search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    ஆம்னி பஸ்களில் வழக்கம்போல் அநியாய கட்டண வசூல்
    X

    ஆம்னி பஸ்களில் வழக்கம்போல் அநியாய கட்டண வசூல்

    • ஒவ்வொரு முறையும் ஆம்னி பஸ்களில் அளவுக்கு அதிகமாக கட்டணம் வசூலிக்கிறார்கள் என்ற புகார் எழும்.
    • ஆன்லைன் தளத்தில் இருப்பதை ஆதாரமாக வைத்து குறிப்பிட்ட பஸ்களை பறிமுதல் செய்ய முடியும்

    சென்னை:

    பண்டிகை மற்றும் தொடர் விடுமுறை நாட்களில் ஏராளமான மக்கள் சென்னையில் இருந்து தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்வார்கள். இதை சாதகமாக்கி ஆம்னி பஸ்களில் அநியாய கட்டண வசூல் என்பது வாடிக்கையாக நடப்பதுதான்.

    மக்கள் 4 நாள் சத்தம் போடுவார்கள். அதன் பிறகு அவர்களுடைய கவனம் திரும்பிவிடும் என்ற எண்ணம் அரசியல்வாதிகளிடம் தான் அதிகமாகவே இருக்கும். இப்போது அதே நிலைக்கு அதிகாரிகளும் வந்து விட்டது துரதிஷ்டம். என்ன தான் அரசியல்வாதிகள் ஆட்சி பொறுப்பில் இருந்தாலும் நிர்வாகத்தை சீராகவும், முறையாகவும் நடத்தி செல்ல வேண்டிய பொறுப்பு அதிகாரிகளிடம் தான் இருக்கிறது. ஆனால் இவர்களும் இப்போது அரசியல்வாதிகளை போலவே மாறிவிட்டார்கள்.

    ஒவ்வொரு முறையும் ஆம்னி பஸ்களில் அளவுக்கு அதிகமாக கட்டணம் வசூலிக்கிறார்கள் என்ற புகார் எழும். அது இரண்டு, 3 நாட்கள் பரபரப்பாக பேசப்படும். போக்குவரத்து துறை அதிகாரிகளும் அதிக கட்டணம் வசூலித்தால் பஸ் பறிமுதல் செய்யப்படும், லைசென்ஸ் ரத்து செய்யப்படும் என்றெல்லாம் பரபரப்பாக அறிவிப்பார்கள்.

    இது ஒவ்வொரு பண்டிகைக்கும் நடக்கும். பண்டிகை முடிந்ததும் மறந்து போகும். இப்போதும் புத்தாண்டுக்காக ஊர் சென்றவர்கள் திரும்பி வருகிறார்கள். மதுரையில் இருந்து சென்னைக்கு ரூ.2500, நாகர்கோவிலில் இருந்து ரூ.3500 கட்டணம் வசூலிக்கிறார்கள். அதே நேரம் இதுபற்றி ஆம்னி பஸ் தரப்பில் கேட்டால் நாங்கள் யாரையும் வலுக்கட்டாயமாக அழைக்கவில்லை. இவ்வளவு கட்டணம் போட்டு இருக்கிறோம். விருப்பம் இருந்தால் வாருங்கள், விருப்பம் இல்லை என்றால் போங்கள் என்று சர்வசாதாரணமாக சொல்லுகிறார்கள்.

    இந்த கட்டண உயர்வு என்பது ஏதோ ரகசியமாக அவர்கள் வசூலிக்கவில்லை. ஆன்லைன் தளத்திலேயே குறிப்பிட்டுள்ளார்கள். வெளிப்படையாகவே தெரிகிறது. இது தெரிந்த பிறகும் அதிகாரிகளால் ஏன் நடவடிக்கை எடுக்க முடியவில்லை? இதற்காக பஸ்சில் சென்று சோதனை நடத்த வேண்டிய அவசியமில்லை.

    ஆன்லைன் தளத்தில் இருப்பதை ஆதாரமாக வைத்து குறிப்பிட்ட பஸ்களை பறிமுதல் செய்ய முடியும். அல்லது அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியும்.

    அதேபோல் இணைய தளத்திலும் அரசு நிர்ணயித்து இருக்கும் தொகை ஒவ்வொரு ஊருக்கும் இவ்வளவுதான். இதற்கு மேல் கட்டணங்களை வெளியிட்டால் அந்த இணைய தளமும் முடக்கப்படும் என்று அரசாங்கமும் எச்சரித்தால் இந்த முறைகேடு நடக்க வாய்ப்பு இல்லை.

    திருவிழாக்களில் மட்டும் திறக்கப்படும் திடீர் கடைகளை போல பண்டிகை காலங்களில் மட்டும் ஓட்டுகின்ற பஸ்களும் இருக்கின்றன. நிரந்தரமாக தினசரி சர்வீஸ் பஸ்களும் இருக்கின்றன. அவ்வாறு தினசரி ஓடுகின்ற பஸ்களில் நிரந்தரமாக ஒரு கட்டணத்தை வைத்துள்ளார்கள். அதே நேரம் திருவிழாவுக்காக ஓட்டுபவர்கள் மனம்போல் கட்டணம் நிர்ணயிக்கிறார்கள். நேற்று புத்தாண்டு தினம்.

    சென்னையில் இருந்து வெளியூர் செல்லும் பயணிகள் மிகமிக குறைவு. எனவே நேற்று ரூ.500 கட்டணத்தில் நாகர்கோவில் வரை இயக்கி இருக்கிறார்கள். இந்த பஸ்களில் இன்று அங்கிருந்து திரும்பி வர ரூ.3500 டிக்கெட் கட்டணம் வசூலித்து இருக்கிறார்கள். இந்த வாடிக்கையும் வேடிக்கையும் தொடர் கதைதான். ஆனால் மக்களை பற்றி அதிகாரிகள் கண்டுகொள்வதில்லை.

    கடமைக்காக அவ்வப்போது சில பஸ்கள் மீது வழக்கு போடுகிறார்கள். எல்லா ஆவணங்களும் இருந்தாலும், ஏதாவது ஒரு குறையை சொல்லி அபராதம் விதிப்பதாக ஆம்னி பஸ் உரிமையாளர்கள் ஆதங்கப்படுகிறார்கள். அப்படியானால் தகுதி சான்றுகளையும் போக்குவரத்துறை அதிகாரிகள் தான் வழங்குகிறார்கள். அதே அதிகாரிகள் தான் பின்னர் குறையையும் சொல்கிறார்கள். தகுதி சான்றிதழ் வழங்கும்போது குறைகளை பார்க்காமல் விட்டது ஏன்? என்ற கேள்வி முன்வைக்கப்படுகிறது. ஆட்சியாளர்கள் அதிகாரிகள் பாராமுகத்தால் இந்த வாடிக்கையும், வேடிக்கையும் நிரந்தரமாகிவிட்டது. இதனால் சிரமப்படுவது மக்கள்தான்.

    Next Story
    ×