search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    பாதுகாக்க வேண்டியது உயிர்களும் தான்... ரெயில் நிலைய கொலைகள் முடிவுக்கு வருமா?
    X

    சுவாதி - சுவேதா - சத்தியபிரியா

    பாதுகாக்க வேண்டியது உயிர்களும் தான்... ரெயில் நிலைய கொலைகள் முடிவுக்கு வருமா?

    • உன் மகளை கொன்று விட்டார்கள் என்று பரங்கிமலை ரெயில் நிலையத்தில் இருந்து பறந்து வந்த தகவலை கேட்டு பதறியடித்து கொண்டு ஓடினார் ராமலட்சுமி.
    • மாணவி சத்தியாவுடன் ரெயில் நிலையத்தில் நின்ற அவரது தோழிகள் தங்கள் கண் முன்னால் தோழி கொல்லப்பட்டதை பார்த்து பதறி போனார்கள்.

    அம்மா போய் வருகிறேன் என்று தோளில் புத்தக பையை மாட்டிக்கொண்டு தோளுக்கு மேல் வளர்ந்து நின்ற மகள் டாடா காட்டி விட்டு வழக்கம் போல் கல்லூரிக்கு புறப்பட்டு சென்றதை கண்கொட்டாமல் பார்த்து கொண்டிருந்த தாய் ராமலட்சுமி மகளின் தலை மறைந்ததும் வீட்டுக்குள் சென்று விட்டு வேலைகளில் மூழ்கினார்.

    போய் வருகிறேன் என்று சொல்லி சென்ற மகள் ஒரேயடியாக போக போகிறாள் என்பது பெற்ற மனசுக்கு தெரியவில்லை. மிடுக்கான நடையும், எடுப்பான தோற்றமும், கம்பீரமும் கொண்ட மகளும் தன்னை போல் போலீசுக்கும் தகுதியாக இருப்பாள் என்று மனசுக்குள் கணக்கு போட்டிருந்த ஏட்டு ராமலட்சுமி மகள் கல்லூரி படிப்பை படிக்கட்டும் அதன் பிறகு பார்த்து கொள்ளலாம் என்று தனக்கு தானே சமாதானமும் ஆகியிருக்கிறார்.

    ஆனால் பாழாய் போன காதல் வரும். எமன் வடிவில் சதீஷ் வருவான் என்று நினைத்து இருக்கவில்லை.

    உன் மகளை கொன்று விட்டார்கள் என்று பரங்கிமலை ரெயில் நிலையத்தில் இருந்து பறந்து வந்த தகவலை கேட்டு பதறியடித்து கொண்டு ஓடினார் ராமலட்சுமி.

    தண்டவாளத்தில் தலை துண்டித்து பிணமாகி கிடந்த மகளின் உடலை பார்த்து கதறியது அங்கிருந்த பயணிகளை மட்டுமல்ல பெண் பிள்ளைகளை வைத்திருக்கும் ஒவ்வொரு பெற்றோரையும் கண்ணீர் விட வைத்தது.

    பாவி... என் மகளை இப்படி அநியாயமாக கொன்று விட்டானே என்று கதறி துடித்த அந்த தாயை ஆறுதல்படுத்த முடியவில்லை.

    தாயை மட்டுமல்ல... அந்த சம்பவத்தை நேரில் பார்த்த ஒவ்வொருவரும் உறைந்துதான் போனார்கள்.

    எத்தனையோ இளசுகளை தினமும் பார்த்து வருகிறேன். கொஞ்சி கொஞ்சி பேசுவார்கள். ஒருவருக்கொருவர் சண்டை போட்டு கோபித்து கொள்வார்கள். அவ்வளவு தான். ரெயில் வந்ததும் போய் விடுவார்கள்.

    இப்படித்தான் தினமும் ரெயில் பயணங்களை பார்த்து வருகிறேன் என்ற அந்த ரெயில் நிலைய துப்பரவு தொழிலாளி பிரசன்ன குமாரி இப்படிப்பட்ட கொடூரனை நான் பார்த்ததில்லை. கொஞ்ச நேரமாக இருவருக்குள்ளும் வாக்குவாதம் நடந்தது.

    அந்த நேரத்தில் தாம்பரத்தில் இருந்து கடற்கரைக்கு மின்சார ரெயில் வந்தது. பிளாட்பாரத்தில் நின்ற அந்த புள்ளையை பாவி மிதித்து தண்டவாளத்தில் தள்ளுவதற்கும், ரெயில் வருவதற்கும் சரியாக இருந்தது. கண்ணிமைக்கும் நேரத்தில் எல்லாம் நடந்து முடிந்துவிட்டது.

    படுபாவி ரெண்டு அடியை கூட அடித்து தன் ஆத்திரத்தை தீர்த்து இருக்கலாம் என்றார்.

    மாணவி சத்தியாவுடன் ரெயில் நிலையத்தில் நின்ற அவரது தோழிகள் தங்கள் கண் முன்னால் தோழி கொல்லப்பட்டதை பார்த்து பதறி போனார்கள். அந்த அதிர்ச்சியில் இருந்து இன்னும் அவர்கள் மீளவில்லை.

    பார்த்தவர்களே இப்படி பரிதவிக்கும்போது பதினெட்டு ஆண்டுகள் கண்ணுக்குள் வைத்து வளர்க்கப்பட்ட செல்ல மகள் அநியாயமாக கொல்லப்பட்டதை அறிந்தால் அந்த குடும்பம் எப்படி கதறும்.

    சத்தியாவின் தந்தை மாணிக்கம் கார் ஓட்டினாலும் அவரது எண்ணம் மட்டும் எப்போதும் மகள் மீதே ஓடிக்கொண்டிருக்குமாம். தினமும் மகள் ஆசைப்பட்டு கேட்கும் பண்டங்களை எல்லாம் வாங்கி வருவாராம்.

    `அப்பா ப்ளீஸ்பா' என்று கொஞ்சும் குரலில் சாதித்து வந்த சத்தியாவை கொன்று விட்டார்களா? என் இளவரசி போய்விட்டாளா?

    தகவல் கேட்டு அந்த பாசக்கார தந்தையின் இதய துடிப்பும் நின்று போனது. பாசமான மகளையும், அன்பான கணவரையும் இழந்து இரண்டு பெண் குழந்தைகளுடன் தவிக்கிறார் பரிதாபத்துக்குரிய தாய் ராமலட்சுமி.

    ரெயில் நிலையங்களை கொலைக்களமாக மாற்றி வருவது இது முதல்முறை அல்ல. இதேபோல் தான் நுங்கம்பாக்கம் ரெயில் நிலையத்தில் பெண் என்ஜினீயரான சுவாதியை ஒருதலையாக காதலித்த ராம்குமார் என்ற வாலிபர் ரெயில் நிலைய பிளாட்பாரத்திலேயே அவரை துடிக்க துடிக்க வெட்டிக்கொன்ற சம்பவத்தை இன்னும் யாரும் மறந்து இருக்க முடியாது.

    ரெயில் நிலையங்களில் கேமராக்கள் கண்காணிப்பது நடந்த குற்றத்தை பார்க்க மட்டும் உதவும். அங்கு கண்காணிப்பு பணியில் இருக்கும் போலீசார் விழிப்புடன் இருக்க வேண்டியது அவசியம். எல்லை மீறும் இளஞ்ஜோடிகள், மணிக்கணக்கில் அமர்ந்து இருப்பவர்கள், வாக்குவாதங்களில் ஈடுபடுபவர்களை உங்களின் பாணியில் கண்டியுங்கள்.

    Next Story
    ×