search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    விருதுநகர் மாவட்டத்தில் போலீசார் அதிரடி சோதனை: ரூ.20 லட்சம் மதிப்பிலான பட்டாசுகள் பறிமுதல்
    X

    விருதுநகர் மாவட்டத்தில் போலீசார் அதிரடி சோதனை: ரூ.20 லட்சம் மதிப்பிலான பட்டாசுகள் பறிமுதல்

    • விருதுநகரை சேர்ந்த மாரீஸ்வரன் என்பவர் கடைவீதியில் அனுமதியின்றி பட்டாசுகள் தயாரித்தது தெரியவந்தது.
    • பட்டாசுகளை பறிமுதல் செய்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விருதுநகர்:

    கடந்த வாரம் சிவகாசி பட்டாசு கடையில் ஏற்பட்ட விபத்தில் 13 பேர் உயிரிழந்தனர். விசாரணையில் அந்த பட்டாசு கடை உரிய அனுமதியின்றி செயல்பட்டு வந்தது தெரியவந்தது. இதையடுத்து விருதுநகர் மாவட்டத்தில் உரிய அனுமதியில்லாமல் செயல்பட்டு வரும் பட்டாசு கடைகளை கண்டறிந்து நடவடிக்கை எடுக்குமாறு கலெக்டர் ஜெயசீலன் உத்தரவிட்டார்.

    அதன்பேரில் விருதுநகர் மாவட்டத்தில் ரோந்து பணிகளை தீவிரப்படுத்தும்படி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாச பெருமாள் அறிவுறுத்தினார். இதையடுத்து மாவட்டம் முழுவதும் அனுமதியில்லாமல் செயல்படும் பட்டாசு கடைகளை கண்டறிந்து நடவடிக்கை எடுக்கும் பணிகளில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.

    நேற்று விருதுநகர், சிவகாசி, ராஜபாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். இதில் அனுமதியின்றியும், பாதுகாப்பில்லாமலும், ஏராளமான அட்டை பெட்டிகளில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த ரூ.20 லட்சம் மதிப்பிலான பட்டாசுகள் பறிமுதல் செய்யப்பட்டன. முதியவர் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

    சாத்தூர் மேட்டமலையை சேர்ந்த நாராயணசாமி(69) வீட்டில் உரிய அனுமதியில்லாமல் பட்டாசுகள் விற்பனைக்காக வைத்திருந்தார். சாத்தூர் டவுன் போலீசார் பட்டாசுகளை பறிமுதல் செய்து அவரை கைது செய்தனர்.

    விருதுநகரை சேர்ந்த மாரீஸ்வரன் என்பவர் கடைவீதியில் அனுமதியின்றி பட்டாசுகள் தயாரித்தது தெரியவந்தது. வச்சகாரப்பட்டி போலீசார் அவரை கைது செய்தனர். விருதுநகர் பகுதியில் நடந்த சோதனையில் சேடப்பட்டியை சேர்ந்த திருமுருகன், கண்ணன் ஆகியோரிடம் இருந்து 110 குரோஸ் கருந்திரிகளை வச்சகாரப்பட்டி போலீசார் பறிமுதல் செய்து அவரை கைது செய்தனர்.

    மேலும் திருத்தங்கல் பகுதிகளில் அனுமதியின்றி பட்டாசுகள் வைத்திருந்த கவுதம், கார்த்திகேயன், முத்துகுமார், மற்றொரு முத்துகுமார், சுந்தர், கான்ஸ்டைன், செல்வபாண்டி, தர்மர், காளியப்பன், செல்லதுரை, கணேஷ்பாபு, செல்வம் ஆகியோரிடம் இருந்து ஏராளமான அட்டை பெட்டிகளில் பட்டாசுகளை பறிமுதல் செய்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சிவகாசி பகுதியை சேர்ந்த காளிராஜ், சேதுராஜ், கணேசன், ஜெயராஜ், செல்வம், கூமாபட்டி பரத் ஆகியோரிடம் இருந்தும் லட்சக்கணக்கில் மதிப்புள்ள பட்டாசுகளை பறிமுதல் செய்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×