search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    ஆபாச வீடியோ எடுத்து மிரட்டியதால் ஈராக் சென்ற நத்தம் கூலித்தொழிலாளி தற்கொலை
    X

    சின்னையா

    ஆபாச வீடியோ எடுத்து மிரட்டியதால் ஈராக் சென்ற நத்தம் கூலித்தொழிலாளி தற்கொலை

    • தனது மனைவி மற்றும் குடும்பத்தினருடன் வீடியோ காலில் சின்னையா பேசி வந்துள்ளார்.
    • மீண்டும் மறுநாள் தனது கணவருக்கு போன் செய்தபோது அவரது செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது.

    நத்தம்:

    திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகில் உள்ள மூங்கில்பட்டியை சேர்ந்தவர் சின்னையா (45). கம்பி கட்டும் தொழிலாளி. இவருக்கு திருமணமாகி கோகிலா என்ற மனைவியும், மாரிச்செல்வம் (14), கவிவரதன் (11) ஆகிய மகன்களும், பிரணிஷா (5) என்ற மகளும் உள்ளனர். உள்ளூரில் சரிவர வேலை கிடைக்காததால் சின்னையா வெளிநாடு செல்ல முடிவு செய்தார். அதன்படி கடந்த ஆண்டு ஜூலை மாதம் தனியார் ஏஜெண்ட் மூலம் ஈராக் நாட்டில் கம்பி கட்டும் வேலைக்கு சென்றார்.

    அங்கு சென்ற பின்பு அவ்வப்போது தனது மனைவி மற்றும் குடும்பத்தினருடன் வீடியோ காலில் சின்னையா பேசி வந்துள்ளார். வேலை சற்று கடினமாக இருப்பதாகவும் இருந்தபோதும் சில மாதங்கள் இங்கு இருந்துவிட்டு பின்னர் ஊருக்கு வந்துவிடுவதாகவும் கூறியுள்ளார். அதன் பிறகு கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு தனது மனைவியிடம் சின்னையா அழுகுரலுடன் பேசியுள்ளார். மனைவி கோகிலா கேட்டபோது நான் இனிமேல் ஊருக்கு வரமுடியாது. பிள்ளைகளை நன்றாக படிக்க வைத்து ஆளாக்குமாறு கூறியுள்ளார்.

    இதனால் பதறிப்போன கோகிலா மீண்டும் அவரிடம் கேட்டபோது, தன்னை இங்குள்ள வடமாநில தொழிலாளர்கள் சிலர் ஆபாசமாக வீடியோ மற்றும் புகைப்படம் எடுத்து அதனை சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளனர். இனிமேல் நான் உயிர் வாழக்கூடாது. இந்த வீடியோவை நமது பிள்ளைகள் மற்றும் உறவினர்கள் பார்த்தால் தலைகுனிவாகி விடும் என கண்ணீர் விட்டு பேசியுள்ளார். அதற்கு மனைவி கோகிலா எது நடந்தாலும் பரவாயில்லை. நீங்கள் விடுப்பு எடுத்துக்கொண்டு சொந்த ஊருக்கு வந்துவிடுங்கள். இங்கே கிடைக்கும் வேலையை செய்துகொண்டு வாழலாம் என அவருக்கு ஆறுதல் கூறியுள்ளார்.

    பின்னர் மீண்டும் மறுநாள் தனது கணவருக்கு போன் செய்தபோது அவரது செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. இதனால் பதட்டமான கோகிலா தனது கணவருடன் வேலைக்குச் சென்ற வீரப்புலி என்பவரை தொடர்பு கொண்டு பேசினார். அப்போது அவர் கோகிலாவிடம் உனது கணவர் தூக்குப்போட்டு இறந்துவிட்டார் என கூறினார்.

    இதைக்கேட்டதும் அதிர்ச்சியடைந்த கோகிலா தனது குழந்தைகள் மற்றும் குடும்பத்தாருடன் நத்தம் மண்டல துணை வட்டாட்சியர் அண்ணாமலையிடம் மனு அளித்தார். அதில் தனது கணவர் சாவில் சந்தேகம் உள்ளது. எனவே அவரது உடலை சொந்த ஊருக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் அவரது சாவுக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்திருந்தார்.

    மனுவை பெற்றுக்கொண்ட தாசில்தார் அண்ணாமலை இதுகுறித்து மாவட்ட கலெக்டர் மற்றும் உயர் அதிகாரிகளிடம் தெரிவித்து சின்னையா உடலை தமிழகம் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

    Next Story
    ×