என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    சென்னையில் சொத்துக்களின் விலை 20 சதவீதம் உயர்கிறது
    X

    சென்னையில் சொத்துக்களின் விலை 20 சதவீதம் உயர்கிறது

    • சென்னையில் கட்டுமான மூலப்பொருட்கள் விலை உயர்வு மட்டுமின்றி காலி இடத்தின் விலையும் பல மடங்கு உயர்ந்து விட்டது.
    • கட்டுமான செலவு அதிகரிப்பதால் சொத்தின் விலையை உயர்த்த வேண்டி உள்ளது.

    சென்னை:

    ஒவ்வொருவருக்கும் சொந்தமாக ஒரு வீடு வேண்டும் என்பது கனவாக லட்சியமாக உள்ளது. அந்த கனவை நிறைவேற்ற கடுமையாக ஒவ்வொருவரும் போராடி வருகிறார்கள்.

    சொந்தமாக வீட்டை கட்டுவதும், ஒரு திருமணத்தை நடத்துவதும் சவாலான விஷயமாகும். அதனால் தான் முன்னோர்கள் வீட்டை கட்டிப்பார், திருமணத்தை நடத்திப்பார் என்று கூறினார்கள்.

    நவீன தொழில்நுட்ப காலத்தில் கட்டி முடிக்கப்பட்ட வீடுகள் லட்சம் முதல் பல கோடி வரையில் சாதாரணமாக விலைக்கு கிடைக்கின்றன. கட்டுமான தொழிலில் ஈடுபட்டுள்ள கட்டுமானர்கள் ஆயிரக்கணக்கான வீடுகளை வானளவில் கட்டி விற்பனை செய்வதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

    அதிலும் சென்னையில் தனக்கு சொந்தமாக ஒரு வீடு இருப்பதை பலரும் பெருமையாக கருதுவதோடு வசிப்பதற்கும், பணிபுரிவதற்கும் அடிப்படையான ஒன்றாக உள்ளது. அதனால்தான் சென்னை பெருநகரத்தில் மட்டுமல்ல அதனை ஒட்டிய புறநகர் பகுதியிலும் அடுக்குமாடிகள் கொத்து கொத்தாக உருவாகி வருகின்றன.

    கட்டுமான தொழில் கொரோனா பெருந்தொற்றுக்கு முன்பு வரை நிலையாக இருந்த நிலையில் தற்போது கட்டுமானப் பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன.

    2 வருட தேக்கத்திற்கு பிறகு இத்தொழில் வளர்ச்சி இருந்த போதிலும் விலை உயர்வு விண்ணை முட்டுகிறது. கட்டுமான மூலப்பொருட்களின் விலை அனைத்தும் பல மடங்கு உயர்ந்து விட்டதால் சென்னை உள்ளிட்ட எல்லா நகரங்களிலும் அடுக்குமாடி வீடுகள் விலை உயர்ந்து விட்டன.

    கொரோனா காலத்தில் தொழில் மோசமான நிலையில் இருந்து அதன் பிறகு படிப்படியாக மீண்டு தற்போது வீடுகள் விற்பனை அமோகமாக நடந்து வருகின்றன. சென்னையில் கடந்த ஆண்டில் அடுக்குமாடி வீடுகள் கட்டும் பணி வேகமாக நடந்து இத்தொழில் அபரித வளர்ச்சியை எட்டியுள்ளது.

    சிமெண்ட், கம்பி, மணல், செங்கல், ஜல்லி, எலெக்ட்ரிக்கல் பொருட்கள், குடிநீர் குழாய் பைப்புகள் உள்ளிட்ட அனைத்து பொருட்களின் விலையும் கணிசமாக உயர்ந்துள்ளது. இதுதவிர கட்டுமான தொழிலாளர்களின் கூலியும் அதிகரித்ததால் வீடுகளின் விலை உயர்ந்தது.

    இதன் காரணமாக சென்னையில் சொத்துக்களின் விலை 10 முதல் 20 சதவிகிதம் வரை உயர்ந்து உள்ளது. காலி இடம் அல்லது பழைய வீடு மற்றும் புதிதாக கட்டி விற்கப்படுகின்ற வீடுகளின் விலை கூடியுள்ளது.

    மேலும் அதிகரித்து வரும் கட்டுமான மூலப்பொருட்களின் விலையால் சொத்துக்களின் மதிப்பு மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.

    இதுகுறித்து கட்டுமான தொழில்முனைவோர்கள் கூறும்போது இரும்பு, சிமெண்ட், தாமிர கம்பிகள், சுவிட்சுகள் ஆகியவற்றின் விலை அதிகரித்துள்ளது. இதன் காரணமாக வீட்டின் விலை உயர்த்தப்பட்டு வாடிக்கையாளர்களிடம் விற்க வேண்டிய நிலை உள்ளது.

    கடந்த 5 ஆண்டுகளுடன் ஒப்பிடும்போது, விற்கப்படாத வீடுகள் மிகக்குறைவு, சென்னையில் புதிய வீடுகள், அடுக்குமாடிகள், வில்லாக்கள் போன்றவை தேக்கம் இல்லாமல் உடனே விற்பனையாகி விடுகின்றன என்றனர்.

