என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    ஏ.டி.எம்.களில் குறைவான பண இருப்பு குறித்த வதந்தி: எஸ்.பி.ஐ. வங்கி விளக்கம்
    X

    ஏ.டி.எம்.களில் குறைவான பண இருப்பு குறித்த வதந்தி: எஸ்.பி.ஐ. வங்கி விளக்கம்

    • மோசடி முயற்சிகள் நிகழாமல் தடுப்பதற்காக எமது அனைத்து ஏ.டி.எம்.களிலும் கட்டுப்பாடு அம்சங்களை புகுத்தினோம்.
    • இச்சம்பவம் குறித்து தற்போது காவல்துறை விசாரணை நடைபெற்று வருகிறது.

    சென்னை:

    தமிழ்நாட்டில் 2 ஏ.டி.எம்.களில் குறைவான பண இருப்பு என்று வெளிவந்த ஊடக செய்திகள் குறித்த உண்மை நிலையை வெளிப்படுத்த எஸ்.பி.ஐ. வங்கியின் தலைமை அலுவலகம் விளக்க அறிக்கை வெளியிட்டு உள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:

    ஏப்ரல் 8-ந்தேதியன்று, ஒரு குறிப்பிட்ட மாடல் ஏ.டி.எம். ஒன்றில் பண இருப்பு குறைவாக இருப்பதை எமது வங்கிக் கிளைகளுள் ஒன்று அடையாளம் கண்டது. அதைத் தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில் ஏப்ரல் 6-ம் தேதி இரவு மற்றும் 7-ம் தேதி அதிகாலைக்கு இடைப்பட்ட நேரத்தில் ஏ.டி.எம். எந்திரத்தின் முகப்பு கதவில் அங்கீகாரம் அளிக்கப்படாத ஊடுருவலை 2, 3 நபர்கள் அடங்கிய ஒரு கும்பல் செய்திருப்பது சி.சி.டி.வி. பதிவுகளின் மூலம் தெரிய வந்தது. அந்த மோசடிக்காரர்கள், ஏ.டி.எம். வெண்டாரின் உரிமையாளரது நம்பகமான ஆவணங்களை அனுமதியின்றி பயன்படுத்தி ஏ.டி.எம். எந்திரத்தில் புகுந்து ஏ.டி.எம். ரொக்கப்பணத்தை வழங்கும் வடிவமைப்பை மாற்றியிருக்கின்றனர் என்பது கண்டறியப்பட்டுள்ளது. பின்னர் அந்த ஏ.டி.எம். எந்திரத்திலிருந்து பணத்தை எடுப்பதற்கு பிற வங்கிகளின் பல்வேறு டெபிட் கார்டுகளை அவர்கள் பயன்படுத்தியிருக்கின்றனர். இதன் காரணமாக எந்திரம் கூடுதலாக பணத்தை வினியோகிக்கும் விளைவு ஏற்பட்டிருந்தது.

    7-ம் தேதி காலை நேரத்தில் இன்னும் ஒரு ஏ.டி.எம்.-யிலும் இதே போன்ற மோசடி முறையை பயன்படுத்தி குறைவான தொகையில் பண மோசடிக்கான முயற்சி செய்யப்பட்டிருப்பதையும் நாங்கள் ஆய்வில் கண்டறிந்தோம்.

    இத்தகைய மோசடி முயற்சிகள் நிகழாமல் தடுப்பதற்காக எமது அனைத்து ஏ.டி.எம்.களிலும் கட்டுப்பாடு அம்சங்களை புகுத்தினோம். அனுமதியில்லாமல் பாதுகாப்பான ஆவணங்களது அணுகு வசதியை பயன்படுத்தினாலும் கூட ஏ.டி.எம். வடிவமைப்புகளை மாற்ற இயலாதவாறு பாதுகாப்பை உறுதி செய்திருக்கிறோம். இச்சம்பவம் குறித்து தற்போது காவல்துறை விசாரணை நடைபெற்று வருகிறது.

    இச்சம்பவம் குறித்து விஷமிகள் பரப்பக்கூடிய வதந்திகளை நம்ப வேண்டாம் . உண்மையான தகவல்களை மட்டும் பின்பற்றுமாறு பொதுமக்களையும், எமது வாடிக்கையாளர்களையும் கேட்டுக் கொள்கிறோம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×