search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    பாலமேடு ஜல்லிக்கட்டில் சீறிப்பாய்ந்த காளைகள்- ஆள்மாறாட்டத்தில் ஈடுபட்ட 14 வீரர்கள் தகுதி நீக்கம்

    • நெல்லை, திண்டுக்கல், திருச்சி, ராமநாதபுரம், சிவகங்கை, தேனி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஆன்லைன் மூலம் பதிவு செய்யப்பட்டு தகுதியான காளைகள் ஜல்லிக்கட்டில் பங்கேற்றன.
    • பல காளைகள் சீறிப்பாய்ந்து வாடிவாசலில் இருந்து வெளியேறி பிடிபடாமல் சென்று பரிசுகளை தட்டிச் சென்றது.

    அலங்காநல்லூர்:

    பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகை தினத்தன்று மதுரை அவனியாபுரத்திலும், அதற்கு மறுநாள் பாலமேட்டிலும், 3-வது நாள் அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறும்.

    அதன்படி நேற்று அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. அதில் 280 மாடுபிடி வீரர்கள் கலந்து கொண்டனர். போட்டியில் 737 காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. இந்த போட்டியில் 28 காளைகளை அடக்கிய மதுரை சோலையழகுபுரத்தை சேர்ந்த விஜய் என்ற வாலிபர் முதலிடத்தை பிடித்தார்.

    அவருக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சார்பில் ரூ.7 லட்சம் மதிப்புள்ள கார் பரிசாக வழங்கப்பட்டது. இந்த போட்டியில் 17 காளைகளை அடக்கி 2-ம் இடம் பிடித்த அவனியாபுரத்தை சேர்ந்த கார்த்திக் என்ற மாடுபிடி வீரருக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சார்பில் மோட்டார் சைக்கிள் பரிசாக வழங்கப்பட்டது.

    13 காளைகளை அடக்கி 3-ம் இடம் பெற்ற விளாங்குடி பாலாஜிக்கு பசு மாடு வழங்கப்பட்டது. இதே போல் போட்டியில் சிறப்பாக விளையாடிய காத்தனேந்தல் பகுதியை சேர்ந்த காமேஷ் என்பவரின் காளை முதலிடத்தை பிடித்தது. அவருக்கு மோட்டார் சைக்கிள் பரிசாக வழங்கப்பட்டது.

    மேலும் 2-ம் இடம் பிடித்த காளையின் உரிமையாளரான வில்லாபுரம் கார்த்திக் என்பவருக்கு வாஷிங்மிஷினும், 3-ம் இடம் பிடித்த காளையின் உரிமையாளரான அவனியாபுரம் முருகனுக்கு பசுமாடும் பரிசாக வழங்கப்பட்டது.

    இந்த நிலையில் பாலமேடு மஞ்சமலைசுவாமி ஆற்று திடலில் இன்று ஜல்லிக்கட்டு போட்டி நடந்தது. போட்டி தொடங்குவதற்குமுன் மாவட்ட கலெக்டர் அனீஷ்சேகர் தலைமையில் எம்.எல்.ஏ.க்கள் வெங்கடேசன், பூமிநாதன் ஆகியோர் முன்னிலையில் மாடுபிடி வீரர்கள் மற்றும் காளை உரிமையாளர்கள், விழாக்குழுவினர் ஜல்லிக்கட்டு பாதுகாப்பு உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

    இதனை தொடர்ந்து அமைச்சர் மூர்த்தி ஜல்லிக்கட்டு போட்டியை தொடங்கி வைத்தார். முதலில் வாடிவாசலில் இருந்து கிராமத்து 7 சுவாமி காளைகள் வரிசையாக அவிழ்த்து விடப்பட்டன. அதனை வீரர்கள் யாரும் பிடிக்கவில்லை. ஆன்லைன் மூலம் பதிவு செய்த தகுதியான 900 காளைகள் மட்டுமே இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் அவிழ்த்துவிடப்பட உள்ளன.

    தொடர்ந்து நெல்லை, திண்டுக்கல், திருச்சி, ராமநாதபுரம், சிவகங்கை, தேனி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஆன்லைன் மூலம் பதிவு செய்யப்பட்டு தகுதியான காளைகள் ஜல்லிக்கட்டில் பங்கேற்றன. காளைகள் அனைத்தும் கால்நடை மருத்துவர்கள் பரிசோதனைக்கு பின் ஒன்றன் பின் ஒன்றாக வாடிவாசலில் இருந்து அவிழ்த்து விடப்பட்டது.