    இதுகுறித்து சென்னையில் உள்ள பிரபல கட்டுமான நிறுவனத்தின் தலைமை நிர்வாகி ஐயப்பன் கூறியதாவது:-

    சென்னையில் கட்டுமான மூலப்பொருட்கள் விலை உயர்வு மட்டுமின்றி காலி இடத்தின் விலையும் பல மடங்கு உயர்ந்து விட்டது. அத்துடன் தொழிலாளர்களின் கூலியும் உயர்ந்ததால் சொத்து மதிப்பு 15 சதவீதம் அதிகரித்துள்ளது.

    கொரோனாவுக்கு பிறகு கொத்தனாரின் கூலி ரூ.1000-ல் இருந்து ரூ.1,200, ரூ.1,300 வரை உயர்ந்துள்ளது. மற்ற தொழிலாளர்களுக்கும் இதே போல அதிகரித்து உள்ளது. கட்டுமான தொழிலாளர்களும் முன்பு போல முறையாக வேலை செய்வதில்லை. தமிழக தொழிலாளர்களிடம் தரமான வேலையில்லை. ஆனால் வடமாநில தொழிலாளர்களுக்கு குறைவான கூலி கொடுத்தால் வேலையை நேர்த்தியாக செய்கிறார்கள்.

    விலையேற்றத்திற்கு மற்றொரு காரணம் நகரத்திற்குள் இடங்கள் கிடைப்பது அரிதாக உள்ளது. இடப்பற்றாக்குறை ஏற்படுவதால் விலையை உயர்த்தி விடுகின்றனர். நகரின் சில முக்கிய பகுதிகளில் வீடுகள் கட்டி முடிக்க அதிக செலவாகிறது. கட்டுமான செலவு அதிகரிப்பதால் சொத்தின் விலையை உயர்த்த வேண்டி உள்ளது.

    2 வருடத்திற்கு முன்பு ஒரு சதுரடி 8 ஆயிரத்திற்கு விற்ற அடுக்குமாடி வீடுகள் தற்போது ரூ.9 ஆயிரத்தில் இருந்து ரூ.9,500 வரை விற்கப்படுகிறது. அந்த அளவிற்கு அனைத்து பொருட்களின் விலையும் உயர்ந்து விட்டது.

    இதனை கட்டுப்படுத்த சட்ட திட்ட விதிமுறையில் மாற்றங்களை கொண்டுவர வேண்டும். திட்ட அனுமதி பெறுவதற்கு 3, 4 மாதங்கள் ஆகிறது. இதனால் செலவு அதிகரிக்கிறது. எனவே திட்ட அனுமதியை விரைவாக கொடுத்தால் சொத்தின் விலையை குறைக்கலாம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த நிலையில் இந்திய ரியல் எஸ்டேட் கண்காட்சி வருகிற 17-ந்தேதி முதல் 19-ந்தேதி சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நடக்கிறது. இதனை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.

    இந்த கண்காட்சியில் 60 கட்டுமான தொழில் நிறுவனங்கள் கலந்துகொண்டு ரூ.20 லட்சம் முதல் ரூ.10 கோடி வரை மதிப்புள்ள வீடுகளை காட்சிபடுத்துகிறார்கள்.

    வில்லாக்கள், அடுக்குமாடி குடியிருப்புகள், காலி மனைகள் ஆகியவற்றை பொதுமக்கள் தேர்வு செய்யலாம். தமிழ்நாடு ரியல் எஸ்டேட் ஒழுங்கு முறை ஆணையத்திடம் அனுமதி பெற்ற திட்டங்கள் மட்டுமே இங்கு பதிவு செய்யப்படும் என்று சென்னையின் தலைவர் எஸ்.சிவகுருநாதன் தெரிவித்தார்.

    இக்கண்காட்சியையொட்டி நாளை (10-ந்தேதி) முதல் 12-ந்தேதி வரை தியாகராய நகர் விஜயா மகாலில் வீட்டு கடன் மேளா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வீடு வாங்குபவர்கள் அதிகபட்ச நிதி உதவியை பெறலாம்.

    ஸ்டேட் வங்கி, இந்தியன் வங்கி, எல்.ஐ.சி. வீட்டு வசதி நிதி நிறுவனம், எச்.டி.எப்.சி., கனரா வங்கி உள்ளிட்ட வங்கிகள் இதில் பங்கேற்கின்றன. 40 ஆயிரம் பேர் கலந்து கொள்கிறார்கள். ரூ.300 கோடிக்கு வர்த்தகம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    எனவே சொத்தின் விலை உயர்வை தடுக்க கட்டுமான பொருட்கள் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும். இதே நிலை நீடித்தால் சாமான்ய மக்களின் சொந்த வீடு கனவு தகர்ந்து போகும் என்பதில் மாற்று கருத்து இல்லை.

    Next Story
    ×