search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    மலைச்சாலையில் பிரேக் பழுது பின்னோக்கிச் சென்ற பஸ்சில் இருந்து குதித்து தப்பிய பயணிகள்
    X

    பிரேக் பிடிக்காமல் சென்ற பஸ் சக்கரத்தில் கற்களை வைத்துள்ள காட்சி. 

    மலைச்சாலையில் பிரேக் பழுது பின்னோக்கிச் சென்ற பஸ்சில் இருந்து குதித்து தப்பிய பயணிகள்

    • குமுளி பஸ் நிலையத்தில் இருந்து அரசு பஸ் 50க்கும் மேற்பட்ட பயணிகளுடன் மதுரைக்கு புறப்பட்டது.
    • ஏற்றமான சாலையில் பஸ் சென்று கொண்டு இருந்ததால் பிரேக் பிடிக்காமல் பஸ் பின்னோக்கி சென்றது.

    கம்பம்:

    தேனி மாவட்டம் கம்பம் அரசு போக்குவரத்துக்கழக பணிமனையில் இருந்து ஏராளமான பஸ்கள் குமுளி மலைச்சாலை, லோயர் கேம்ப், மேகமலை, ஹைவேவிஸ் உள்ளிட்ட பகுதிகளுக்கு பஸ்கள் இயக்கப்படுகின்றன. இதில் பெரும்பாலான பஸ்கள் தரமற்ற முறையில் இருப்பதால் மலைச்சாலையில் விபத்தில் சிக்கி நடுவழியில் நின்று விடுவது வாடிக்கையாக உள்ளது.

    மேலும் அரசு பஸ்களில் பெண்களுக்கு இலவசம் என்பதால் அளவுக்கு அதிகமான பயணிகள் மலைச்சாலையில் ஏற்றிச் செல்லப்படுகின்றனர். குறிப்பாக காலை மற்றும் மாலை நேரங்களில் ஒரு அரசு பஸ்சில் 100 பயணிகள் வரை செல்லும் நிலை உள்ளது. இதனால் அடிக்கடி பிரேக் பழுது உள்ளிட்ட பிரச்சினைகள் ஏற்பட்டு வருகிறது.

    இந்நிலையில் குமுளி பஸ் நிலையத்தில் இருந்து அரசு பஸ் 50க்கும் மேற்பட்ட பயணிகளுடன் மதுரைக்கு புறப்பட்டது. லோயர் கேம்ப் மலைச்சாலையில் மாதா கோவில் அருகே சென்றபோது பஸ்சில் பிரேக் பழுதானது. டிரைவர் மகாராஜன் இது குறித்து கண்டக்டர் சுதாகரிடம் தெரிவித்தார். ஏற்றமான சாலையில் பஸ் சென்று கொண்டு இருந்ததால் பிரேக் பிடிக்காமல் பஸ் பின்னோக்கி சென்றது. பஸ்சில் பிரேக் பிடிக்காதது குறித்து பயணிகளுக்கு தெரிவிக்கவே அவர்கள் அலறியடித்தவாறு பஸ்சில் இருந்து குதிக்கத் தொடங்கினர். ஆண்களும், பெண்களும் குழந்தைகளுடன் பஸ்சில் இருந்து குதித்து வெளியேறினர்.

    அதன் பிறகு சக்கரத்தின் அடியில் பெரிய கற்களைப் போட்டு நிறுத்தினர்.

    டிரைவர் உரிய நேரத்தில் பஸ்சில் ஏற்பட்ட பழுதை தெரிவித்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. மலைச்சாலைகளில் இயக்கப்படும் அரசு பஸ்களை தரமான முறையில் இயக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×