search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    வீட்டுக்குள் சிறுவர்களை அடைத்து வைத்த விவகாரம் குறித்து அதிகாரிகள் விசாரணை
    X

    வீட்டுக்குள் சிறுவர்களை அடைத்து வைத்த விவகாரம் குறித்து அதிகாரிகள் விசாரணை

    • பிரேமா வீட்டிற்கு சென்ற இரணியல் போலீசார் அவருடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
    • சமூக நலத்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது இந்த சம்பவம் குறித்து கலெக்டர் அலுவலகத்திற்கு தெரிவிக்கப்படும்.

    இரணியல்:

    இரணியல் அருகே உள்ள கானாங்குளத்தங்கரை என்ற இடத்தை சேர்ந்தவர் முருகன் (வயது 52). கேரளாவில் கட்டிட வேலை செய்து வருகிறார்.

    இவரது மனைவி பிரேமா (46). இவர்களுக்கு அருண் (20), அனீஸ் (18), அஜின் (15) என 3 மகன்கள் உள்ளனர். இதில் அருண் 12-ம் வகுப்பும், அனீஸ் 11-ம் வகுப்பும், அஜின் 6-ம் வகுப்பும் படித்து முடித்து உள்ளனர். இவர்களுடன் பிரேமாவின் தாயார் வசந்தா (74), அண்ணன் ஜோதி (50) ஆகியோரும் வசித்து வருகின்றனர். ஜோதி உடல் நலம் பாதிக்கப்பட்டவர். இதனால் அவருக்கு திருமணம் ஆகவில்லை.

    இந்த நிலையில் ஆத்திவிளை ஊராட்சி கவுன்சிலர் பெல்சி என்பவர் நேற்று காலை அப்பகுதியில் வரி வசூல் செய்துள்ளார். அப்போது பிரேமாவின் காம்பவுண்ட் கேட்டை தட்டி உள்ளார். ஆனால் வீட்டில் இருந்து எந்த சத்தமும் கேட்கவில்லை. காம்பவுண்ட் கேட்டும் உட்புறமாக பூட்டு போடப்பட்ட நிலையில் இருந்தது. இதனால் சந்தேகம் அடைந்த பெல்சி ஊராட்சி தலைவர் அகஸ்டினாளுக்கு தகவல் கொடுத்தார்.

    இருவரும் அந்த வீட்டிற்கு சென்று பார்த்தனர். தொடர்ந்து அப்பகுதியில் விசாரித்தபோது கொரோனாவுக்கு பின்னர் கடந்த 3 ஆண்டுகளாக பிரேமா மற்றும் முருகன் இருவரும் சேர்ந்து 3 மகன்களையும் வீட்டிற்குள் அடைத்து வைத்திருப்பதும், 3 பேரும் கடந்த 3 ஆண்டுகளாக பள்ளிக்கு செல்லாமல் இருப்பதும் தெரிய வந்தது.

    இதுகுறித்து அகஸ்டினாள் குழந்தைகள் நல உதவி மையம் 1098 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தார். தொடர்ந்து இரணியல் காவல் நிலையத்திற்கும், சுகாதார துறைக்கும் தகவல் தெரிவித்தனர். இரணியல் சப்-இன்ஸ்பெக்டர் ஜோதி தனிஸ்லாஸ் தலைமையிலான போலீசார் மற்றும் திருவிதாங்கோடு சுகாதாரத்துறை ஆய்வாளர் ராமதாஸ் உள்ளிட்டோர் சம்பவ இடம் சென்று விசாரணை நடத்தினர்.

    தகவல் அறிந்ததும் இரணியல் பேரூராட்சி தலைவி ஸ்ரீகலா முருகன், வார்டு கவுன்சிலர் சித்ரா, தக்கலை யூனியன் கவுன்சிலர் கோல்டன் மெல்பா மற்றும் ஏராளமான மக்கள் அங்கு குவிந்தனர்.

    பிரேமா வீட்டிற்கு சென்ற இரணியல் போலீசார் அவருடன் பேச்சுவார்த்தை நடத்தினர். தொடர்ந்து அவர்களுடன் குழந்தைகள் நல உதவி மைய உறுப்பினர்கள் மேகலா, சரத் ஆகியோரும் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    இதுகுறித்து சமூக நலத்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது இந்த சம்பவம் குறித்து கலெக்டர் அலுவலகத்திற்கு தெரிவிக்கப்படும். பின்னர் கலெக்டரிடம் ஆலோசனை நடத்திய பின்பு இச்சம்பவம் குறித்து முடிவு செய்யப்படும் என்றனர்.

    Next Story
    ×