search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    பஸ்கள் ஊருக்குள் வராமல் செல்வதை கண்டித்து நாங்குநேரியில் கடையடைப்பு போராட்டம்
    X

    பஸ்கள் ஊருக்குள் வராமல் செல்வதை கண்டித்து நாங்குநேரியில் கடையடைப்பு போராட்டம்

    • நாகர்கோவில் மற்றும் நெல்லை பஸ் நிலையங்களில் இருந்து ஏறும் பயணிகளிடம் முன்னதாகவே வேறு எந்த இடத்திலும் பஸ் நிற்காது என்று கண்டக்டர்கள் தெரிவித்து விடுகின்றனர்.
    • பல்வேறு கிராம மக்களும் அரசு பஸ் சேவை கிடைக்காமல் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர்.

    களக்காடு:

    நெல்லையில் இருந்து நாகர்கோவிலுக்கு செல்லும் பெரும்பாலான பஸ்கள் நாங்குநேரி ஊருக்குள் செல்லாமலும், அதேபோல் நான்கு வழிச்சாலையை ஒட்டி அமைந்துள்ள தாலுகா அலுவலக பகுதிகளில் நிற்காமலும் சென்று வருகிறது.

    இதனால் நாங்குநேரி பகுதி பொதுமக்கள் மிகுந்த சிரமம் அடைந்து வருகின்றனர். பொதுமக்களை புறக்கணித்து பஸ் நிலையத்திற்கு செல்லாமலும், புறவழிச்சாலை வழியாக அரசு அனுமதி இன்றி இடைநில்லா சேவை என்ற பெயரில் சட்ட விரோதமாகவும் அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது என்று சமூக ஆர்வலர்கள் தொடர்ந்து புகார் கூறி வருகின்றனர்.

    நாகர்கோவில் மற்றும் நெல்லை பஸ் நிலையங்களில் இருந்து ஏறும் பயணிகளிடம் முன்னதாகவே வேறு எந்த இடத்திலும் பஸ் நிற்காது என்று கண்டக்டர்கள் தெரிவித்து விடுகின்றனர். மேலும் இடைப்பட்ட ஊர்களில் உள்ள பொதுமக்களை அவர்கள் பஸ்சை நிறுத்தி ஏற்ற மறுக்கின்றனர் என்றும் அப்பகுதி மக்கள் புகார் கூறுகின்றனர்.

    மேலும் கூடுதல் கட்டணங்கள் வசூலித்து விட்டு உரிய நிறுத்தங்களில் நிறுத்தாமல் நடுவழியில் இறக்கிவிட்டு செல்வதால் அடிக்கடி டிரைவர் மற்றும் பொதுமக்கள் இடையே மோதல்கள் ஏற்பட்டு சட்டம்-ஒழுங்கு பிரச்சினைகள் வருகின்றன. இதனால் நாங்குநேரி, வள்ளியூர், பணகுடி உள்ளிட்ட சிறு நகரங்கள் மட்டுமின்றி தேசிய நெடுஞ்சாலையை யொட்டி இருக்கும் பல்வேறு கிராம மக்களும் அரசு பஸ் சேவை கிடைக்காமல் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர்.

    இதற்கு நிரந்தர தீர்வு காணவேண்டும் என பலமுறை புகார் அளித்தும் நீதிமன்ற உத்தரவுகள், வருவாய்த்துறையினருடனான சமாதான பேச்சுவார்த்தை முடிவுகள், மாவட்ட கலெக்டர் உத்தரவு ஆகிய அனைத்தும் இருந்தும், இவை எதையும் மதிக்காமல் அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் தங்கள் இஷ்டத்திற்கு வெவ்வேறு பெயர்களில் அரசு பஸ்களை கூடுதல் கட்டணங்களுடன் இயக்கி வருகின்ற னர்.

    இதனை கண்டித்தும், அரசு அனுமதி இன்றி இயங்கும் இடைநில்லா சேவை என்று இயங்கும் பஸ்களின் வழித்தடங்களை தடை செய்யவும், சட்ட விரோதமாக முறைகேட்டில் ஈடுபடும் அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் நாங்குநேரியில் இன்று கடை அடைப்பு போராட்டம் நடந்தது.

    அந்த பகுதியை சேர்ந்த வியாபாரிகள் தரப்பில் இருந்து போக்குவரத்து கழக அதிகாரிகளின் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக 100-க்கும் மேற்பட்ட கடைகள் இன்று அடைக்கப்பட்டு வியாபாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    Next Story
    ×