search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    பராமரிப்பு பணிக்காக ஊட்டி தாவரவியல் பூங்கா புல் தரை மூடப்பட்டது
    X

    பராமரிப்பு பணிக்காக ஊட்டி தாவரவியல் பூங்கா புல் தரை மூடப்பட்டது

    • கடும் வறட்சி காரணமாக பூங்காவின் முகப்பு புல் தரை வறண்டது.
    • பூங்காவுக்கு வரும் சுற்றுலா பயணிகள், புல் தரையில் நடந்து சென்றதால், புல்தரை மேலும் பாதிப்படைந்தது.

    ஊட்டி:

    சுற்றுலாவுக்கும், இயற்கை காட்சிகளுக்கும் பெயர் போன ஊர் தான் நீலகிரி.

    இங்குள்ள சுற்றுலா தலங்களை பார்வையிடுவதற்காக வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து சுற்றுலா பயணிகள் வந்த வண்ணம் இருப்பார்கள்.

    குறிப்பாக நீலகிரிக்கு வரும் அனைத்து சுற்றுலா பயணிகளும், ஊட்டி தாவரவியல் பூங்காவுக்கு சென்று விட்டு தான் ஊர் திரும்புவார்கள்.

    ஊட்டி தாவரவியல் பூங்காவில் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் மலர் செடிகள், சுற்றுலா பயணிகள் அமர்ந்து தங்களது குடும்பத்துடன் பேசி மகிழ்வதற்கு வசதியாக மிகப்பெரிய புல்தரை உள்ளிட்ட அம்சங்களும் இடம் பிடித்து இருக்கும்.

    தற்போது நீலகிரி மாவட்டம் ஊட்டி தாவரவியல் பூங்காவில் கோடை சீசன் தொடங்கி உள்ளதால் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது. கடந்த 11-ந்தேதி முதல் பூங்காவுக்கு தினசரி 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வந்து கொண்டிருப்பதாக கூறப்படுகிறது.

    வருகிற மே மாதம் மலர்க்கண்காட்சி நடைபெற உள்ளது. இதனையொட்டி பூங்காவை பொலிவுபடுத்தும் பணிகள் தொடங்கி உள்ளன.

    கடும் வறட்சி காரணமாக பூங்காவின் முகப்பு புல் தரை வறண்டது. பூங்காவுக்கு வரும் சுற்றுலா பயணிகள், புல் தரையில் நடந்து சென்றதால், புல்தரை மேலும் பாதிப்படைந்தது.

    இந்த நிலையில் புல் தரையை சீரமைக்கும் வகையில் 2 வாரங்களுக்கு புல் தரையில் நடந்து செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை விதித்து பூங்கா நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

    தற்போது புல் தரையை பராமரிக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். புல் தரைக்கு தண்ணீர் பாய்ச்சும் பணிகளும் நடைபெற்று வருகின்றன.

    பராமரிப்பு பணிகள் நிறைவு பெற்றதும் இந்த மாத இறுதியில் புல் தரையில் சுற்றுலா பயணிகள் நடந்து செல்ல அனுமதிக்கப்படுவர் என பூங்கா ஊழியர்கள் தெரிவித்தனர்.

    Next Story
    ×