    மாடுபிடி வீரர்கள் ஒவ்வொரு சுற்றாக களத்தில் அனுமதிக்கப்பட்டனர். அதில் சிறப்பாக விளையாடி அதிக காளைகளை அடக்கும் வீரர்கள் தேர்வு செய்யப்பட்டு அடுத்தடுத்த சுற்றுகளில் அனுப்பப்பட்டனர்.

    அதுதவிர வாடிவாசலில் நின்று விளையாடும் சிறந்த காளைகளையும் மாவட்ட நிர்வாகம் கண்காணித்து வந்தனர். தங்கம் மற்றும் வெள்ளி நாணயம், கட்டில், பீரோ, டி.வி. உள்ளிட்ட வீட்டு உபயோக பொருட்களை பரிசாக வழங்கினர்.

    பல காளைகள் சீறிப்பாய்ந்து வாடிவாசலில் இருந்து வெளியேறி பிடிபடாமல் சென்று பரிசுகளை தட்டிச் சென்றது. மாடுபிடி வீரர்களும் சீறிப்பாய்ந்த காளைகளை அடக்கி பரிசுகளை பெற்றனர். இந்த ஆண்டு ஆன்லைன் முறைப்படி வழங்கிய டோக்கன் முறையே காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. ஜல்லிக்கட்டில் சிறப்பாக விளையாடி முதல் பரிசு பெறும் சிறந்த மாடுபிடி வீரருக்கு தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சார்பில் கார் பரிசாக வழங்கப்பட உள்ளது.

    மேலும் சிறந்த காளைக்கு முதல் பரிசாக விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கும் மோட்டார் சைக்கிள் வழங்கப்படுகிறது. சீறி பாய்ந்து வந்த காளைகளை வீரர்கள் மடக்கி பிடித்து அண்டா முதல் தங்க நாணயம் வரை பரிசாக பெற்று சென்றனர். காளைகளுக்கும், மாடுபிடி வீரர்களுக்கும் காயம் ஏற்படாதவாறு ஜல்லிக்கட்டு களத்தில் தென்னை நார் கழிவுகள் பரப்பப்பட்டு இருந்தது. பேரூராட்சி சார்பில் பார்வையாளர்கள் அமர்வதற்காக பாதுகாப்பான முறையில் காலரிகள் அமைக்கப்பட்டிருந்தது.

    மேலும் இந்த ஆண்டு அதிகமாக கேலரி அமைக்கப்பட்டு அதிகளவில் பார்வையாளர்கள் பார்க்கும் வண்ணம் தயார் செய்யப்பட்டிருந்தது. காயமடைந்த வீரர்களை ஏற்றி செல்ல ஆம்புலன்ஸ் வசதி தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

    தென்மண்டல போலீஸ் ஐ.ஜி.அஸ்ரா கார்க் மேற்பார்வையில், மதுரை சரக டி.ஐ.ஜி.பொன்னி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகள் சிவபிரசாத், பாஸ்கரன் முன்னிலையில் 8 கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள், 29 துணை சூப்பிரண்டுகள், 8 கூடுதல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகள், 82 இன்ஸ்பெக்டர்கள் உட்பட 1992 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    மேலும் பொதுமக்கள் ஜல்லிக்கட்டை பார்க்க பாலமேடு பேரூராட்சி மற்றும் விழா குழு சார்பில் ஆங்காங்கே அகன்ற திரை அமைக்கப்பட்டிருந்தது.

    இந்நிலையில் போட்டியில் சீருடை மாற்றி அணிந்து ஆள்மாறாட்டத்தில் ஈடுபட்ட 14 மாடுபிடி வீரர்கள் சிக்கினர். அவர்கள் அனைவரும் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர். மேலும் 12 மணி வரை ஜல்லிக்கட்டில் போலீஸ் இன்ஸ்பெக்டர் உள்பட 21 பேர் காயம் அடைந்தனர். அவர்களில் 4 பேர் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    நான்கு சுற்றுகள் முடிவில் 15 காளைகளை பிடித்து மணி என்பவர் முதலிடத்திலும், 11 காளைகளை பிடித்து ராஜா என்பவர் 2-வது இடத்திலும், 9 காளைகளை பிடித்து வாஞ்சிநாதன் மற்றும் அரவிந்த்ராஜ் ஆகியோர் 3-வது இடத்திலும் இருந்தனர்.

    அரவிந்த்ராஜ் காயம் காரணமாக மதுரை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

    Next Story
    ×