search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    நாமக்கல்லில் பரபரப்பை ஏற்படுத்திய ரியல் எஸ்டேட் அதிபர் கொலையில் பெயிண்டர் கைது
    X

    நாமக்கல்லில் பரபரப்பை ஏற்படுத்திய ரியல் எஸ்டேட் அதிபர் கொலையில் பெயிண்டர் கைது

    • கொலை சம்பவம் குறித்து ரியல் எஸ்டேட் அதிபர் மனைவி துர்கா நாமக்கல் போலீசில் புகார் செய்தார்.
    • தலைமறைவாக இருந்த நவீனை தனிப்படையினர் கண்டுபிடித்து கைது செய்தனர்.

    நாமக்கல்:

    நாமக்கல் திருச்சி சாலை ஜெய்நகரை சேர்ந்தவர் குமரேசன் (வயது 48). ரியஸ் எஸ்டேட் தொழில் செய்து வந்தார். இவர் கடந்த 18-ந் தேதி (திங்கட்கிழமை) இரவு சேந்தமங்கலம் சாலையில் உள்ள டாஸ்மாக் மதுபான பாரில் நண்பர்களுடன் மது குடித்து விட்டு நள்ளிரவு வீடு திரும்பி கொண்டு இருந்தார்.

    நாமக்கல்-திருச்சி சாலை பழைய கோர்ட்டு கட்டிடம் அருகே அவர் காரை நிறுத்தி இருந்ததாக கூறப்படுகிறது. அப்போது அங்கு வந்த மர்மநபர் குமரேசனின் கழுத்தில் கத்தியால் குத்தினார்.

    குமரேசனின் அலறல் சத்தம் கேட்டு அங்கு வந்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். ஆனால் 19-ந்தேதி அதிகாலை குமரேசன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

    இந்த கொலை சம்பவம் நாமக்கல் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அவரது மனைவி துர்கா மற்றும் உறவினர்கள், குமரேசன் உடலை வாங்க மறுத்து ஆஸ்பத்திரி முன்பு போராட்டம் நடத்தினர். இதையடுத்து போலீசார், கொலையாளியை கைது செய்வதாக உறுதி அளித்தனர். இந்த சமரச பேச்சுவார்த்தைக்கு பிறகு உறவினர்கள் ஆஸ்பத்திரியில் இருந்து குமரேசன் உடலை வாங்கினர்.

    இந்த கொலை சம்பவம் குறித்து அவரது மனைவி துர்கா, நாமக்கல் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரித்து வந்தனர். மேலும் 3 தனிப்படைகள் அமைத்து விசாரணை நடத்தப்பட்டது.

    இதில் குமரேசனை தீர்த்துக் கட்டிய நபர் நாமக்கல் மாவட்டம் ஜெய்நகரை சேர்ந்த பெயிண்டர் நவீன் (வயது 22) என்பது தெரியவந்தது. தலைமறைவாக இருந்த அவரை, தனிப்படையினர் கண்டுபிடித்து கைது செய்தனர்.

    அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பரபரப்பு தகவல்கள் போலீசாருக்கு கிடைத்தது.

    சம்பவத்தன்று குமரேசன் மது குடித்துவிட்டு காரை பழைய கோர்ட்டு கட்டிடம் அருகே நிறுத்தியிருந்தார். அப்போது அந்த வழியாக நவீன் சென்று கொண்டிருந்தார். அவரை, குமரேசன் சத்தம் போட்டதாக தெரிகிறது. இதனால் நவீன், குமரேசனிடம் வாக்குவாதம் செய்தார். தகராறு முற்றவே நவீன், மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து சரமாரியாக குமரேசனின் கழுத்தில் குத்தினார். இதில் அவர் பலத்த காயம் அடைந்தார். அவரது அலறல் கேட்டு அங்கு பொதுமக்கள் கூடினர். இதை கண்டதும், நவீன் அங்கிருந்து தப்பி ஓடி தலைமறைவானார் என்பது தெரியவந்தது.

    கைது செய்யப்பட்ட நவீன் நாமக்கல் அரசு ஆஸ்பத்திரியில் பரிசோதனை செய்தனர். அதில் அவருக்கு கொரோனா இல்லை என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார், அவரை நாமக்கல் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

    Next Story
    ×