என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

2 ஆண்டுகளுக்கு பின்னர் கோவையில் இருந்து இயக்கப்படும் விமானங்கள் 28 ஆக அதிகரிப்பு
- கோவை விமான நிலையத்தில் மெல்ல இயல்பு நிலை திரும்பி வருகிறது.
- கோவை உள்பட அனைத்து விமான நிலையங்களும் இயல்பு நிலைக்கு திரும்பி வருவது மகிழ்ச்சி அளிக்கிறது.
கோவை:
கோவை சர்வதேச விமான நிலையம், கோவை உள்பட சுற்றுப்புற 7 மாவட்ட மக்களுக்கு பயனளித்து வருகிறது. கொரோனா நோய் தொற்று பரவலுக்கு முன்பு ஆண்டுதோறும் 30 லட்சம் பயணிகள் விமான நிலையத்தை பயன்படுத்தி வந்தனர்.
தினமும் 33 முதல் 36 விமானங்கள் இயக்கப்பட்டு வந்தன. கொரோனா நோய்த்தொற்று பரவலுக்கு பின்னர் பயணிகள் போக்குவரத்து மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டது. சில நாட்கள் தினமும் 5 விமானங்கள் மட்டுமே இயக்கப்பட்டு வந்தன.
அந்த அளவுக்கு நிலைமை மோசமாக இருந்தது. நோய்தொற்று பரவலை கட்டுப்படுத்த தடுப்பூசி திட்டம், நோய் தடுப்பு பாதுகாப்பு வழிமுறைகள் அமல்படுத்தப்பட்டது. மத்திய, மாநில அரசுகள் எடுத்த முயற்சியின் காரணமாக நாடு முழுவதும் விமான நிலையங்களில் பயணிகளின் எண்ணிக்கை மற்றும் விமான சேவை அதிகரித்து வருகிறது.
இதேபோன்று கோவை விமான நிலையத்தில் மெல்ல இயல்பு நிலை திரும்பி வருகிறது. தினமும் இயக்கப்படும் விமானத்தின் எண்ணிக்கை, உள்நாடு மற்றும் வெளிநாட்டு போக்குவரத்து பிரிவு இரண்டையும் சேர்த்து 28 ஆக அதிகரித்துள்ளது.
கோவையில் இருந்து ஷார்ஜா, சிங்கப்பூர், டெல்லி, சென்னை, மும்பை, பெங்களூரு, ஐதராபாத், பூனே உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றது.
இதுகுறித்து தொழில்துறையினர் கூறியதாவது:-
கொரோனா நோய் தொற்று பரவல் இந்தியா மட்டுமின்றி உலக அளவில் விமான போக்குவரத்தில் மிகப்பெரிய தாக்கத்தையும் ஏற்படுத்தியது. தற்போது கோவை உள்பட அனைத்து விமான நிலையங்களும் இயல்பு நிலைக்கு திரும்பி வருவது மகிழ்ச்சி அளிக்கிறது.
மத்திய, மாநில அரசுகள் மேற்கொண்ட நடவடிக்கைகள் இதற்கு காரணமாகும். சுற்றுலா, தொழில், கல்வி, ஆன்மீக பயணம் என்பது உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக கோவை விமான நிலையத்தை பயன்படுத்தி வரும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
இதனால் அனைத்து துறைகளிலும் குறிப்பிடத்தக்க வளர்ச்சி காணப்படுகிறது. இது கோவை உள்பட ஒட்டுமொத்த கொங்கு மண்டலத்தின் கீழ் உள்ள அனைத்து மாவட்டங்களின் வளர்ச்சியிலும் மிக பெரிய அளவில் பங்களிக்கும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்.






