search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    பிரான்சில் மீட்கப்பட்ட நடராஜர் சிலை 3 மாதத்தில் கயத்தாறு கொண்டு வரப்படும்- அதிகாரிகள் தகவல்
    X

    கயத்தாறு அகிலாண்ட ஈஸ்வரியம்மன் கோவிலில் சிலை தடுப்பு பிரிவு போலீசார் ஆய்வு செய்த காட்சி.

    பிரான்சில் மீட்கப்பட்ட நடராஜர் சிலை 3 மாதத்தில் கயத்தாறு கொண்டு வரப்படும்- அதிகாரிகள் தகவல்

    • கோவிலில் நடராஜர் சிலை எந்த இடத்தில் இருந்தது? எப்படி திருட்டு போனது? என்பது தொடர்பாக கோவில் ஊழியர்கள், பக்தர்களிடம் சிலை தடுப்பு குழுவினர் விசாரித்தனர்.
    • தமிழக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு உயர் அதிகாரிகள், இந்திய தொல்லியல்துறை மூலமாக நடராஜர் சிலை ஏலமிடப்படுவதை தடுத்து நிறுத்தினர்.

    கயத்தாறு:

    தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறில் பழமை வாய்ந்த அகிலாண்ட ஈஸ்வரி சமேத கோதண்ட ராமேசுவரர் கோவில் உள்ளது.

    சிறப்பு வாய்ந்த இக்கோவிலில் இருந்த 15-ம் நூற்றாண்டை சேர்ந்த நடராஜர் சிலை உள்பட 4 சிலைகள் கடந்த 1972-ம் ஆண்டு திருட்டு போனது. இது தொடர்பாக கோவில்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி 3 சிலைகளை மீட்டனர். நடராஜர் சிலையை தேடி வந்தனர்.

    இந்நிலையில் கடந்த 16-ந் தேதி பிரான்ஸ் நாட்டின் தலைநகர் பாரீசில் ஒரு ஏல மையத்தில் நடராஜர் சிலையை ஏலமிடத் திட்டமிட்டு உள்ளதாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவுக்கு தகவல் கிடைத்தது.

    அதன்பேரில் நடத்தப்பட்ட விசாரணையில் அது கயத்தாறு கோதண்ட ராமேஸ்வரர் கோவிலில் 50 ஆண்டுகளுக்கு முன்பு திருட்டு போன நடராஜர் சிலை என்பது தெரியவந்தது.

    இதைத்தொடர்ந்து தமிழக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு உயர் அதிகாரிகள், இந்திய தொல்லியல்துறை மூலமாக நடராஜர் சிலை ஏலமிடப்படுவதை தடுத்து நிறுத்தினர். அந்தச் சிலையை இந்திய தூதரகம் மூலம் தமிழகத்திற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    இந்நிலையில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு பாலமுருகன் தலைமையில், இன்ஸ்பெக்டர் சமீர்பானு, சப்-இன்ஸ்பெக்டர் சகாய செல்வின் ஆகியார் அடங்கிய குழுவினர் நேற்று கயத்தாறு கோதண்ட ராமேசுவரர் கோவிலுக்கு வந்து ஆய்வு நடத்தினர்.

    அப்போது கோவிலில் நடராஜர் சிலை எந்த இடத்தில் இருந்தது? எப்படி திருட்டு போனது? என்பது தொடர்பாக கோவில் ஊழியர்கள், பக்தர்களிடம் சிலை தடுப்பு குழுவினர் விசாரித்தனர்.

    தொடர்ந்து பிரான்ஸ் தலைநகர் பாரீசில் கண்டுபிடிக்கப்பட்ட நடராஜர் சிலையை மீட்டு இந்திய தூதரகம் மூலம் மீட்டு 3 மாதத்தில் கயத்தாறு கோதண்ட ராமேசுவரர் கோவிலுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும் என சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.

    Next Story
    ×