என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

மனம் வருந்தி மன்னிப்பு கேட்டார்- சில்மிஷத்தில் ஈடுபட்ட டீ மாஸ்டரை மன்னித்த கேரள பெண்
- பெண்ணிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டது கோவை மசக்காளி பாளையத்தை சேர்ந்த 24 வயது வாலிபர் என்பது தெரியவந்தது.
- விருதுநகரை சேர்ந்த அவர், சவுரிபாளையத்தில் டீ மாஸ்டராக பணியாற்றி வந்ததும் தெரியவந்தது.
நீலாம்பூர்:
கோவையை அடுத்த சூலுர் அருகே பிரபல தனியார் ஆஸ்பத்திரி உள்ளது. இந்த ஆஸ்பத்திரியில், கேரள மாநிலம் பாலக்காட்டை சேர்ந்த தொழில் அதிபர் ஒருவர் சிகிச்சை பெற்று வருகிறார்.
சம்பவத்தன்று அவரை பார்ப்பதற்காக அவரது உறவினரான இளம்பெண் ஒருவர் தனது தாய் மற்றும் தோழிகளுடன் வந்திருந்தார். இளம்பெண்கள் அனைவரும் யூடியூப்பர்கள்.
அப்போது ஆஸ்பத்திரியில் இருந்து வாலிபர் ஒருவர் வெளியே வந்தார். அவர் ஆஸ்பத்திரிக்கு வந்த கேரள பெண்ணிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டதாக தெரிகிறது.
இதனால் அதிர்ச்சியான அந்த பெண் கூச்சலிட்டார். இதனை கேட்டு அவருடன் வந்த மகள்கள் மற்றும் அக்கம்பக்கத்தினர் ஓடி வந்தனர். ஆட்கள் வருவதை பார்த்ததும் அந்த வாலிபர் அங்கிருந்து தப்பியோடி விட்டார்.
இதுகுறித்து அந்த பெண் சூலூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீசார் ஆஸ்பத்திரிக்கு சென்று அங்குள்ள சி.சி.டி.வி காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் சில்மிஷத்தில் ஈடுபட்ட வாலிபரின் உருவம் பதிவாகி இருந்தது.
அதனை கைப்பற்றி போலீசார் தீவிர விசாரணை நடத்தி அந்த நபரை தேடி வந்தனர்.
விசாரணையில், பெண்ணிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டது கோவை மசக்காளி பாளையத்தை சேர்ந்த 24 வயது வாலிபர் என்பது தெரியவந்தது. விருதுநகரை சேர்ந்த அவர், சவுரிபாளையத்தில் டீ மாஸ்டராக பணியாற்றி வந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் அவரை பிடித்தனர். மேலும் வாலிபர் சிக்கிய தகவல் கேரள பெண்ணுக்கு தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து அந்த பெண் போலீஸ் நிலையம் வந்து, வாலிபரிடம் பேசி அறிவுரை கூறினார். அப்போது நடந்த தவறுக்காக மனம் வருந்தி வாலிபர் மன்னிப்பு கேட்டார். அதற்கு அந்த பெண்ணும் வாலிபரின் மன்னிப்பை ஏற்றுக்கொண்டார். இதையடுத்து அந்த பெண், அவரின் குடும்ப சூழ்நிலையை கருதியும், மன்னிப்பு கேட்டதாலும், அவர் மீது வழக்கு பதிய வேண்டாம் என்றும், அறிவுரை கூறி அனுப்புமாறும் போலீசாரிடம் கேட்டு கொண்டார். இதையடுத்து போலீசார் அந்த வாலிபருக்கு அறிவுரை கூறி, எழுதி வாங்கி விட்டு அங்கிருந்து அனுப்பினர்.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் பேசும்போது, ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த உறவினரை பார்க்க மகள்களுடன் வந்தேன். அப்போது அந்த வாலிபர் என்னிடம் தவறாக செயல்பட்டார். நான் சத்தம் போட்டதால் எனது மகள்கள் அவரை பிடிக்க முயற்சித்தனர். அதற்குள் அந்த நபர் தப்பிவிட்டார். சம்பவம் குறித்து போலீசில் புகார் தெரிவித்தோம். 2 நாட்களில் போலீசார் அந்த நபரை பிடித்தனர். அவர் தன்னிடம் மன்னிப்பு கேட்டதால் அவரை மன்னித்து விட்டேன் என்றார்.






