு) இரவு நேரத்தில் சி.சி.டி.வி. பதிவு வேலை செய்யவில்லையா? பதிவு முழுமையாக இல்லையா? எத்தனை மணிக்கு விழுந்தாள்? எப்படி துடித்தாள்? எப்படி கத்தினார்? என காண்பிக்கவில்லை. வாட்ச்மேன் மண்ணாங்கட்டி பெயரை மட்டும் குறிப்பிடுகிறார்கள். மற்ற 3 பேரை குறிப்பிடவில்லை. இதன் மூலம் எங்களுக்கு சந்தேகம் ஏற்படுகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×